இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்த உலகில் பல வித்தியாசமான நிகழ்வுகள் நடக்கின்றன. அப்படி பல நிகழ்வுகள் பெரும்பாலும் ஊடகங்களின் வெளிச்சத்திற்கே வருவதில்லை. சில சமயங்களில், சில நிகழ்வுகள் உலகையே பயங்கரமாக தாக்கும், அப்படி இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் 220 இரட்டைக் குழந்தைகளுக்கு மேல் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் கோதினி என்கிற கிராமத்தில் வாழும் முக்கால்வாசி நபர்கள் இரட்டையர்களே! அதுமட்டுமல்லாமல், இந்த கோதினி கிராமத்தின் வரவேற்பு பலகையில் “இறைவன் வரமாக அளித்துள்ள இரட்டையர் கிராமம்” தங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதப்பட்டுள்ளது. சரித்திரம் என்பது பல மர்மங்களை தன்னிடம் கொண்டது. நம்மில் சிலர் இந்த சரித்திர கதையை கட்டுக்கதை என்று நம்புவது இல்லை. அந்த வகையில், வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாத ஒரு கிராமத்தை பற்றிதான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.


கோதினி கிராமத்தில் வாழும் இரட்டையர்கள்

வியப்பூட்டும் கோதினி கிராமம் :

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோதினி என்ற கிராமத்தை பற்றிதான் நாம் இந்த கட்டுரையில் காணப்போகிறோம். இந்த கோதினி கிராமத்தில் முஸ்லிம் மக்கள்தான் அதிக அளவில் வாழ்கின்றனர். இந்த கிராமம் ஒரு வழக்கமான கேரள கிராமத்தைப் போல காட்சியளித்தாலும், இதன் பின் ஒரு மர்மம் இருக்கிறது. இந்த கிராமத்தின் தனிப்பட்ட சிறப்பே இங்கு பிறக்கும் இரட்டை குழந்தைகள்தான். நீண்ட நாட்களாக இந்த கிராமம் குறித்து அதிகம் பேசப்பட்டாலும் ஊடகங்களில் இந்த கிராமம் குறித்து பெரிதாக செய்தி வெளியாகிவில்லை. ஒரு குடும்பத்திற்கு குறைந்தது ஒரு இரட்டை குழந்தையாவது இருக்கும். இதனை கேள்விப்படுபவர்கள், கோதினி கிராமம் வந்து அந்த ஆச்சர்யத்தை பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் சிலர் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். உலக நிலவரப்படி 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் நான்கு பேர் மட்டுமே இரட்டையர்களாய் பிறப்பார்கள். இந்தியாவில் 1000ல் ஒன்பது குழந்தைகள்தான் இரட்டையர்கள். ஆனால் இந்த கோதினி கிராமத்தில்தான் 1000ல் 45 பேர் இரட்டையர்களாய் பிறக்கின்றனர்.

கோதினி கிராம மக்களின் கருத்து :

கோதினி கிராம மக்களுக்கு, “தங்கள் கிராமத்திற்கு ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாகவும் அதனால்தான் இந்த கிராமத்தில் அதிகமாக இரட்டையர்கள் உள்ளதாகவும் நம்புகின்றனர்”. இதற்கு எடுத்துக்காட்டாக, இந்த கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவருடைய குடும்பத்தில் யாரும் இரட்டையர்கள் இல்லை. ஆனால், அவர் மகள் திருமணம் செய்து கட்டாருக்குச் செல்ல, அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதனை கண்ட தந்தைக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த கிராமத்தில் தற்போது 2000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் 400 பேர் இரட்டையர்களாக இருக்கின்றனர்.


கோதினி கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் இரட்டையர்கள்

கோதினி கிராமத்தின் முதல் ஆராய்ச்சி :

2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அறிவியல் மையம், லண்டன் மற்றும் ஜெர்மனி பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஒரு குழுவை அமைத்து கோதினி கிராமத்தின் மர்மத்துக்கு விடை காண முயன்றனர். இரட்டையர்களின் எ​ச்சிலை சேகரித்து அவற்றை டிஎன்ஏ பரிசோதனை செய்தனர். அதன்பிறகு அவர்களது ஆய்வின் முடிவை வெளியிட்டனர். அதில் கோதினியில் இரட்டையர்கள் அதிக அளவில் இருப்பதற்கு பரம்பரைதான் காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் அந்தக் கிராமத்தில் உள்ள காற்று அல்லது தண்ணீர் போன்ற பொதுவான ஏதோ ஒன்று இரட்டையர்களாகக் குழந்தைகள் பிறப்பதற்குத் தூண்டுகின்றன என்கிற எண்ணம் ஆழமாக பரவியுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் இன்னும் ஒருமித்த கருத்துக்கு வரமுடியவில்லை. இங்குள்ள இரட்டையர்களுக்கு ஏதாவது குறைபாடு இருக்கிறதா? என்றும் அவர்களைப் பெற்ற தாயின் உடலில் ஏதாவது உடற்கூறு மாறுபாடு இருக்கிறதா? என்றும் ஆராயப்பட்டது. ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது.


கோதினி கிராமத்தில் ஒரே மாதிரி உடையணிந்து அலங்காரம் செய்துள்ள இரட்டை சகோதரிகள்

கோதினியை போன்றே உலகில் உள்ள மற்ற கிராமங்கள் :

தெற்கு வியட்நாமில் உள்ள ஹூங் ஹியப்றோம் என்ற பகுதியிலும், நைஜீரியாவில் உள்ள இக்போ ஓரா என்ற பகுதியிலும், பிரேசிலில் உள்ள காண்டிடோ கோடாய் என்ற பகுதியிலும் அதிக அளவில் இரட்டையர்கள் பிறந்துள்ளனர். இதன் அறிவியல் பின்னணியை ஒரு குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. குறிப்பிட்ட ஆய்வுகளுக்கு பிறகு பெண்களுக்கு அதிகமாக இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு, உள்ளூரில் விளையும் ஒருவகை கிழங்குதான் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதுகுறித்த ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Updated On 1 July 2024 6:24 PM GMT
ராணி

ராணி

Next Story