
கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ஹிந்தி பிக்பாஸிற்கு சென்று பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தவர் ஸ்ருதிகா. ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஹா ஹா ஹாசினிப்போல எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ஸ்ருதிகா இம்மாதம் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர்குறித்த நம்மில் பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
படங்களில் நடித்தபோது ஸ்ருதிகா
ஸ்ருதிகா அர்ஜுன்...
செப்டம்பர் 17, 1987 அன்று சிவசங்கர் மற்றும் கல்பனா தம்பதியினருக்கு பிறந்தவர் நடிகை ஸ்ருதிகா. மறைந்த பன்முக நடிகர் தேங்காய் சீனிவாசனின் மகன்வழி பேத்திதான் ஸ்ருதிகா. நடிகர் தேங்காய் சீனிவாசனின் தந்தை ராஜவேலு முதலியாரும் நடிகர்தான். இப்படி திரைக்குடும்பத்தில் பிறந்த ஸ்ருதிகா முதன்முதலில் தமிழில் அறிமுகமான படம் ‘ஸ்ரீ’. கடந்த 2002ஆம் வெளியான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். சூர்யாவுடனான முதல் படத்தை தொடர்ந்து ஆல்பம் என்ற படத்திலும் நடித்தார். பின்னர் மாதவனுக்கு முறைபெண்ணாக ‘நள தமயந்தி’ படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, ‘ஸ்வப்னம் கொண்டு துலாபாரம்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் ஸ்ருதிகா. ஸ்ருதிகா நடித்த ஒரே மலையாளப் படமும் இதுதான். இறுதியாக 2003ஆம் ஆண்டில் வெளியான ‘தித்திக்குதே’ படம்தான் ஸ்ருதிகா நடித்த கடைசிப்படம். இப்படம் ஸ்ருதிகாவுக்கு கொஞ்சம் பிரபலத்தை தேடி கொடுத்தது என்றேக் கூறலாம். ஸ்ருதிகா நடித்த மற்ற படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளிலேயே திரைத்துறைக்கு முழுக்கு போட்ட ஸ்ருதிகா, தொடர்ந்து தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். படிப்பிற்கு பின் திருமணம், குழந்தை, பிஸினஸ் என செட்டில் ஆன இவர், கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, பிரபல தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகா
2022ல் நடைபெற்ற அந்த சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, டைட்டில் வின்னரும் ஆனார். தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு 2கே கிட்ஸ் மத்தியிலும் பிரபலமடைந்தார். படங்கள் மூலம் பிரபலமடையாத ஸ்ருதிகா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அப்போது ஸ்ருதிகா பிக்பாஸில் கலந்துகொள்ளப் போகிறார் எனக்கூறப்பட்டது. தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த அதே நேரத்தில் ஹிந்தியிலும் பிக்பாஸ் 18 வது சீசன் ஆரம்பித்தது. ஸ்ருதிகா தமிழ் பிக்பாஸில் கலந்துகொள்ளப் போகிறார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பலரும் எதிர்பார்க்காதவாறு ஹிந்தி நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இதன்மூலம் தென்னிந்தியாவிலிருந்து ஹிந்தி பிக்பாஸில் நுழைந்த முதல் பிரபலம் என்ற பெருமையையும் பெற்றார். தமிழிலிருந்து ஹிந்தி பிக்பாஸுக்கு சென்ற ஸ்ருதிகாவுக்கு முதிலில் போதிய வரவேற்பு இல்லை. விளையாட்டுத்தனமான அவரின் நடத்தைகளை பார்த்த ஹிந்தி ரசிகர்கள் பலரும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். நடிக்கிறார் என கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அப்போது தென்னிந்திய ரசிகர்கள் பலரும் ஸ்ருதிகாவிற்கு ஆதரவாக நின்றனர். பின்னர் தனது கலகல, இயல்பான பேச்சால் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தார் ஸ்ருதிகா. குறிப்பாக சல்மான் கானே ஹிந்தி பிக்பாஸில் வியந்து பார்த்த ஒரு போட்டியாளர் என்றால் அது ஸ்ருதிகாதான். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் தமிழ் பெண்ணும் ஸ்ருதிகாதான். இவர் அந்நிகழ்ச்சியில் ஃபைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி வாரங்களில் எலிமினேட் ஆனார். அதன்பிறகு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், யூடியூப் சேனல்களின் பேட்டிகளிலும் அவரது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருக்கிறார்.
ஸ்ருதிகா - அர்ஜுன் திருமண புகைப்படம்
திருமணம்...
கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே ஃபேஸ்புக் மூலமாக அர்ஜுன் என்பவரை காதலித்து குடும்பத்தார் சம்மதத்தோடு தனது 22 வயதில் திருமணம் செய்து கொண்டார் ஸ்ருதிகா. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் ஸ்ருதிகா செய்யும் சேட்டையை அர்ஜுன் பொறுத்துக்கொண்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். என்னதான் வெளியில் விளையாட்டாக பேசிக்கொண்டாலும் இருவரும் ஒருவருக்கொருவர் அதீத அன்பு வைத்திருப்பர். பல இடங்களில் ஸ்ருதிகா, அர்ஜுன் குறித்து உருக்கமாக பேசியிருப்பார். இந்தாண்டு அவர்களின் திருமண நாளின்போதுக்கூட அர்ஜுன் குறித்து பெருமையாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பார் ஸ்ருதிகா. அதுபோல ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்ருதிகா சென்றிருந்தபோது, நேர்காணல்களில் பேசிய அர்ஜுன் அவரை அதிகம் மிஸ் செய்வதாக கூறியிருந்தார். மேலும் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டும்தான் இருவரும் பிரிந்து இருந்ததாகவும், இதுபோல நீண்ட நாட்கள் பிரிந்து இருந்தது இல்லை எனவும் உருக்கமாக பேசியிருப்பார். அதுபோல அர்ஜுன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று ஸ்ருதிகாவை பார்த்த வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலானது. மேலும் இவர்களது நேர்காணலை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இதுபோல குடும்பம், மனைவி, கணவர் அமைவது வரம் என கமெண்டுகளில் கூறுவர்.
நடிகையிலிருந்து தொழில்முனைவோர்...
சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், கடந்த 2018 ஆம் ஆண்டு, சென்னையில் ‘ஹாப்பி ஹெர்ப்ஸ்’ என்ற அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தைத் தொடங்கினார் ஸ்ருதிகா. ஸ்ருதிகாவிடம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரது சருமம் குறித்து அடிக்கடி கேட்க, அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கின்றனர். ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் உருவான இந்நிறுவனம் 2022லேயே 10 கோடி வருவாய் ஈட்டும் அளவில் வளர்ந்தது. மேலும் ‘தாரி பை ஸ்ருதிகா’ என்ற பெயரில் தனக்கென ஒரு தனி துணி பிராண்டையும் வைத்திருக்கிறார் ஸ்ருதிகா. அதன்மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுனும் பிஸினஸ் செய்துவருகிறார். அதுபோல ஸ்ருதிகாவின் தம்பி ஆதித்யாவும் ‘ஐ லவ் நெய் இட்லி’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். ஸ்ருதிகாவிற்கு கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ருத்ராட்சம் அணிந்திருக்கும் ஸ்ருதிகா அர்ஜுன்
பக்தி...
ஸ்ருதிகா அர்ஜுன் அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர் என அவரே பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் தனக்கு நடைபெற்ற ஒரு அதிசய சம்பவம் குறித்து ஸ்ருதிகாவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதுவரை யாரிடமும் இந்த ரகசியத்தை பகிர்ந்தது கிடையாது என்று சொல்லி, அந்த சம்பவத்தை அவர் விவரித்திருந்தார். "தடுப்பூசி போட்ட நாளன்று கடுமையான துன்பங்களை அனுபவித்தேன். லேசா வலி, காய்ச்சல் போன்றவைதான் இருக்கும் என்று நினைத்திருந்தபோது, சொல்லமுடியாத அளவுக்கு உச்சந்தலை முதல் பாதம்வரை உடல் முழுவதும் வலியை உணர்ந்தேன். என் உடம்பில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. அதுவரை இல்லாத அளவுக்கு படபடப்பு ஏற்பட்டது. உடலில் ஒருபகுதி உணர்வின்றி ஆனது. வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. அப்போது என் கணவரை அழைத்து, எனக்கு என்னமோ ஆகுது, எனக்கு சாக விருப்பம் இல்லை, நிறைய ஆண்டுகள் உயிருடன் வாழ ஆசைப்படுகிறேன், என்றெல்லாம் புலம்பினேன். என் பக்கத்திலேயே இரு என்று கணவர் அர்ஜுனை கேட்டுக்கொண்டேன். அந்தநேரம், விபூதி வாசனை ஏற்பட்டது. கடவுள் சிவன் அருகில் வந்து என்னை அரவணைத்தது போல் உணர்ந்தேன். உடனே என் உடல்நலம் சரியாகிவிட்டது. அதன் காரணமாகத்தான் நான் எப்போதும் கழுத்தில் ருத்ராட்சம் போட்டிருக்கிறேன்" என தெரிவித்தார்.
இயல்பான பேச்சு, வெகுளியான சிரிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென நீங்கா இடம் பிடித்துள்ள ஸ்ருதிகாவிற்கு வலிமையான இன்னொரு முகமும் உள்ளது. அதுதான் சமயோஜித புத்தி மற்றும் தொழில்பக்தி. ஸ்ருதிகாவின் இன்றைய வளர்ச்சி, ஸ்டார் அந்தஸ்து ஆகியவை அவரின் வெறும் சிரிப்பால் மட்டும் வந்தது கிடையாது, அதற்குப்பின் அவரின் கடின உழைப்பும் இருக்கிறது. இன்றைய தலைமுறை பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் ஸ்ருதிகா, இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ ராணி ஆன்லைன் சார்பாக வாழத்துகிறோம்.
