இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கஜா, ஃபெங்கால் என புயல்களின் போதும் சரி, இரண்டு கொரோனா காலக்கட்டத்திலும் சரி, ஓய்வின்றி வேலைசெய்து, எங்கு தொற்று வந்துவிடுமோ என நீங்கள் பயந்து அணிந்து தூக்கிப் போட்டிருந்த மாஸ்க் உட்பட அனைத்தையும் நாங்கள்தான் அள்ளிப்போட்டோம். அந்த மாஸ்கை தொட்டால் எங்களுக்கு தொற்று வராதா என்ன? உதிரம், மலம், சிறுநீர், சாக்கடை என நீங்கள் தொட தயங்கும் அனைத்தையும் கையால் அள்ளிப் போடுகிறோம் என கண்கள் முழுவதும் கண்ணீர் ததும்ப தங்களது வாழ்வாதாரத்தை காப்பற்ற ஆதங்கத்தோடு பேசியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள். "எங்களுக்கு அதிகமாக கொடுங்கள் என கேட்கவில்லை, இருப்பதை அப்படியே விட்டுவிடுங்கள் என்றுதான் கேட்கிறோம், ஆனால் தனியார்மயம் என்பதில் அரசு திட்டவட்டமாக இருப்பதாக" தூய்மைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கான முழுகாரணம் என்ன? போலீசார் அவர்களை கைது செய்தது ஏன்? தமிழக அரசு அவர்களுக்கு அறிவித்துள்ள புதிய திட்டங்கள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் விரிவாக காணலாம்.


போராட்டத்தினால் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள்

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஏன்?

சென்னை மாநகராட்சியில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்ற தூய்மை பணியாளர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். அதற்குக் காரணம் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்ப்பதாக இருந்தால், பணியைத் தொடங்குங்கள் இல்லை என்றால் வேலை இல்லை என்று கூறியதுதான். பெருநகராட்சியில் மண்டலம் 5 மற்றும் மண்டலம் 6 ஆகிய இரண்டு பகுதிகளை தனியார் நிறுவனமான ஆந்திராவைச் சேர்ந்த ராம்கி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது சென்னை மாநகராட்சி. இதனையடுத்து இந்த இரு மண்டலங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள், ரிப்பன் மாளிகை அருகே அமர்ந்து 13 நாட்களாக போராட்டத்தை தொடர்ந்தனர். தூய்மை பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது போல பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தற்போது 23 ஆயிரம் என இருக்கும் சம்பளத்தை 16 ஆயிரமாக குறைக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கைகள்.


ரிப்பன் மாளிகை வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்

இவற்றை முன்னிறுத்தியே 13 நாட்களாக இரவும், பகலும், மழையிலும், வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டம் பத்து நாட்களுக்குமேல் தொடர... எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் என தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அரசு தரப்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் அனைத்தும் தோல்விலேயே முடிந்தது. இதனிடையே தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாது எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதனையடுத்து ஆக.13ஆம் தேதி இரவு போராட்டக்காரர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். அந்த நள்ளிரவு கைது சம்பவத்திற்கு பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் - தூய்மை பணியாளர்கள்

தமிழ்நாட்டின் சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் தற்போது ராயப்பேட்டை, திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தனியார்வசம் சென்றால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தனியார்வசத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுத்தரப்பில் கூறப்படுவது...

பிஎஃப், இஎஸ்ஐ, போனஸ், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இன்ஸ்சூரன்ஸ் திட்டம், ஆண்டுதோறும் உடல் பரிசோதனை, 12 நாட்கள் விடுமுறை, விடுமுறை நாட்களுக்கு சேர்த்து ஊதியம், இதனுடன் தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள் கூறுவது என்ன?

ஆரம்ப காலக்கட்டத்தில் சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும், தனியார் வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த 23 ஆயிரமும் எந்த பிஎஃப், இஎஸ்ஐ என பிடிக்கப்படாமல் முழுவதாக கிடைப்பதாகவும், அதனால்தான் தங்களால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடிவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பளம் ரூ.16 ஆயிரம் என குறைக்கப்பட்டால், அதில் ரூ.2 ஆயிரம் பிஎஃப் என பிடிக்கப்படும். சென்னையில் ஆரம்ப வாடகையே ரூ.5000, அப்படி பார்த்தால் வெறும் 9 ஆயிரத்தை வைத்து பிள்ளைகளின் கல்வி செலவு, உணவு, மருத்துவ செலவுகளை எப்படி பார்ப்பது என கேள்வி எழுப்புகின்றனர். தாங்கள் தற்போது பெறும் சம்பளத்தையே கொடுத்தாலும், தனியார் நிறுவனத்திடம் தங்கள் பணிகளை ஒப்படைக்கக் கூடாது என்பதையே பிரதானமாக வலியுறுத்துகின்றனர். தனியாரிடம் சென்றால் பணிபாதுகாப்பு இருக்காது என அவர்கள் அஞ்சுகின்றனர்.

