இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உண்மையில் பக்தி, ஞானம் எல்லாம் யாருக்கு வரும்? பரிகாரங்கள், வழிபாடுகள் என்ற பெயரில் இப்போதெல்லாம் செய்யப்படும் சில செயல்பாடுகள் உண்மையில் பலனைத்தருமா? அப்படியெனில் முன்னோர்கள் சொன்ன வழிபாடுகள்தான் என்ன? பரிகாரங்கள் செய்தால் பாவங்கள் நீங்குமா? போன்ற பல்வேறு ஆன்மிக கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் யோகா பேராசிரியர் மற்றும் ஜோதிடர் சந்துரு. மேற்கண்ட சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலை காணலாம்.


சாத்வீக வழிபாட்டிற்கு உதாரணம் கண்ணப்ப நாயனார் & பரிகாரம், வேண்டுதல் போன்றவை ரஜோகுண வழிபாடு

யாருக்கெல்லாம் பக்தி வரும்? யாருக்கெல்லாம் ஞானம் வரும்?

ஜோதிட ரீதியாக லக்னம்தான் முதல் இயக்கம். 12 பாவங்களில் லக்னத்திற்கு 5ம் இடம் மற்றும் 9ம் இடத்தில் சுபகிரகங்கள் இருந்தால், அவர்களுக்கு ஆன்மிகம் நன்றாக இருக்கும். ஆன்மிகத்தின் ஒவ்வொரு பகுதிகள்தான் பக்தி, ஞானம். பக்தியில் மூன்று விதமான வழிபாடுகள் இருக்கின்றன. சாத்வீக வழிபாடு, ரஜோகுண வழிபாடு, தாமச வழிபாடு. இந்த உலகத்தில் பிறந்துவிட்டோம்; அடுத்து இறைவனிடம் செல்ல வேண்டும். இறைவா எனக்கு தெரிந்ததை நான் செய்கிறேன் எனக்கூறி பூஜை, மந்திரம், அபிஷேகம், ஆராதனை என செய்வதுதான் சாத்வீகம். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதன் நோக்கம், எனக்கு எதுவும் வேண்டாம். உன்னை அடைவதுதான் நோக்கம். இதுதான் சாத்வீக வழிபாடு. இதை எப்படி செய்தாலும் இறைவன் கோபித்துக்கொள்ளமாட்டார். குளிக்க வேண்டாம், மந்திரம் தவறாக சொன்னாலும் பரவாயில்லை. ஒரே இலக்கு இறைவனை அடைவதுதான். அதனால் எப்படி செய்தாலும் அது கணக்கில்லை. கண்ணப்ப நாயனாரை இதற்கு உதாரணமாக வைத்துக் கொள்ளலாம். அடுத்த வழிபாடு ரஜோகுண வழிபாடு. இந்த வழிபாட்டைத்தான் 90% பேர் பின்பற்றுகின்றனர். இது எனக்குக் கிடைத்தால் பதிலுக்கு உனக்கு இதை செய்கிறேன் என கடவுளிடம் ஒப்பந்தம் போடுவது. இது ரஜோகுண வழிபாடு. எந்த கடவுளும் இதை செய்தால், இதை செய்கிறேன் என சொல்லவில்லை, ஒப்பந்தமும் போடவில்லை. கடவுள்களிலேயே பெருங்கடவுள், சிறுகடவுள், எல்லைக் கடவுள், சிறுதேவதைகள் என நிறைய உள்ளன.

வராகி, பிரத்தியங்கிரா போன்றவையும் நல்தெய்வம்தான். ஆனால் இப்போது அவற்றை மாந்திரீக வழிபாட்டுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். மாடன், குட்டிச்சாத்தான், குரலி, ஆள்விழுங்கி என நிறைய சிறுதேவதைகள் உள்ளன. இந்த சிறுதேவதைகளிடம் சென்று நான் இதை தருகிறேன், எனக்கு இது வேண்டும் என வேண்டிக்கொண்டு, எலுமிச்சை மாலை உள்ளிட்டவற்றை மக்கள் தெய்வத்திற்கு போடுகின்றனர். இவை அனைத்தும் ரஜோகுண வழிபாட்டில் வரும். இதுபோன்ற வழிபாடுகள் எல்லாம் ஜோதிடத்தின் மூல நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இவையெல்லாம் இப்போது இருக்கும் ஜோதிடர்கள் செய்யும் வேலை. பழங்கால மூல நூல்களில் இரண்டே பரிகாரங்கள்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று கோயில்களில் விளக்கேற்றுவது, இரண்டாவது இல்லாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவது. இதைத்தவிர வேறு எந்த பரிகாரமும் பழைய நூல்களில் சொல்லப்படவில்லை. பாகற்காயில் மாலை போடுகிறார்கள். இதுபோன்ற செயல்களை யார் தொடங்கினார்கள் என தெரியவில்லை. இதை கோயில்களில் இருக்கும் குருக்களோ, ஐயர்களோக் கூட வேண்டாம் என சொல்லத் தயங்குகிறார்கள்.


