இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீப காலமாக இந்தியாவில் அரங்கேறும் கொலைகளை நினைத்துப் பார்த்தாலே, ‘ஈரக்குலை நடுங்குகிறது’ எனக்கூறலாம். காரணம் சினிமாக்களில் கூட காட்டப்படாத, கற்பனைக்கு எட்டாத அளவில் கொடூரமான முறைகளில் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதுவும் யாரால் அந்த கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்றால், இறந்தவர்களின் அன்புக்குரியவர்களாலேயே. இங்கு கொலை செய்தவர்கள்தான் அன்புக்குரியவர்கள். இறந்தவர்கள் அல்ல. இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை, சவுரப் ராஜ்புத் கொலை போன்றவற்றை கூறலாம். கொலைக்கு அப்படி என்ன முக்கிய காரணம் என்றால் காதல்தான். காதலா கொலைக்கு காரணம் என்றால் ஆமாம் என்று கூறலாம். ஆனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த காதல் அல்ல. ஒருவர் மற்றொருவர் மீதும், அவர் வோறொருவர் மீதும் வைத்திருந்த காதல்தான் காரணம். பிடிக்காதவர்களை திருமணம் செய்துகொள்ளும் போது, அல்லது திருமண வாழ்க்கையின் மீது வெறுப்பு வரும்போது, திருமண பந்தத்திலோ அல்லது உறவுமுறையில் இருக்கும்போதோ வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பது போன்றவை, கொலைகளுக்கு காரணங்களாக இருக்கின்றன. மேலும் இதுபோன்ற காதல்களே உறவுகள் முறிவதற்கும் காரணமாகிவிடுகின்றன. இவ்வாறு உறவுமுறைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்கள் குறித்து பேசியுள்ளார் துப்பறிவாளர் பிரசன்னா.


திருமண கோலத்தில் ராஜா ரகுவன்ஷி - சோனம் ரகுவன்ஷி - கொலைக்கு பின் கைதான சோனம் ரகுவன்ஷி

திருமணமாகி ஆண்டுகள் பல கடந்தும் விவாகரத்து பெறுவது ஏன்?

முன்னரெல்லாம் தங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டால், ‘அப்பாடா’ பாரம் குறைந்தது என பெற்றோர் நினைப்பர். ஏனெனில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதுதான் பெற்றோரின் மிகப்பெரிய வேலை, கடமை. ஆனால் இப்போதோ, பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு அமர்ந்துள்ளனர். ஏனெனில் இப்போதெல்லாம் கல்யாணத்திற்கு பிறகுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அதை எதிர்கொள்ள இவர்கள் தயாராக இருக்க வேண்டும். முன்னரெல்லாம் கல்யாணம் முடிந்த ஒரு வருடத்திற்கு சீர், பிரசவம் என வேலைகள்தான் பெற்றோருக்கு இருக்கும். ஆனால் இப்போதோ, சென்ற இடத்தில் தங்கள் மகள் எப்படி இருக்கிறாள், மருமகன் எப்படி இருக்கிறார், இருவருக்கும் புரிதல் இருக்கிறதா? தங்களது மகளுக்கு யாரையாவது பிடித்திருந்து, சொல்லாமல் இவரை திருமணம் செய்து கொண்டாரா? அல்லது மருமகனுக்கு வேறு ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என பயம் கொள்கின்றனர். காரணம் சமீபத்தில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை போன்ற சம்பவங்களை கூறலாம். பிடிக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமாக பிரிய விவாகரத்து வாங்கப்படுவதில்லை. கொலைகள்தான் அரங்கேறுகின்றன.


ஒரு அளவுக்குமேல் சகித்துக்கொள்ள முடியாததே வயது முதிர்வு விவாகரத்துகளுக்கு காரணம்

60 வயதிலும் விவாகரத்து முடிவுகள் எடுக்கப்படுவது ஏன்?

இதற்கு காரணம் இவ்வளவு நாள் சகித்துக்கொண்டோம். இனிமேல் முடியாது, இனிமேலாவது நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணம்தான். இருக்கும் கொஞ்ச காலத்தையாவது நிம்மதியாக வாழ வேண்டும், மற்றவருக்காக எதற்கு வாழவேண்டும் என்னும் எண்ணம்தான். வாழ்க்கை முழுவதும் ஒருவர் தனது கணவருக்கு சமையல் செய்து போட்டிருப்பார். இதற்கு மேல் என்னால் முடியாது என விலக நினைப்பார். இதுபோல பல காரணங்கள் உள்ளன. முன்பெல்லாம் இதற்காகத்தான் பிடிக்கவில்லை என்ற காரணம் தெரிந்துவிடும். ஆனால் இப்போதெல்லாம் எதற்காக பிடிக்கவில்லை என்பதே தெரியவில்லை.


தனிமை மிகவும் கொடுமையானது - டிடெக்டிவ் பிரசன்னா

சிங்கிள் எனக்கூறுபவர்கள் உண்மையிலேயே தனிமையில்தான் இருக்கிறார்களா?

இவையெல்லாம் பொய்தான். உள்ளே பார்த்தால் ஏகப்பட்ட கதைகள் இருக்கும். நான் தனிமையில் இருக்கேன் என கெத்துக்காக வீடியோ போடும் பலரை நான் பார்த்துள்ளேன். அது எல்லாம் பொய். சமூகத்திற்கு ஒரு முகம், உண்மையில் வேறுமுகம்.

