இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தென்னிந்திய நடிகர்கள் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என்று தங்களுடைய கால்தடத்தை பதித்து வருகின்றனர். திரையுலகை பொருத்தவரை பொதுவாக ஒரு நடிகர் 30 வருடங்கள் ஆனாலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால், ஹீரோயின்களின் நிலை அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. ஒரு நடிகை 10 வருடங்கள் ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடிப்பது என்பது சவாலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் 20 வருடங்கள் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்து திரையுலகின் ஸ்டீரியோடைப்பை உடைத்துக்காட்டியவர் நயன்தாரா.


பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில் நயன்தாரா

கெத்தான கம்பேக்

2003-இல் மலையாள திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு என பல மொழிப்படங்களில் நடித்து தனக்கென தனியொரு இடத்தை தக்கவைத்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. திரையுலகில் அறிமுகமான புதிதில் பிற கதாநாயகிகளைப் போன்றே கதைகளை தேர்ந்தெடுத்திருந்தாலும், படத்திற்கு படம் தன்னை மெருகேற்றுவது மட்டுமல்லாமல் பிற சமகால கதாநாயகிகளுக்கும் ரோல் மாடலாக இருந்துவருகிறார். குறிப்பாக, இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் கதாநாயகியாக கம் பேக் கொடுத்தார் நயன்தாரா. பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாயா, டோரா, அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் கடைசி மூன்று படங்கள் மெஹா ஹிட் அடித்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்றன. எந்த மொழியாக இருந்தாலும் பெண்களை மையப்படுத்திய கதைகளிலேயே அதிக கவனம் செலுத்திவருகிறார். படத்திற்கு படம் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், உடை, லுக் போன்றவற்றிலும் வித்தியாசம் காட்டுவதில் இவருக்கு நிகர் இவரே.


`ஜவான்’ போஸ்டர் லுக்

மீண்டும் ’பில்லா’ நயன்தாரா?

பொதுவாக நடிகைகளுக்கு திருமணத்திற்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் நயன்தாராவிற்கோ, திருமணத்திற்கு பிறகு அவரது கணவர் விக்னேஷ் சிவன் அவருக்கு சப்போர்ட்டாக இருப்பதாகவும், அதனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முடிகிறது என்றும் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். தற்போது இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா, ’ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ஷாருக்கான் ஜோடியாக பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பொதுவாக அட்லீ படம் என்றாலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதிலும் பாலிவுட்டில் அறிமுகமாகும் தனது முதல் படத்திலேயே ’கிங் கான்’ ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இந்த படத்தின் ப்ரிவியூ மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. இப்படத்தில் நயன்தாரா அதிரடி ஆக்‌ஷன் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது. ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா போஸ்டரை பார்த்த ரசிகர்கள், அதனை ’பில்லா’ திரைப்பட லுக்குடன் பொருத்தி பேசிவருகின்றனர். பான் இந்தியா திரைப்படத்தில் நயன்தாராவின் இந்த லுக், பலரையும் ஈர்த்துவருகிறது.

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிவரும் ’ஜவான்’ திரைப்படத்தில், விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி மற்றும் சான்யா மல்ஹோத்ரா ஆகியோரும் இணைந்திருக்கின்றனர். இந்தக் கூட்டணியே சிறப்பாக அமைந்திருப்பதால் இந்த திரைப்படத்தின்மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ஜவானை ரெட் சில்லீஸ் என்டெர்டெய்ன்மென்ட் பேனரில், கவுரி கான் மற்றும் கவுரவ் வர்மா தயாரிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நயன்தாராவின் ‘ஜவான்’ திரைப்பட லுக்

மெஹா பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் சம்பளம் குறித்த அறிவிப்பு வெளியாகி பேசு பொருளாகியிருக்கிறது. இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஷாருக்கான் இப்படத்திற்கு ரூ.100 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். கதாநாயகி நயன்தாரா ரூ. 11 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். வில்லனாக வரும் விஜய் சேதுபதி ரூ. 21 கோடியும், சிறப்புத் தோற்றத்தில் வருகிற தீபிகா படுகோனே ரூ.20 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனராம்.

வெற்றியின் ரகசியம் இதுதான்!

முன்பெல்லாம் நயன்தாராவும் சர்ச்சைகளும் பிரிக்க முடியாதவையாக இருந்தது. ஆனால் தற்போது தனக்கென தனியிடத்தை தக்கவைத்திருக்கும் நயன்தாரா, தன்னைப்பற்றி வெளிவரும் வதந்திகள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், தன்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறுகிறார். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் கூலாக கூறுகிறார். நேர்காணல் ஒன்றில் திருமணமானால் கட்டுப்பாடுகள் வருவது ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நயன்தாரா, ”முதலில் ஏன் பெண்களிடம் இந்த கேள்வி முன்வைக்கப்படுகிறது? திருமணமான ஆண்கள், அடுத்த நாளே வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் இங்கு இடைவெளி தேவைப்படுகிறது?


குழந்தைகள் மற்றும் கணவருடன் நயன்தாரா

திருமணம் என்பது ஒரு இடைவெளிக்கான நேரம் கிடையாது. திருமணம் நமது வாழ்க்கையை முழுமையாக்குகிறது. அந்த நேரத்தில்தான் அதிக வேலை செய்யவேண்டும். அதிகமாக சாதிக்கவேண்டும். என்னைப் பொருத்தவரை, திருமணத்திற்குப் பிறகு என்னுடைய மனநிலையோ அல்லது வீட்டிலோ எதுவும் மாறவில்லை. என்னை சுற்றியிருப்பவர்களும் என்னை அதுபோலவே நடத்துகிறார்கள். எனவே பெண்களுக்கு இடைவெளி என்ற எண்ணமே வரக்கூடாது” என்று கூறினார். அதனை வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும் காட்டி அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறிக்கொண்டே இருக்கிறார் நயன்தாரா.

Updated On 16 Aug 2023 4:42 AM GMT
ராணி

ராணி

Next Story