இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மனித வாழ்வில் பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பு. இது அறிவியல். மனித உறுப்புகள் குறிப்பிட்ட காலம் வரைதான் இயங்கும். அதன்பின் செயலிழக்க தொடங்கும். அப்போது மரணம் நேரிடும். யாராலும் இந்த மரணத்தை தவிர்க்க முடியாது. ஆனால் பெரும்பான்மையான மக்களிடத்தில் இந்த அறிவியல், ஆன்மிகமாக, சடங்காக பார்க்கப்படுகிறது. பிறப்பையும், இறப்பையும் கொண்டாட தொடங்கியவர்கள், வாழ்வில் முன்னுரை தாலாட்டு, முடிவுரை ஒப்பாரி என ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு சடங்கை உருவாக்கினர். அதுவும் அவரவர் பின்பற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப அவரவர் சடங்குகள். நம்பிக்கை உள்ளவருக்கு மட்டுமே அது சடங்கு. மற்றவருக்கு அது நிகழ்வுதான். அப்படி அந்த நிகழ்வுக்கான சடங்கை ஒருவர் பின்பற்றவில்லை என்றால், நமக்கு என்னென்ன தோன்றுமோ அதைவைத்து மற்றவரை பேசவேண்டியது. அதுதான் காலகாலமாக இங்கு நடந்து வருகிறது. அப்படித்தான் நடிகர் ரோபோ சங்கர் மரண நிகழ்விலும் நடந்துள்ளது. ரோபோ சங்கரின் மறைவு என்பது மனைவி பிரியங்காவின் வாழ்வில் மிகத்துயரமான ஒரு நிகழ்வு. ஒருவர் சோகத்தை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். ஆனால் பலரும் அவர் நடனமாடியதை குறிப்பிட்டு, ஒரு விவாதப் பொருளாக்கி, மிக மோசமாக விமர்சித்தனர். இந்நிலையில் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகி சின்மயி, பிரியங்காவை விமர்சித்தவர்களை வெளுத்து வாங்கியுள்ளார். இதனிடையே மூடநம்பிக்கையை எல்லாம் மூட்டை கட்டி வைங்க என்று சொல்வதுபோல, இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை பாடையில் பெண்கள் மட்டுமே சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு எங்கு நடந்தது? பிரியங்காவுக்கு ஆதரவாக சின்மயி கூறிய கருத்து என்ன? என்பது குறித்து பார்ப்போம்.


நடனமாடி கணவரை வழியனுப்பிய பிரியங்கா ரோபோ சங்கர்

கணவர் சடங்கில் நடனம்...

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கடந்த செப்டம்பர் 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தின்போது ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, கண்ணீருடன் நடனமாடி தனது கணவருக்கு பிரியாவிடை கொடுத்தார். துக்கத்தை நடனம் மூலம் வெளிப்படுத்தி ரோபோ சங்கரை வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக... பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. கணவர் மரணத்தில் மனைவி எப்படி நடனம் ஆடலாம்? என ஒரு கூட்டமே இதற்கு கருத்து தெரிவிக்க ஆரம்பித்தது. இந்தநிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். பிரியங்காவுக்கு ஆதரவாக பேசிய அறந்தாங்கி நிஷா, கணவன் இறப்பில் அந்த பெண் ஆடியது தவறா? இல்லை ஒரு பெண் ஆடியதே தவறா, காதலை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்.

ஆனால் வருத்தத்தை அவர் இப்படி வெளிப்படுத்தியது எனக்கு தவறாக தெரியவில்லை. காரணம் அவங்க காதலிச்ச மேடையே ஒரு நடன மேடைதான். அந்த இறுதி பயணத்தில் தன் காதலோடு சேர்த்து தன்னுடைய நடனத்தையும் அவருக்காக கொடுத்தது என்னை பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல காதலுக்கு அழகு எனத் தெரிவித்தார். அதுபோல எஸ்.வி. சேகரும், இறுதி ஊர்வலத்தில் பிரியங்கா நடனமாடியதை விமர்சிக்கும் அருகதை யாருக்கும் இல்லை எனவும், ரோபோ சங்கரின் இழப்பால் அவர் அடைந்துள்ள வேதனையை யாரும் ஈடுசெய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். துக்கத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவருடைய மனோபாவம், அவங்க குடும்ப விஷயம் அது எனக் கூறியுள்ளார். மேலும் பலரும் நடன கலைஞர்கள் இறுதிசடங்கில் இப்படித்தான் துக்கத்தை வெளிப்படுத்துவர் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாடகி சின்மயி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட சின்மயி

