
சிக்கலில் ரோபோ சங்கர் மகள்! கைதாகிறார் ரோபோ சங்கர் மகள்? - அனைத்திற்கும் இந்திரஜா பதில்
இன்ஸ்டாகிராம், டிக்டாக் மூலம் பிரபலமான நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தின் மூலம் சினிமாவில் நடிப்பை தொடங்கினார். அந்தப் படத்தை தொடர்ந்து யூடியூபர், இன்ஃபூளூயன்சர் என அவதாரங்கள் எடுத்த இந்திரஜா, கடந்த ஆண்டு, கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அண்மையில் ஆண்குழந்தை பிறந்தது. தனது திருமண வீடியோவை பிரபல யூடியூப் சேனலுக்கு விற்ற இந்திரஜா, குழந்தை பிறந்ததிலிருந்து, குழந்தைக்கு பெயர் வைத்தது, குழந்தைக்கு என்ன என்ன பொருட்கள் வாங்குகிறார்கள் என சமூக ஊடகங்களில் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் இந்திரஜா, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 6 மாதக்குழந்தைகளின் மூளைக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளானது. 6 மாத குழந்தையை வைத்து பணம் சம்பாரிக்கிறார் இந்திரஜா என விமர்சனங்களும் எழுந்தன. மேலும் அந்த வீடியோவிற்காக இந்திரஜா கைது செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விளக்கமளித்துள்ளார் இந்திரஜா சங்கர். கைதுவரை செல்லும் அளவிற்கு அவர் அப்படி என்ன வீடியோவை வெளியிட்டார்? பின்னர் அதற்கு என்ன விளக்கம் அளித்தார் என்பது குறித்து இங்கு காணலாம்.
நடிகர் ரோபோ சங்கர் - பிகில் படத்தில் இந்திரஜா சங்கர்
இந்திரஜா சங்கர்...
‘கலக்கப்போவது யாரு’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்தான் ரோபோ சங்கர். சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நல்ல வாட்ட சாட்டமான உடல் வாகுவை கொண்ட ரோபோ சங்கர் உடல் நலம் குன்றியதால் இளைத்தும் போனார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒருவழியாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இப்போது பழைய நிலைக்கு திரும்பி நலமுடன் உள்ளார். இவரது மகள் இந்திரஜா. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள், டிக்டாக் மூலம் கவனம் ஈர்த்த இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து விளம்பரங்கள் மற்றும் டிவி சேனல்களில் அதிக வாய்ப்புகளை பெற்றார். இதற்கிடையே கார்த்திக் என்பவரை காதலித்து, கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டார். திருமணமான கையோடு உங்கள் பாண்டியம்மா என்ற யூடியூப் சேனலையும் ஆரம்பித்தார். அதில் தனது திருமண நிச்சயதார்த்தம், கல்யாணம், சீமந்தம், குழந்தைபிறப்பு என தொடர்ந்து வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
கணவர் மற்றும் குழந்தையுடன் இந்திரஜா சங்கர்
சர்ச்சையான வீடியோ...
சமீபத்தில் இந்திரஜாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதுதொடர்பான வீடியோக்களையும் யூடியூபில் பதிவிட்டிருந்தார். இந்திராஜவின் மகனுக்கு நடிகர் கமல்ஹாசன்தான் ‘நட்சத்திரன்’ என பெயரும் வைத்தார். இப்படி வாடிக்கையாக தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பகிர்ந்து வரும் இந்திரஜா, சமீபத்தில் பதிவிட்ட வீடியோ திடீர் கவனம் ஈர்த்தது. அந்த வீடியோவால் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பலரும் தெரிவித்தனர். அது அப்படி என்ன வீடியோ? இந்திரஜா தனது மகனை, குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த நிறுவனம் குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சியை தூண்டும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நிறுவனம் என கூறப்படுகிறது. அங்கு குழந்தைக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகளை வீடியோவில் பகிர்ந்துள்ளார். இதனைப்பார்த்த இணையவாசிகள், 6 மாத குழந்தைக்கு பயிற்சியா? இவர் உண்மையில் குழந்தைக்காக சென்றாரா? அல்லது புரமோஷனுக்காக சென்றாரா? தனது குழந்தையை வைத்தும் இந்திரஜா பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார் என பல விமர்சனங்களை கொட்டினர்.
ப்ளூ சட்டை மாறன் - இந்திரஜா குடும்பத்தினர்
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்...
