இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் பஞ்சாங்கப்படி எப்போதும் ஆடி மாதம் மற்ற மாதங்களைவிட சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில்தான் திருவிழாக்கள், விரதங்கள், பூஜைகள் என கோயில்கள் களைகட்டும். பயிர் போடுதல் போன்ற விவசாய வேலைகளும் தொடங்கப்படும். மேலும் ஆன்மிக சிந்தனைகள் அதிகம் பின்பற்றப்படும். இவ்வாறு ஆடி மாதம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.


ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை நீடிக்கும் தட்சிணாயனம்

புண்ணிய காலத்தின் துவக்கமே ஆடிமாதம்...

மழைக்காலம், குளிர்காலம், கோடைக்காலம் என பருவநிலைக்கு ஏற்ப மாதங்கள் வகைப்படுத்தப்படுவது போல, தமிழ் மாதங்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை உத்ராயணம், தட்சிணாயனம். புராணங்களின்படி உத்ராயணம் என்பது தேவர்கள் மற்றும் தேவதைகளின் பகல் நேரம் எனவும், தட்சிணாயனம் இரவு நேரம் எனவும் கூறப்படுகிறது. உத்ராயணம் என்பது மோட்சத்திற்கு ஏற்றது எனவும் கூறுகின்றனர். மகாபாரதத்தில் பீஷ்மர் கூட தான் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக உத்ராயண காலம் வரும்வரை மரண படுக்கையில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. தேவதைகளின் பகல் நேரமான இந்த உத்ராயண காலத்தில் செய்யப்படும் தானம், பூஜை, யாகங்கள், விரதங்கள், தவங்கள் எல்லாம் மிகுந்த பலன் தரும் என்றும் நம்பப்படுகிறது.

தட்சிணாயனம் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை நீடிக்கும். அதுபோல தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை வைத்து இந்த தட்சிணாயனம், உத்ராயணம் (வடகிழக்கு, தென்கிழக்கு) வரையறுக்கப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்ராயணம் எனவும், தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயனம் எனவும் அழைக்கப்படுகிறது. உத்ராயணம் மோட்ச காலம் என்பது போல, தட்சிணாயனம் புண்ணிய காலம் எனக் கூறப்படுகிறது. புண்ணிய காலத்தின் துவக்கமே ஆடி மாதம். சூரிய பகவான், ராசி, நட்சத்திரம் போன்ற ஆன்மிக நம்பிக்கைகள் இந்து சமயத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படுவதால், ஆடி மாதம் இந்துக்களால் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தட்சிணாயனம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் எனவும் கூறப்படுகிறது. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கும் ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஆடி மாதம் பெண்களுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது

ஆன்மீக முக்கியத்துவம்

ஆடி வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது ஆன்மிகம்தான். இந்த ஆடி மாதம் கிராமப்புற காவல் தெய்வங்களாக கருதப்படும் மாரியம்மன், தேவிகள், வீரனார், கருப்பசாமி, அய்யனார் ஆகியோருக்கு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆடியில் பலரும் குடும்பத்தினருடன் இந்த கோயில்களுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொள்வர். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் கூட்டம் களைக்கட்டும். ஆடி வெள்ளியில் பொங்கல் வைத்தால் நினைத்தது நடக்கும் எனவும் நம்பப்படுகிறது. “ஆடி வெள்ளியிலே தாயின் சன்னதியில் பொங்க வச்சி பாருங்கம்மா” என்ற பாடல் உட்பட பல பாடல்கள் ஆடி வெள்ளியில் அம்மன் அருள் மிகுந்திருப்பதை கூறும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து நேர்த்திக்கடனும் செலுத்துவர். மேலும், ஆடி மாதம் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.

ஒரு மாதம் முழுவதும் சந்திரனுடைய வீட்டில் சூரியன் இருக்கும் அமாவாசையே ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்வார். கடகம் என்பது சந்திரனுக்குரியது. சூரியனும், சந்திரனும் கூடியிருந்தால் அது அமாவாசை. சந்திரனுக்குரிய வீட்டில் சூரியன் மாதம் முழுவதும் இருப்பதால் இந்த மாதமே புனிதமான மாதமாகக் கணிக்கப்படுகிறது. அதனால்தான் இந்த மாதத்தில் வரும் அமாவாசையும் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.