சின்மயி ஆதங்கம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சின்மயி, அதில், “பொட்டு, பூ, நகை எல்லாம் பெண்கள் பிறந்தவுடன் போடுகிறார்கள். ஆனால், கல்யாணம் ஆன பிறகு அது அத்தனைக்கும் ஒரே சொந்தக்காரர் கணவர். அந்த கணவர் கிளம்பிட்டா, இந்த கலரை எல்லாம் அழித்துவிட வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த 2025ஆம் ஆண்டிலும் இந்த நடைமுறை மாறவில்லை. இதுமாதிரி நடந்தால் தயவுசெய்து வீட்டில் இருக்கும் இந்த காலத்து தலைமுறையினர் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுங்கள். வாழ்வின் கடைசிவரை இருக்கவேண்டும் என்ற நினைத்த ஒருவர் நடுவிலே இறந்துபோகும்போது, பெரிய ஆதரவே நம்மைவிட்டு போனதுபோல இருக்கும். அப்படி இருக்கும்போது அந்த பெண்ணை மீண்டும் உட்காரவைத்து பூவைத்து, பொட்டுவைத்து, வளையல் எல்லாம் போட்டு அதை மீண்டும் அழிப்பது நியாயம் இல்லை. இப்போது பலரும் முற்போக்கு சமூகம் என பேசுகிறோம். ஆனால் இன்னொரு பெரியார் பிறந்துவந்துதான் இதையெல்லாம் ஒழிக்கவேண்டுமா? சமூகத்தில் ஒரு ஆண் வந்து இதையெல்லாம் மாற்றினால்தான் அனைவரும் கேட்கின்றனர். 2025 நடக்குது. ஏஐ-யில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. இப்போது இந்த பொட்டு, தாலி, வளையல் இவற்றையெல்லாம் வைத்து சுமங்கலி என்று சொல்வதை நிறுத்தலாமே. இதுபோன்ற சடங்குகளை ஒழிக்க இதுசரியான நேரம் என நினைக்கிறேன். அரசெல்லாம் இதற்கு எதுவும் செய்யப்போவது இல்லை.


பாடையை சுமந்து செல்லும் பெண்கள்

நாம்தான் நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். விதவை சடங்குகளை இதோடு தலைமுழுகிவிட்டால் நன்றாக இருக்கும். ஆண்களுக்கு இது கிடையாது. மனைவி இறந்தால் கணவனுக்கு அடுத்த முகூர்த்தமே கல்யாணம். மனைவி இறந்தால் ஆண்கள் அனைத்து காரியங்களிலும் கலந்துகொள்ளலாம். ஆனால் கணவன் இறந்தால் மனைவி எந்த காரியத்திலும் கலந்துகொள்ள முடியாது. விதவை முன்னாடி வரக்கூடாது என சொல்வார்கள். இதையெல்லாம் நிறுத்தினால்தான் இந்த சமூகம் கொஞ்சமாவது மேம்படும். ஒருவர் சோகத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லும் அருகதை யாருக்கும் கிடையாது. சிலர் தனிமையில் சோகத்தை ஆற்றுவர். அந்த சோகத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் சிலர் வெளிப்படுத்துவர். யார் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன? அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை. ஊருக்கு நால்வர் என முன்னாடி வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போது சமூக வலைதளங்களில், ஒருவர் மனது காயமடைகிறதா? என்பது கூட தெரியாமல் நாக்குமேல் பல்லைப்போட்டு பேசுகிறீர்கள். நல்லாவா இருப்பீங்க? நல்லா இருப்பீங்களோ என்னவோ? ஆனால் தயவுசெய்து அறிவு, புத்தி, மனிதாபிமானம் எல்லாவற்றையும் வளர்த்துக்கொண்டு, ஒருவருக்கு ஒரு பேரிழப்பு நடந்தால் நல்லது சொல்லமுடியவில்லை என்றாலும் வாயை பொற்றிக்கொண்டு உட்கார்ந்திருங்கள்” என காட்டமாக பேசியுள்ளார்.

இதனிடையே மூடநம்பிக்கையை எல்லாம் மூட்டை கட்டி வைங்க என்று சொல்லுவதுபோல கோவை மாவட்டம் அன்னூர் அருகே, இறந்த மூதாட்டியின் உடலை பாடையில் சுமந்து சென்று பெண்கள் அடக்கம் செய்துள்ளனர்.

மயானம் வரை சடலத்தை சுமந்துசென்ற பெண்கள்!

வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ? என கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியிருப்பார். ஒரு கணவர் இறந்தால் அவரை தூக்கிச் செல்லும்போது உறவினர்கள் வீடுடன் நின்றுவிடுவார்கள். பெண் சுடுகாடு செல்லக்கூடாது என்பதற்காக மனைவி தெருவோடு நின்றுவிடுவார். மகன் சுடுகாடு வரை செல்வான். கடைசியில் இறந்தவர் மட்டும்தான்.

இன்று விண்வெளிக்கே பெண்கள் சென்றாலும் சுடுகாடு செல்லக்கூடாது என்ற மனநிலை இன்னும் பரவலாக உள்ளது. ஆனால் இந்த மூட நம்பிக்கையை எல்லாம் தகர்க்கும் வகையிலான சம்பவம் கோவை மாவட்டம் நல்லி செட்டிப்பாளையம் கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த நஞ்சம்மாள் என்பவர் செப்.23ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலை, அவரது மகள்கள் மற்றும் மருமகள்களே சுமந்துசென்று அடக்கம் செய்துள்ளனர்.

ஆனால் பெண்கள் மயானத்திற்கு செல்வது இது ஒன்றும் முதல்முறையல்ல. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கிராமம் உக்கம்பருத்திக்காடு. இந்த கிராமத்தில் பெரும்பாலான குடும்பங்கள், தங்கள் குடும்ப நிகழ்வுகளில் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்த்து பெரியார் கொள்கை வழியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் யாராவது இறந்தால் பெண்கள் சடலத்தை சுமந்து முன்னே சென்றால், ஆண்கள் பின்னே செல்வார்கள். எந்த நிகழ்விலும் ஆண், பெண் என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது என்ற பெரியார் கொள்கைப்படி, பெண்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்களை ஊர்வலத்திற்கு தலைமை ஏற்க வைத்து, அவர்கள் பின்னால் ஆண்கள் செல்வதாக அந்த கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

Updated On 30 Sept 2025 10:42 AM IST
ராணி

ராணி

Next Story