அண்மைக்காலமாகவே ரோபோ சங்கரையும், அவரது குடும்பத்தினரையும் விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து பதிவு போட்டு வருகிறார். முன்னர், “அதாவது காலைல கோழி கூவுற காமெடி மட்டும்தான் ரோபோ சங்கருக்கு அடையாளம். மற்ற காமெடிகள் எதுவும் எடுபடாததால் சிவகார்த்திகேயன் அவரை கழற்றி விட்டார். இப்போது யூடியூப் சேனல் ஒன்று இவரை மொத்தமாக லீசுக்கு எடுத்துவிட்டது. மருமகன் முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீடியோக்களில் வருகின்றனர். கல்யாணம், வளைகாப்பு, ஷாப்பிங் என 24 மணி நேரமும் இவர்களின் அசைவை வீடியோக்களில் போட்டு அறுக்கிறார்கள். எந்த புதுப்படம் வந்தாலும் அதன் செலப்ரிட்டி ஷோவுக்கு மொத்த குடும்பத்துடன் ஆஜராகிவிடுகிறார். தற்போது இவர் தாத்தா ஆன பிறகும், இவரது பேரனை வைத்து வீடியோ போடுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் கணிசமான தொகை பெறுவதாக கூறப்படுகிறது. பணம் வருகிறது என்பதற்காக 24 மணி நேரமும் உங்கள் குடும்பத்தின் சாதாரண நிகழ்வுகளை கூட வீடியோவாக காட்டுவது கூச்சமாக இல்லையா?” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, ரோபோ சங்கர் இம்சை தாங்க முடியவில்லை எனக் கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்திரஜாவின் இந்த வீடியோவை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதில், “ரோபோ சங்கரின் ஆறுமாத பேரனின் மூளையை டெவலப் செய்ய சிறப்பு பயிற்சி” எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவை தொடர்ந்து இந்த விவகாரம் இன்னும் கவனம் பெற்றது.
தனது மகனை வைத்து பணம் சம்பாதிக்கவில்லை என இந்திரஜா விளக்கம்
6 மாத குழந்தைக்கு பயிற்சியா... இந்திரஜா விளக்கம்
வீடியோ தொடர்பாக இவ்வாறு பல விமர்சனங்கள் எழ, ‘உங்கள் பாண்டியம்மா’ என்ற தங்களது யூடியூப் பக்கத்தில் இந்திரஜாவும், அவரது கணவர் கார்த்திக்கும் விளக்க வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர். அதில் தாங்கள் குழந்தையை வைத்து எந்த பணமும் சம்பாதிக்கவில்லை எனவும், “மற்றவர்களைவிட எங்கள் குழந்தைமீது எங்களுக்கு அக்கறை உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார் இந்திரஜா. மேலும் இது ஒரு கல்விமுறையோ, பாடமோ அல்ல, நீச்சல், வரைதல் போன்று ஒரு எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிதான் என விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய இந்திரஜாவின் கணவர், “நான் படிக்கும்போது காதை தொட்டு பள்ளியில் சேர்ந்தேன். இந்திரஜா காலத்தில் ப்ளே ஸ்கூல், ப்ரீகேஜி - யூ கேஜி வந்துவிட்டது. இந்த தலைமுறையினருக்கு வலது மூளை செயல்பாட்டுத் தூண்டுதல் (Right brain functional ஸ்டிமுலேஷன்) என்ற முறை வந்துள்ளது. இந்த முறை ஜப்பான், சீனா போன்ற உலக நாடுகளிலும் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தை மத்திய அரசுதான் உருவாக்கியுள்ளது. இதற்கு பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்துள்ளார். அப்படி இருக்கையில் முதலில் மத்திய அரசு மீதுதான் வழக்குப்பதிய வேண்டும்" எனவும் விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசின் நவசேத்னா திட்டம்
மத்திய அரசு, நவசேத்னா என்ற திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 0-6 மாதங்கள், 7-12 மாதங்கள், 13-18 மாதங்கள், 19-24 மாதங்கள் மற்றும் 25-36 மாதங்கள் என வயதிற்கேற்ப பிரிவுகளும் உள்ளன. இந்த திட்டம் அங்கன்வாடிகளிலும், குழந்தை வளர்ப்பு மையங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இசை, இயக்கம், கதை சொல்லல், வெளிப்புற விளையாட்டு, பொருட்களுடன் விளையாட்டு போன்ற செயல்பாடுகள் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிறது. இந்த பாடத்திட்டம் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்டது.
