
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 90ஸ் காலக்கட்டத்தில் காமெடி மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்தான் நடிகை விசித்ரா. திரையுலகில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்துவிட்டால், நிஜ வாழ்க்கையிலும் எப்போதும் ஒரு நடிகை அதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுவார். அந்த கதாபாத்திரத்திற்கு பின் இருக்கும், அவர்களின் உண்மையான முகம் யாருக்கும் தெரியாது. அப்படி கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி, பிறகு தன்னுடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தியவர்தான் நடிகை விசித்ரா. இதற்கு முக்கிய காரணம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி. இந்த சமையல் நிகழ்ச்சிதான் விசித்ராவின் உண்மையான குணத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகுதான், தன் மீதான மக்களின் பார்வையிலும் ஒரு மாற்றம் வந்துள்ளது என நடிகை ஷகிலா கூட தெரிவித்திருப்பார். இந்நிலையில் திருமணம் குறித்து உணர்ச்சிபூர்வமாக நேர்காணல் ஒன்றில் விசித்ரா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மயக்கும் அழகில் நடிகை விசித்ரா
நடிகை விசித்ரா...
90ஸ்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார் நடிகை விசித்ரா. ஹீரோயினாகத்தான் தான் நடிக்க வந்ததாகவும், ஆனால் தனக்கு கவர்ச்சி கதாபாத்திரங்கள்தான் அதிகம் கிடைத்ததாகவும் பல இடங்களில் விசித்ரா கூறியிருப்பார். தான் முதலில் போர்க்கொடி என்ற படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தில்தான் நடித்ததாகவும், ஆனால் அந்தப் படம் தாமதாக ரிலீஸ் ஆனதாகவும் விசித்ரா தெரிவித்துள்ளார். அதற்குபின் நடித்த படங்கள் முதலில் ரிலீஸ் ஆனதே, தான் கிளாமர் நடிகை என அடையாளம் காணப்பட முக்கிய காரணமாக அமைந்தது எனவும் விசித்ரா கூறியுள்ளார். இவ்வாறு போர்க்கொடி படத்தின் மூலம் அறிமுகமான விசித்ரா, 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தாலும் திருமணத்திற்கு பின் நடிப்பை விட்டுவிட்டு குடும்பத்துடன் மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டார். இச்சூழலில் குக் வித் கோமாளி வாய்ப்பு கிடைக்க அதனை பயன்படுத்தி கொண்டு திரைவாழ்க்கையில் விழுந்த இடைவெளியை ஈடுகட்டினார். தொடர்ந்து படங்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
நடிகை விசித்ராவிடம் தவறாக நடக்க முயன்றது நடிகர் பாலையாதான் என கிசுகிசுக்கப்பட்டது
விசித்ரா வாழ்க்கையில் நிஜ ஹீரோவாக எண்ட்ரி கொடுத்த கணவர்
தெலுங்கு படம் ஒன்றில் நடித்தபோது, பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக பேசியதாகவும், அதை தான் கண்டுக்கொள்ளவில்லை எனவும், ஆனால் மறுநாள் முழுவதும் அவரின் உதவியாளர்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது தான் தங்கியிருந்த ஹோட்டலின் உரிமையாளரான தனது கணவர்தான் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றியதாகவும் விசித்ரா தெரிவித்துள்ளார். இதுதான் தான் திரை வாழ்க்கையில் இருந்து விலக முக்கிய காரணமாக அமைந்த நிகழ்வு என விசித்ரா கூறியுள்ளார். விசித்ராவிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நடிகர் யார்? என ரசிகர்கள் பலரும் இணையத்தை ஆராயத் தொடங்கினர். அப்போது அது நடிகர் பாலையாதான் என பலராலும் கிசுகிசுக்கப்பட்டது. தனது திருமணத்தின்போது, தான் இவ்வளவு பெரிய நடிகை என தன் கணவருக்கு தெரியாது என்றும், நடிகை என தெரிந்ததற்கு பின் நிறைய சண்டைகள் தங்களுக்குள் வந்ததாகவும் விசித்ரா தெரிவித்துள்ளார்.
சைமயல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விசித்ரா...
திருப்பத்தை தந்த சமையல் நிகழ்ச்சி
திருமணத்திற்கு பின் படத்தில் நடிப்பதை நிறுத்திய விசித்ரா, கணவர், மூன்று பிள்ளைகள் என குடும்ப வாழ்க்கையில் மூழ்கினார். இச்சூழலில்தான் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு விசித்ராவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட விசித்ரா, திரைவாழ்க்கையில் விழுந்த இடைவெளியையும் சமன் செய்தார். சமையல் நிகழ்ச்சி மக்களிடம் விசித்ராவுக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விசித்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகளும் விசித்ராவுக்கு வரத் தொடங்கியுள்ளன. மேலும் கவர்ச்சி நடிகை என்ற பிம்பமும் உடைபட்டுள்ளது.
தனது கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் விசித்ரா
“திருமணம் வேண்டாம் என்று நினைத்தேன்”
தனது திருமணம் குறித்து எமோஷனலாக பேசிய விசித்ரா, “என்னதான் நடிகையாக இருந்தாலும் குடும்பத்தில் மரியாதை கிடைப்பதுதான் பெரிய விஷயம். நமக்கு கல்யாணம் நடக்குமா? நல்ல கணவர் கிடைப்பாரா? நமக்கென ஒரு குடும்பம் அமையுமா? என்றெல்லாம் யோசித்து கல்யாணமே வேண்டாம் என்றெல்லாம் நினைத்துள்ளேன். சிங்கிளாகவே இருந்திடலாம் என்றுதான் நினைத்தேன். அப்போதுதான் ஷாஜி என்னை திருமணம் செய்துகொள்ள கேட்டார். ஆனால் அப்போதும் நான் அதிகமாக யோசித்தேன். இது நமக்கு ஒத்துவருமா? கல்யாண வாழ்க்கையை என்னால் சரியாக கொண்டு செல்ல முடியுமா? என்றெல்லாம் யோசித்தேன். பல சவால்களை கடந்து வந்துள்ளேன். எந்தத் துறையில் இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணிற்கும் அன்பான கணவர், குழந்தைகள் என குடும்பம் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.
ஆனால் கணவர், குழந்தை என குடும்பமாக இருக்க வேண்டும் என இப்போது யாரும் பெரிதாக நினைப்பதில்லை. அதற்கு முக்கியத்துவமும் அளிப்பதில்லை. கொஞ்ச நாட்களிலேயே திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிடுகிறார்கள். திருமண உறவில், கண்டிப்பாக கஷ்டங்கள், சவால்கள் வரும். அப்போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, உறுதுணையாக இருக்க வேண்டும். பல வருடங்களுக்கு பின்னர் அதை திரும்பி பார்த்தால், சந்தோஷமாக இருக்கும். வாழ்க்கையின் முடிவில் நாம் என்னதான் பணம், புகழின் உச்சத்தில் இருந்தாலும், அதை யாருடன் பகிர்ந்து கொள்வீர்கள்? குடும்பத்துடன்தான் பகிர்ந்து கொள்ள முடியும். இன்னைக்கு என் கணவர், குழந்தைகள் என என் அருகில் இவர்கள் இருப்பது எனக்கு பெருமிதமாக உள்ளது. எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை, குடும்பம் இருக்கிறது என்ற நிம்மதி உள்ளது. ஆனால் நான் நடித்து பெரிய ஆளாக மாறியிருந்தாலும், குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்க மாட்டேன். குடும்பத்துடன் நெருக்கமாக இருங்கள். அது மிக முக்கியம். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருக்கிறேன்” என உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார் விசித்திரா.