உண்மையான தவம் செய்பவருக்கு ஞானம் கிட்டும்

மேலும், காசு வெட்டிப் போடுவது, கடவுளுக்கு மிளகாயை அரைத்து காலில் பூசுவது போன்ற தாமச வழிபாடுகள் நள்ளிரவில் செய்யக்கூடியவை. ஆனால் இரவில் கோயில்நடை சாத்தப்படுவதால் பகலில் செய்கின்றனர். பொள்ளாச்சியில் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. அங்கு மிளகாய் அரைத்து பூசுவது காலம் காலமாக இருக்கிறது. வெட்டுடையா காளி, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் போன்ற இடங்களில் காசுகளை வெட்டிப் போடுகின்றனர். அந்தக் காலங்களில் நீதிமன்றத்திற்கெல்லாம் செல்லமுடியாது என்பதற்காக காளி கோயிலுக்கு சென்று, மண்ணை வாரி இறைத்து வயிறெரிந்து சாபம் விடுகிறேன் எனக்கூறுவார்கள். அப்படி சொன்னதெல்லாம் இப்போது வழிபாடாக சிலகோயில்களில் தொடர்கிறது. இது தாமச வழிபாடு. இது செய்தவர்களுக்கே திருப்பி அடிக்கும். இரண்டாவது நாம் ஒருவரால் துன்பப்படுகிறோம் என்றால் அது தெய்வத்தால் விதிக்கப்பட்டது. இன்னாரால்தான் நாம் இந்த துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பது தெய்வம் இட்டது. அப்போதுதான் நமது வினைதீரும். ஆனால் இது புரியாமல் என்னென்ன வழிமுறைகளோ புதிது புதிதாக வந்துக் கொண்டிருக்கிறது.

ஒருவர் செய்யும் தவறு அவர்களுக்கே திரும்பாதா?

கண்டிப்பாக திரும்பவரும். அவர்களின் நல்லகாலம் முடிந்து கெட்டகாலம் வரும்போது கண்டிப்பாக வரும். ஒருவருக்கு ஒருவர் கெடுதல் செய்தும் அவர்கள் பேசாமல் இருந்தால், அதற்கான தண்டனையை கடவுள் கொடுப்பார். எதிரிக்கான தண்டனையை எப்போதும் இயற்கையாக கடவுள் கொடுப்பார். 5க்கு உடைய தசாபுத்தி, 9க்கு உடைய தசாபுத்தி காலக்கட்டத்தில் அவன் என்ன தவறு செய்தாலும், அந்த தவறு வெளியே வராது. குரு ராசியை பார்த்தாலோ, லக்னத்தை பார்த்தாலோ அறிவும், ஆற்றலும் இருக்கும். அப்போது அவன் மாட்டமாட்டான். இது என்ன நியாயம் என நாம் கேட்போம். போன ஜென்மத்தில் விட்டதை இந்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள். ஆனால் அதற்கான தண்டையை இந்த ஜென்மத்தின் முடிவிலே பெற்றுவிடுவார்கள்.

அடுத்த ஜென்மத்திலும் கிடைக்கும். தப்பு செய்தவன் எந்த ஜென்மத்திலும், எந்த ரூபத்திலும் தப்ப முடியாது. தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும். உண்மையான தவம் செய்பவருக்கும் அந்த ஞானம் கிடைத்துவிடும். தவம் செய்பவர்கள் நல்லவர்களை பார்த்துதான் பயப்படுவார்கள். கெட்டவர்களை பார்த்து பயப்படமாட்டார்கள். யாருக்கும் எந்த இடையூரும் தரமாட்டார்கள். இதுபோன்ற ஆட்கள் அரிதே. 3 வழிபாடுகளில் செய்பவர்களுக்கு இது எந்த வழிபாடு எனத் தெரியாது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்வது, புத்தகங்களில் படித்தது, யூடியூபில் பார்த்ததை வைத்து வழிபாடு செய்வார்கள்.


