இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் 2006ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா பாட்டியா. மும்பையைச் சேர்ந்த இவர் முதலில் 2005ஆம் ஆண்டு சாந்த் சா ரோஷன் சேஹ்ரா என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டு, ஸ்ரீ என்ற தெலுங்கு படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார் தமன்னா. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைவருடனும் நடித்து வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். இவருடைய நடனத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அதனாலேயே பெரும்பாலான சினிமா விருது நிகழ்ச்சிகளில் தமன்னாவின் நடனம் இடம்பெற்றிருக்கும்.


`கேடி’ திரைப்படத்தில் தமன்னா

கடந்த சில ஆண்டுகளில் தமிழில் மார்க்கெட் குறைந்துவிடவே பாலிவுட் பக்கம் திரும்பினார். பாலிவுட்டை அடுத்து தற்போது ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 போன்ற வெப் சீரிஸ்களில் முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடித்து பலரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார் தமன்னா. இதுவே சமூக ஊடங்களில் ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டது. ஏனெனில் 2010-ஆம் ஆண்டில் தமன்னா அளித்திருந்த ஒரு பேட்டியில் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.

நெருக்கமான காட்சிகளில் தமன்னா

சமீபத்திய பேட்டி ஒன்றில், உங்களுடைய 17 வருட திரை வாழ்க்கையில் நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று காண்ட்ராக்ட் போட்டுதான் நடிப்பீர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் லஸ்ட் ஸ்டோரி 2- இல் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு உங்களை தூண்டியது எது? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “உடலுறவு என்பது அடிப்படை தேவைகளில் ஒன்று. மேலும், நான் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை என்பதும் எனது கான்ட்ராக்ட் எண்ணத்தை மாற்றியதற்கு முக்கிய காரணம். லஸ்ட் ஸ்டோரீஸ் கதையை நான் கேட்டபோது, அதில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது” என்று கூறியிருக்கிறார்.


நெருக்கமான காட்சிகளில்...

இதற்கு முன்பே கடந்த ஆண்டு பாலிவுட் படம் ஒன்றில் நெருக்கமான குளியலறைக் காட்சிகளில் தமன்னா நடித்திருந்தார். அப்போது, பொதுவாக ஆண் நடிகர்கள், அந்தரங்க காட்சிகளில் நடிப்பதில் தயக்கம் காட்டுவதாகவும், நடிகைகளைவிட அவர்களே பதட்டமாக இருப்பதாகவும் தான் உணர்வதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னுடன் நடிக்கும் பெண் நடிகைகள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து அவர்கள் சங்கடப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

தமன்னாவும் தனிப்பாடலும்

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் ‘காவாலயா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது. அருண்ராஜா காமராஜின் வரிகளுக்கு அனிருத் இசைக்க, சில்பா ராவ் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஹாட்டான மூவ்மெண்ட்ஸ் போட்டிருக்கும் தமன்னாவின் நடனத்துக்கு ரீல்ஸ் செய்து இணையத்தையே தெறிக்கவிட்டனர். இது உலகளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்த நடனம் என்றே சொல்லலாம். ஜெயிலர் படத்தில் ஒரு நடிகையாகவே தமன்னா நடித்திருக்கிறார். தமன்னாவை பார்க்கத்தான் ஜெயிலர் படமே பார்த்ததாக ரசிகர்கள் பலரும் சொல்வது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் தமன்னா நடித்திருக்கும் இந்த திரைப்படத்தால் அவருக்கு ரசிகர்கள் மேலும் அதிகரித்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.


`காவாலா’ மற்றும் ‘மோகம்’ தனிப்பாடல்களில்...

இதற்கு முன்பே பான் இந்தியா ஹிட்டடித்த கே.ஜி.எஃப் -1 படத்தில் தமன்னா தனிப்பாடல் ஒன்றில் ஆடியிருந்தார். அந்த பாடல் கே.ஜி.எஃப் - 1 தமிழில் ‘மோகம்’ என்ற பெயரில் வெளியானது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என்றில்லாமல் வெப் தொடர்களிலும் நடித்துவரும் தமன்னா, ஏன் தனிப்பாடல்களில் ஆடுகிறார்? என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். அதற்கு அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்வதாகவும், அதனாலேயே நெருக்கமான காட்சிகள் மற்றும் தனிப்பாடல்களில் நடிப்பதாகக் கூறியிருக்கிறார்.

தனிப்பாடல்களில் நடித்த முன்னணி நடிகைகள்

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகைகள் பல தசாப்தங்களாகவே தனிப்பாடல்களில் ஆடிவருகின்றனர். நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்தபோதே, சிவகாசி, சிவாஜி மற்றும் எதிர்நீச்சல் போன்ற படங்களில் சோலோ சாங்கிற்கு குத்தாட்டம் போட்டார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், தனிப்பாடல்களில் ஆடுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல், கடந்த ஆண்டு, பான் இந்தியா படமான புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா’ பாடலில் மாஸாக ஆடி இந்திய அளவில் ரசிகர்களை பெற்றார் சமந்தா.


சோலோ பாடல்களில் சமந்தா மற்றும் நயன்தாரா

அதற்கு முன்பே, சிம்ரன், மீனா, பல்லவி, ரோஜா, கிரண், ரம்யா கிருஷ்ணன், மாளவிகா, சாயிஷா உட்பட பல நடிகைகளும் இதுபோன்று சோலோ பாடல்களில் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது. மார்க்கெட்டை இழந்ததால் சோலோ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மார்க்கெட்டை பிடித்த நடிகைகளும் உண்டு. இதனால் சிலர் வாய்ப்புகளை இழந்ததும் உண்டு.

காதலில் விழுந்த தமன்னா!

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் வெப் தொடரான லஸ்ட் ஸ்டோரீஸ் 2-இல் இணைந்து நெருக்கமான காட்சிகளில் நடித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, இருவரும் தங்களது காதலை உறுதிப்படுத்தினர். விஜய் வர்மாவுடன் இயல்பான உறவு ஏற்பட்டதாகவும், அவர்தான் தன்னுடைய ‘ஹேப்பி ப்ளேஸ்’ என்றும், ‘வாழ்க்கையின் ஹீரோ’ என்றும் கூறி ரசிகர்ளை உற்சாகப்படுத்தினார் தமன்னா.


காதலன் விஜய் வர்மாவுடன் தமன்னா

காதலை உறுதிப்படுத்தினாலும் ரசிகர்கள் விடுவார்களா என்ன? எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள்? என்ற கேள்வியை முன்வைத்த வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் தனது காதலனின் தாயாரும், அதாவது தமன்னாவின் வருங்கால மாமியாரும் இதே கேள்வியை கேட்பதால், அவர்களின் ஆசையை உடனடியாக நிறைவேற்றும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் தமன்னா. கூடிய விரைவில் தமன்னாவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 21 Aug 2023 6:42 PM GMT
ராணி

ராணி

Next Story