தற்போது தினக் கூலியாக ரூ.760, ரூ.600 சம்பளமாகப் பெறும் தூய்மை பணியாளர்கள் இனி தனியாரிடம் ரூ. 590 தான் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூபாய் ஆறாயிரம் முதல் ரூபாய் ஏழாயிரம் வரை இழக்கின்றனர். மேலும் பிடித்தம் செய்யப்படும் பணம் ஓய்வூதியத்திற்காகவும், இ.எஸ்.ஐக்காகவும், விபத்து காப்பீட்டுக்கும் தொழிலாளர்களுக்கே திருப்பி தரப்படும் எனக்கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு தருவதில்லை என்று தூய்மை பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோவை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் போராட்டமே உதாரணம் எனவும் கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.


தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின்போது...

எங்கு இருக்கிறது மனிதநேயம்?

மனிதனை மற்றொரு மனிதன் இழுத்துச் செல்வது மனிதநேயமற்ற செயல் என கைரிக்‌ஷாக்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் முடிந்தும் இந்த நடைமுறை தொடர்வது வேதனை அளிப்பதாகவும், தற்போதும் கைகளால் மலம் அள்ளும் கொடுமை மட்டும் தொடர்ந்துதான் வருகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஒருவரின் குப்பைகளை, கழிவுகளை மற்றொருவர் அப்புறப்படுத்த வேண்டும் என நடைமுறை மட்டும் எப்படி மனிதநேயமாகும். ஆனால் அதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஒரு ஜனநாயக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பிட்ட சமூகத்தினரே இதில் வேலை செய்கின்றனர். இந்தியாவில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய கட்டமைப்புகள்தான் இதற்கு முக்கிய காரணம். தூய்மை மற்றும்‌ கழிவுகள்‌ அகற்றுதல்‌ பணிகள் பெரும்பாலாக தலித்‌ மக்கள்‌ மீதுதான் திணிக்கப்படுகிறது. தூய்மை பணிகளில் 98% பேர் தலித் மக்கள்தான் என சமீபத்திய ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. அதற்கேற்றார் போலத்தான் அவர்கள் நடத்தப்படும் விதமும் உள்ளது. குறிப்பாக இந்த வேலையில் பெண்களே அதிகம் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் பலர் கணவரை இழந்தவர்கள் அல்லது கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலை தமிழ்நாட்டில் மாறுவது என்பது அரிதான ஒன்றே. அதேசமயம் பல நிலைகளை கடந்தே இவர்கள் ரூ. 23,000 சம்பளம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பெறும் சம்பளம் குறையும்போது, தனியாரிடம் பணிபாதுகாப்பு இல்லை என்பதை உணறும்போது இதுபோன்ற போராட்டங்கள் வெடிக்கின்றன.

சலூகைகள் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து பணியாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவை பின்வருமாறு;

  • தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது நுரையீரல் , தோல் சார்ந்த நோய் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே அது போன்ற தொழில்சார் நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் நலவாரியம் மூலம் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அவற்றுடன் கூடுதலாக 5 லட்சம் இலவச காப்பீடு செய்யப்படும். எனவே தூய்மை பணியாளர்கள் பணியின்போது உயரிழந்தால் இனி ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.
  • தூய்மை பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த சுய தொழில் தொடங்கும்போது தொழில் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3.50 லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்கப்படும். கடனை அவர்கள் முறையாக திருப்பி செலுத்தினால் 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்காக ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு.
  • தூய்மை பணியாளர் குழந்தைகளுக்கு உயர் கல்வி கட்டணச் சலுகை மட்டுமின்றி விடுதி, புத்தக கட்டணமும் வழங்கும் வகையில் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
  • நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டில் நல வாரிய உதவியுடன் வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டங்கள் மூலம் வசிப்பிடத்திலேயே வீடு கட்டித் தரப்படும். மொத்தம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித்தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
  • நகர்ப்புறங்களில் அதிகாலையில் பணிக்கு செல்வதால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலை உணவு இலவசமாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும். முதல் கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்ததை தொடர்ந்து, தூய்மை பணியாளர் சங்கத்தினர் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சுகாதார தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி ஜெயசங்கர், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து துறை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி புருசோத்தமன், தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகி ஐ. ஜெயகுமார் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் நிர்வாகி ஜி.ராமு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ். அன்புதாசன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி ஜி. சத்தியகுமார், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேஸ்திரி சங்கத்தின் நிர்வாகி முத்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ஊழியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் சந்தித்து, முதலமைச்சரிடம் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.


கைதின்போது கதறி அழுத தூய்மை பணியாளர்கள்

நாம் வசிக்கும் நகரமும், பணிபுரியும் இடங்களும் சுத்தமாகவும் அழகாகவும் இருப்பதற்காக தினமும் காலையிலேயே எழுந்து, மழை, வெயில், காற்று பாராமல் உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள். இப்படி நகரங்களை தொடர்ந்து இயங்க வைக்கும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை மற்றவர்களைவிட முன்னரே முடிந்துவிடும். காரணம் முறையான பாதுகாப்பு உபகரணங்களின்றி, நாற்றத்தில் முழு நாளும் வேலை செய்வது பல்வேறு நோய் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. இப்படி நமக்காக வேலை பார்ப்பவர்களுக்கு நன்றி கூறவிட்டாலும், அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Updated On 19 Aug 2025 12:12 AM IST
ராணி

ராணி

Next Story