கர்மவினை என்பதை அனைவரும் கண்டிப்பாக அனுபவிப்பார்கள் - ஜோதிடர் சந்துரு

பக்தி, வழிபாடு என செல்பவர்கள் எந்த ஜாதகக்காரர்கள்...

12 பாவங்களில் 5ஆம் இடம்தான் ஞானத்தை குறிக்கக்கூறியது. இந்த ஐந்தாம் இடமும், கேதுவும் ஜாதகத்தில் நன்றாக இருப்பவர்கள் பெரும்பாலும் உயர்ந்த ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். சுப கிரகங்களின் ஆதிக்கம் ஒரு ஜாதகத்தில் அதிகமாக இருந்தால், அவர்கள் இழிவான வேலைகளுக்கு எல்லாம் போகமாட்டார்கள். பெரும்பாலும் இதை செய்யவேண்டும் என வைராக்கியமாக ஒன்றை செய்ய வைக்கும் முதல் கிரகம் ராகு. தன் இனத்தை தானே அழிக்கக்கூடிய தன்மை ராகுக்கு உள்ளது. ஜாதகத்தில் ராகு சரியில்லாத நிலையில், 7ம் இடம், 8ம் இடம், 2ம் இடத்தில் இருந்தால் இதுபோல எண்ணங்கள் வரும். நடக்கும் தசாபுத்திகளும் சரியில்லை, கோச்சார கிரகங்களும் சரியில்லை என்றால், அவர்கள் மனம் கலங்கி என்ன செய்வது என்று தெரியாமல், இதையும் செய்துபார்க்கலாமே என அனைவர் கூறிவதையும் வைத்து வழிபாடு செய்வார்கள். இதுவே ஜாதகத்தில் 5ஆம் இடம், தசாபுத்தி நன்றாக இருந்து ஊழ்வினை காரணமாக கஷ்டப்படும் சூழல் இருந்தால்கூட அவர்கள் இந்த நிலைமைக்கு செல்லமாட்டார்கள். அதற்கு பதிலாக அபிராமி அந்தாதி, சிவபுராணம் போன்ற புத்தகங்களை படிப்பர். அதில் கவனம் செலுத்துவர். நம் கஷ்டம் போகட்டுமே என தர்மம் செய்வார்கள். வழிபாடுகளுக்கு செல்லமாட்டார்கள். கெடுதல் அத்தனையும் செய்வது ராகு மட்டுமே. ஜாதகத்தில் ராகுதான் இத்தனை வேலைகளையும் செய்யும். அதனுடன் சில கிரகங்கள் துணையாக சேரலாம்.

வித்தியாசமான பரிகாரம் செய்பவர்களுக்கு நீங்கள் கூறுவது என்ன?

ஒருகாலத்தில் வாழைக்காய், வெங்காயத்தை வைத்துதான் பஜ்ஜி போடுவார்கள். இப்போது கத்திரிக்காய், ஆப்பிள், பலாசுளை, ப்ரட், அப்பளத்தில் பஜ்ஜி போடுகிறார்கள். அவர்களுடையை மாவு அவர்கள் போடுகிறார்கள். நாம் போடக்கூடாது என சொல்லமுடியுமா. இது எந்த அளவுக்கு தவறு என்றே சொல்ல முடியாது. இது அவர்களின் கருத்து. அவர்களை செய்யக்கூடாது என்றும் சொல்ல முடியாது, செய் என்றும் சொல்லமுடியாது. அதுபோலத்தான் இப்போது செய்யப்படும் பரிகாரங்களும். ஆனால் நல்ல விஷயத்திற்காக வழிநடத்தாமல், ஒரு தவறான விஷயத்திற்கு வழிநடத்தினால் அதற்கான பாவம் வழிநடத்துபவர்களை சேரும். ஒருவர் ஏமாந்துவிட்டால், அவரிடம் காசு வெட்டிப்போடு, மிளகாய் அரைத்து தேய் என அனுப்புகிறார்கள் என்றால், அவரை தவறாக வழிநடத்துகின்றனர் என்று அர்த்தம். ஒரு நல்ல குருவாக இருப்பவன், உன் கர்மவினை போய்விட்டது. போன ஜென்மத்தில் ஏமாற்றினாய், இந்த ஜென்மத்தில் புடுங்கிவிட்டார்கள். அதேநேரம் உன்னை ஏமாற்றியவரை கடவுள் தண்டிப்பார். அதைவிடு, மறந்துவிடு, இந்த தெய்வத்தை போய் கும்பிடு எனக்கூறுவார்கள்.