ஆடிப்பெருக்கு

ஆடியில் வரும் முக்கிய வழிபாடுகளில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதத்தின் 18வது நாளையே ஆடிப் பெருக்கு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆடிப்பெருக்கு அன்று அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று, ஆற்று மணல் அல்லது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தி, வழிபடுவார்கள். ஆடிப் பெருக்கு அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

ஆடி கிருத்திகை

ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளே ஆடி கிருத்திகை எனக் கூறப்படுகிறது. ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் முருகனை வழிபட்டால், வேண்டிய வரங்களை பெறலாம் என்பது நம்பிக்கை. மேலும் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் திருமண தடைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

பெண்கள் மாதம்

ஆடி மாதம் பெண்கள் வழிபாடு மற்றும் விழாக்களுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில்தான் விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை என பல பூஜைகளை தேவிகளுக்கு விரதமிருந்து பெண்கள் மேற்கொள்வர். திருமணமாகாத கன்னி பெண்கள் விரதமிருந்து விளக்கு பூஜை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் எனக் கூறுவர்.

முருகனுக்கு உகந்த நாளாக ஆடியில் வரும் கிருத்திகை - ஆடியில் தவிர்க்கப்படும் திருமணங்கள்

ஆடியில் தவிர்க்கப்படும் மணவியல் சடங்குகள்

இந்துக்களின் வழக்கப்படி ஆடியில் திருமணங்கள் நடத்தப்படாது. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையான காரணம் ஆடி மாதம் தட்சிணாயன காலத்தில் தொடங்கும். தட்சிணாயனம் தேவர்கள் மற்றும் தேவதைகளின் இரவு நேரம். முக்கியமான, நல்ல காரியங்கள் தேவதைகளின் பகல் (உத்ராயணம்) நேரத்தில் செய்யப்பட வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன. இதனால்தான் இந்துக்கள் ஆடி மாதத்தில் திருமணம் செய்யமாட்டார்கள். மேலும் ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். குறிப்பாக கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவர்கள், கோயிலுக்கு செல்வது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்தனர். மேலும் திருமணம் போன்ற சுப காரியங்கள் வைப்பதால், தெய்வ சிந்தனை மாறுவதோடு, தெய்வங்களை தொந்தரவு செய்வதாக மாறும். அதோடு தெய்வங்களின் ஆசீர்வாதம், அனுக்கிரகம் இரண்டுமே பரிபூரணமாகக் கிடைக்காது. மேலும், ஆடி மாதம்தான் பருவ மழை தொடங்கும். மழைக்காலம், பயணங்கள் மற்றும் விழாக்கள் நடத்த எளிதாக இருக்காது.

அதுமட்டுமில்லாமல் கடந்த காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் திருமணங்கள் தவிர்க்கப்பட்டன. இது தொடர்கதையாக அதுவே கடைப்பிடிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ் பஞ்சாங்கப்படி, ஆடி மாதத்தில் சுப முகூர்த்த நாட்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இதுவும் திருமணங்கள் தவிர்க்கப்படுவதற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. திருமணம் என்பது சைவ சமயத்தில் சிவன், பார்வதி இணைவு எனக் கருதப்படுகிறது. ஆடி மாதம் தேவியின் மாதம் என பார்க்கப்படுவதாலும் திருமணங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதுபோல விவசாய குடும்பத்தினர் ஆடி மாதத்தில் விதை விதைக்க ஆரம்பிப்பர். இதனால் அவர்களும் பெரும்பாலும் ஆடி மாதத்தில் திருமணத்தை தவிர்த்துவிடுவர். அதுமட்டுமல்லாமல் ஆடி மாதத்தில் கரு தரித்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதாலும் புதுமண தம்பதிகளைப் பிரிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால்தான் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் வைப்பதில்லை.


கடும் கோடைக்கு பின் ஆடியில் பசுமை துளிர்க்க ஆரம்பிக்கும்

பசுமை மற்றும் மழைக்காலம்

ஆடி மாதம் வரும்போது தென் தமிழகத்தில் பசுமையும், மழையும் அதிகரிக்கும். இதனால் வாய்க்கால்கள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இது புதிய விளைச்சலுக்குக் ஏதுவாக இருக்கும். இதனால் ஆடியில் பயிர்களை போட்டுவிடுவார்கள். அது முளைப்பதற்கு மட்டும் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதன்பின் புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும். கடும் கோடையில் இறுகி காணப்படும் மண், ஆனி மாத மிதமான மழையால் இளகத் தொடங்கிவிடும். ஈரமான வயல் மண்ணில் நுண்ணுயிரிகளும், மண் புழு, நத்தைகளும் உருவாகத் தொடங்கும். இதனால் மண் செழிப்பை பெறத்தொடங்கி விடும். மேலும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்துக் கொண்டே இருக்கும். இதனால் நீரின் தேவை அதிகம் இருக்காது. இதனால்தான் ஆடிப்பட்டம் தேடி விதை என முன்னோர்கள் கூறுவர்.

இவ்வாறு ஆடி மாதம் ஆன்மிகம், இயற்கை, பெண்கள் வழிபாடு, பசுமை, மழை, விவசாய தொடக்கம் என பல பரிமாணங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் "ஆடி", மற்ற மாதங்களைவிட சிறப்பு வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது.

Updated On 15 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story