இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடம் டார்ஜிலிங். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே உலக புகழ்பெற்று விளங்கும் சுற்றுலாதலமான டார்ஜிலிங், மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. தேயிலை தயாரிப்பிற்கு டார்ஜிலிங் மிகவும் புகழ்பெற்றது. தேயிலை தயாரிப்பு மட்டுமில்லாமல் உலகில் மிகவும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாகவும் டார்ஜிலிங் இருக்கின்றது. இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று குதூகலத்துடன் கண்டுகளிக்க டார்ஜிலிங் சிறந்த இடமாக இருக்கும். டார்ஜிலிங் நகருக்கு எப்படி செல்வது? அங்கு சென்று பார்க்க வேண்டிய இடங்கள் என்ன? எந்த நேரத்தில் செல்லலாம்? எங்கே தங்கலாம்? உணவுகள் எங்கு நன்றாக இருக்கும்? என்பது குறித்த தகவல்களை எல்லாம் இந்த கட்டுரையில் காணலாம்.

டார்ஜிலிங் நகருக்கு எப்படி செல்வது?

டார்ஜிலிங் செல்ல திட்டமிடுபவர்கள், உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நீங்கள் முதலில் வரவேண்டிய இடம் கொல்கத்தா. கொல்கத்தாவிலிருந்து டாக்ஸி பிடித்து செல்லலாம். இல்லையென்றால் கொல்கத்தாவிலிருந்து பேருந்து வசதியும் இருக்கின்றது. பேருந்தில் செல்வதை விட டாக்ஸியில் சென்றால், போகும் வழியெங்கும் இருக்கும் இயற்கை அழகை, நம் விருப்பத்திற்கு ஏற்ப காரை நிறுத்தி ரசித்துவிட்டு செல்லலாம். ஆனால் டாக்ஸி பிடித்து செல்வதற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை செலவாகலாம்.


பூக்கள் பூத்து குலுங்கும் அழகிய லாயிட்ஸ் தாவரவியல் பூங்கா

லாயிட்ஸ் தாவரவியல் பூங்கா :

40 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பூங்கா,1878 ஆம் ஆண்டு வில்லியம் லாயிட்ஸ் என்பராவால் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த தாவரவியல் பூங்காவிற்கு கல்கத்தா தாவரவியல் பூங்கா என்றே பெயர் இருந்தது. அதன்பிறகு வில்லியம் லாயிட்ஸ் நினைவாக இந்த பூங்காவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த பூங்காவிற்குள் நுழைய நான்கு வழிகள் இருக்கின்றன. அதில் முதலாவது அயன் கேட் அல்லது லோச் நகர். இந்த வழியில் வாகனத்தில் செல்லலாம் என்றாலும் பார்க்கிங் வசதி இருக்காது. அதுமட்டுமில்லாமல் இந்த வழியில் நாம் அன்றாட பார்க்கும் பூக்களின் அணிவகுப்புகள் இருக்கும். இரண்டாவது ஸ்டாப் கேட். இதில் அங்கு வேலை செய்யும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். மூன்றாவது பாதையின் பெயர் சந்த்மாரி கேட். இந்த வழியில் மட்டுமே பார்க்கிங் வசதியுள்ளது. அதனாலேயே பெரும்பாலான மக்கள் இந்த பாதையில் வருவர். கடைசியாக மேற்கு திசையில் அமைந்துள்ள விக்டோரியா கேட். இந்த பாதையில் விஐபி-க்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பல அரிய வகை தாவரங்கள், உயிரினங்கள் நிரம்பிய இந்த பூங்கா சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை அதிகம் பெறுகிறது. அதுமட்டுமில்லாமல் டார்ஜிலிங் நகரின் மூன்றில் ஒரு பகுதி இடத்தில் இந்த தாவரவியல் பூங்காதான் அமைந்துள்ளது. அதனால் தவறாமல் இந்த இடத்தை பார்த்துவிட வேண்டும்.


கூர்க்கா ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் வார் மெமோரியல்

வார் மெமோரியல் :

தற்போது டார்ஜிலிங் அமைதி பூமியாக காட்சியளித்தாலும், பல ஆண்டுகளுக்கு முன் போர்கள் நிரம்பிவழிந்த வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. டார்ஜிலிங் நகரை பாதுகாத்த கூர்க்கா ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த வார் மெமோரியல் கட்டப்பட்டுள்ளது. பனிச்சிகரங்கள் பின்னணியில் கம்பீரமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த போர் நினைவுச்சின்னம் கட்டாயம் காண வேண்டிய இடங்களில் ஒன்று. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இடம் அற்புதமான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

கூம் மானஸ்டரி மார்க்கெட் :

இமயமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கு பல அழகிய பொருட்களை ஷாப்பிங் செய்ய விரும்புவார்கள். ஷாப்பிங் செய்வதற்கென்றே சிறந்த இடம் இந்த கூம் மானஸ்ட்ரி மார்க்கெட். இங்கு வருபவர்கள் அதிகளவில் வாங்குவது டீ தூள்கள்தான், டார்ஜிலிங் நகரத்தில் டீ மிகவும் பிரபலம் என்பதால் அனைவரும் இங்கு டீ தூள்களை வாங்கிச்செல்வர். அதன்பிறகு உடைகள், அலங்காரப் பொருட்கள் என நிறைய பொருட்களை இங்கு ஷாப்பிங் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் கம்பளி ஆடைகள், புத்தகங்கள், ஓவியங்கள், கூர்க்கா கத்தி, புத்தர் சிலைகள் என நிறைய கிடைக்கும். டார்ஜிலிங்கிற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் தவறாமல் இங்கு வந்து நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த மார்க்கெட் கூடுதல் அழகாக இருக்கும்.


பழமை வாய்ந்த கூம் மானஸ்டரி மார்க்கெட்

சிங்கலீலா தேசிய பூங்கா :

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2300 கி.மீ. உயரத்தில் அமைந்திருக்கும் அழகிய வனவிலங்கு தேசிய பூங்காதான் இந்த சிங்கலீலா பூங்கா. சிங்கலீலா மலை உச்சியில் இந்த பூங்கா அமைந்துள்ளது. நீங்கள் இந்த பூங்காவிற்கு செல்ல வேண்டுமானால் ட்ரெக்கிங் செய்துதான் இந்த இடத்தை அடைய வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பழமையான வனவிலங்கு தேசிய பூங்கா இதுவாகும். இங்கு கேம்பிங் அமைத்து தங்கும் வசதியும் இருக்கின்றது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்தான் கேம்பிங் செய்ய அனுமதிப்பார்கள். இந்த இடத்தை கண்டு ரசிக்க ஏற்ற காலமாக, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் உள்ளன. மற்ற மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் விடாமல் மழை பெய்து கொண்டே இருக்கும். அதனால் இந்த பூங்காவை நாம் முழுமையாக கண்டு ரசிக்க முடியாமல் போய்விடும்.


இந்தியாவின் பழமையான தேசிய வனவிலங்கு பூங்கா - சிங்கலீலா தேசிய பூங்கா

டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்வே :

டார்ஜிலிங் நகரின் முக்கிய சுற்றுலாதலமாக இருப்பது 'பொம்மை ரயில்' என செல்லமாக அழைக்கப்படும் டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்வேதான். குறிப்பாக மேற்கு வங்காளத்தில் ஜல்பைகுரி நகரத்தில் இருந்து டார்ஜிலிங் வரையிலான 78 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும் ரயில், இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான ரயில்களில் ஒன்றாகும். 1881ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து இயங்கும் இந்த ரயிலில் பயணிக்கையில் டார்ஜிலிங் நகரின் பேரழகை ரசிக்கலாம். இதில் ஒரே பின்னடைவு என்னவென்றால் ஏற்கனவே சீக்கிரம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த ரயிலில் பயணிக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் கடைசி நேரத்தில் இதன் டிக்கெட் விலை மிகவும் அதிகமாக இருக்கும்.


'பொம்மை ரயில்' என செல்லமாக அழைக்கப்படும் டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்

டார்ஜிலிங்கில் தங்கும் வசதி மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் :

டார்ஜிலிங் நகரம் என்றாலே அனைத்து தங்குமிடங்களும் கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். குறைந்தபட்சமே 2000 ரூபாயிலிருந்துதான் ஆரம்பிக்கும். அதனால் அதற்கு ஏற்றார்போல் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள். இருப்பினும் பட்ஜெட்டில் தங்க விரும்பினால் நகரத்தை விட்டு சற்று தள்ளியுள்ள விடுதிகளை தேர்வு செய்யலாம். உணவு வகைகள் என்று எடுத்துக் கொண்டால் இங்கு நேபாள மக்களின் உணவு கலாச்சாரம்தான் நிறைந்திருக்கும். காரமில்லாத வெறும் அவித்த உணவுகள்தான் (மோமோஸ், நூடுல்ஸ்) இருக்கும். அதனால் காரசாரமான உணவுகள் அங்கு கிடைப்பது அரிது. ஒருவேளை நீங்கள் தங்கும் விடுதியில் சமைத்து கொடுத்தால் மட்டுமே உண்டு.

Updated On 13 May 2024 6:08 PM GMT
ராணி

ராணி

Next Story