பரிகாரம் செய்வதால் கர்மவினைகள் மாறுமா?

பரிகாரத்தில் எந்தவிதமான பரிகாரம் செய்கிறோம் என்பது உள்ளது. கோயில்களில் விளக்கேற்றுவதுக்கூட, அந்தக்காலத்தில் வெளிச்சத்திற்காக ஏற்ற சொன்னார்கள் என வைத்துக்கொள்ளலாம். ஆனால் அறிவியல் ரீதியாக, ஒரு நெய்விளக்கு ஏற்றிவைத்தால், ஒரு அடி தூரத்திற்கு அது ஆக்ஸிஜனைக் கொடுக்கிறது. முன்னோர்கள், ரிஷிகள் எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கமாட்டார்கள். ஆலமரத்தை சுற்றிவா என்றால், ஆலமரம் நிறைய ஆக்ஸிஜனை கொடுக்கிறது. ஒருவருக்கு பசிக்கும்போது சாப்பாடு கொடுக்கும்போது அவன் மனம் சந்தோஷப்படும், உடல் பலப்படும். அவன் உயிர்வாழ இவன் ஒரு பொருளை கொடுக்கிறான். அதுவும் முடியாதவர்கள் ஒரு கை அரிசி எடுத்து எறும்பு பொந்தில் போடு எனக் கூறியுள்ளார்கள். ஆயிரம் எறும்புகள் சாப்பிடும். இது ஆயிரம் பேருக்கு தானம் செய்த புண்ணியத்தை கொடுக்கும். இதுபோன்ற பரிகாரங்கள் செய்யும்போது கர்மவினைகள் குறையும். முழுவதும் இல்லாவிட்டாலும், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும். எவ்வளவு பெரிய துயரத்திலும் ஒருவர் எந்தளவு நேர்மையாக இருக்கிறார் என்பதுதான் கணக்கு. எத்தனையோ ராஜாக்கள் வாழ்ந்துள்ளார்கள், அரிச்சந்திரனை எதற்காக சொல்கிறோம். அவன் உண்மையை சொன்னான் என்பது. இன்னொரு காரணம் எவ்வளவு கஷ்டநிலையில் இருந்தும் உண்மையை மட்டுமே கடைபிடித்தான். ஒரு பொய் சொல்லியிருந்தால் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம்.


மக்களை ஏமாற்றும் ஜோதிடர்களுக்கு கடவுள் நிச்சயம் கூலி கொடுப்பார் - ஜோதிடர் சந்துரு

நல்லவர்கள் அனைவரும் நல்லதை மட்டும்தான் போதிப்பார்கள். ஜோதிடர், வைத்தியர், ஆசிரியர் இந்த மூன்று பேருக்கும் மன்னர் காலங்களில் சம்பளம் என்பது கிடையாது. சம்பளம் பெறாதவர்கள்தான் இந்த துறைக்கு வரவேண்டும். ஆனால் இன்று நிலைமையே வேறு. இன்றைய காலத்தில் பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது என்பது நிதர்சனமே. ஆனாலும், அதற்கென்று ஒரு அளவுகோல் உள்ளது. அளவைமீறி ஒரு ஏழையிடம் பணம் வாங்கி செய்தார்கள் என்றால், அந்த கர்மா அவர்களை சேரும். இன்று ஜோதிடர்கள் எல்லாம் டிசைன், டிசைனாக லிஸ்ட் போட்டு பணம் வாங்குகிறார்கள். பணம் வாங்குவது தவறில்லை. வறுமைநிலையில் இருப்பவர்களிடம் பரிகாரம் செய்கிறேன் எனக்கூறி நிறைய வாங்கக்கூடாது.

Updated On 23 Sept 2025 2:04 PM IST
ராணி

ராணி

Next Story