எந்த பிரச்சனைகளுக்காக உங்களிடம் அதிகம் வருவார்கள்?

லிவ் இன் ரிலேஷன் ஒரு கேவலமான செயல். அப்பா, அம்மா பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள், பிரிகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள், பிரிகிறார்கள். நிறைய வழக்குகள் வருகின்றன. சமாளிக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் லிவ் இன் ரிலேஷனில் இருக்கும்போது என்ன பொறுப்பு இருக்கும் அவர்களுக்கு? உணர்வுபூர்வமாக சேரமாட்டேன், எந்த பொறுப்பும், கடமையும் எனக்கு இல்லை, எந்த அங்கீகாரமும் தேவையில்லை, பிடிக்கவில்லை என்றால் வேறொருவருடன் ஒன்றாக இருப்பேன் என்பதன் நாகரிக பெயர்தான் லிவ் இன் ரிலேஷன். தினந்தோறும் பல வழக்குகள் வருகின்றன. யார் என்றே தெரியாமல் உறவில் இருந்துவிட்டு அவர்களை கண்டுபிடிக்க சொல்லி... என்ன மாதிரியான உறவு இது? நாடு எங்கு போய்க் கொண்டிருக்கிறது? இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அந்த பெண் கர்ப்பமடைகிறார். அந்த ஆண் பிரிந்துசென்று விடுகிறார். ஏனென்றால் அந்த உறவில், ஆண் உணர்வுப்பூர்வமாக இல்லை. அந்தப் பெண் காவல் நிலையத்தில் நின்றுக்கொண்டு அழுதுக்கொண்டே நியாயம் வேண்டும் என கூப்பாடு போடுகிறார். காவல் நிலையத்தில் மட்டும் எத்தனை வழக்குகளைத்தான் இதுபோல பதிவு செய்வார்கள்? நீங்கள் லிவ் இன் ரிலேஷனில் இருக்கும்போது போலீசாரையோ, பெற்றோரையோ கேட்டீர்களா? ஆனால் பிரச்சனை என வரும்போது மட்டும் இவர்களை தேடி செல்வது எப்படி ஞாயம்?


லிவ் - இன் உறவில் ஏற்படும் பிரச்சனைகள்

என்னிடம் பாலியல் ரீதியான உறவை எதிர்பார்த்தார். இல்லையென்றால் விட்டு சென்றுவிடுவார் என்ற பயத்தில்தான் நான் சம்மதித்தேன் என சில பெண்கள் கூறுவார்கள். இப்போது அந்த பெண் தனது உடலை கொடுத்தாலும் அவன் விட்டு சென்றுவிட்டான். ஆனால் அவள் தனது உடலை கொடுக்காமல் இருந்திருந்தால், அவன் யோசனை செய்திருப்பான். அப்படி செய்திருந்தால் பெண்கள் நீதிமன்றமோ, காவல் நிலையமோ அலையாமல் இருக்கலாம். பிள்ளைகளுக்கு அம்மா, அப்பா இருக்கிறார்கள். வேண்டாம், அம்மா, அப்பாவை விடுங்கள்; படிக்கிறார்கள்தானே... சுயமாக சிந்திக்கும் அறிவு இல்லையா? இப்போது அனைவரும் படிக்கின்றனர்; வேலைக்கு செல்கின்றனர்; என்னுடைய பணம், நான் ஜாலியாக இருப்பேன் என இருக்கிறார்கள். இதுபோல பல வழக்குகள் வருகின்றன. ஆண்களும் பலர்வந்து அழுவார்கள். கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என நினைத்தேன். விட்டுவிட்டு போய்விட்டாள் என்று அழுவார்கள். பலருக்கு தங்களுடன் உறவில் இருந்தவர்களின் முகவரி கூட தெரியாது. எங்கு வேலை செய்தார்கள்? ஃபோன் நம்பர் என்ன? என்று கூட தெரியாது. எங்களுக்கு எந்த அங்கீகாரமும் வேண்டாம், சமூகத்தை பற்றி கவலைப்பட மாட்டோம் எனக்கூறுபவர்கள் இந்த உறவில் இருந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழுங்கள். ஆனால் இப்போதெல்லாம் திருமணம் செய்துகொண்டாலும் சந்தோஷமாக வாழ்வதில்லை.

இன்றைய தலைமுறையினர் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை ஏணிபோல பயன்படுத்துகின்றனர். மேலே ஏறியபின் அவர்களை எட்டி உதைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை கீழே இறங்குவதற்கு அந்த ஏணிதான் பயன்படும் என்று. மேலிருந்து குதித்தால் செத்துப் போய்விடுவார்கள் என்பது தெரிவதில்லை. அதை எப்படி புரிய வைப்பது என தெரியவில்லை. உண்மையை சொல்லவேண்டும் என்றால் புரிவதில்லை. பட்டுத்தான் திருந்த வேண்டும்.


கணவன் - மனைவியை விட லிவ் இன் உறவில்தான் அதிக சந்தேகங்கள் வருகின்றன - டிடெக்டிவ் பிரசன்னா

லிவ் இன் வழக்குகள்தான் அதிகமாக வருகிறதா?

கண்டிப்பாக, அதை மறுக்க முடியாது. லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்குத்தான் அதிக சந்தேகங்கள் வருகின்றன. முன்பெல்லாம் பிரச்சனை என்று ஒரு கணவர் வருவார் அல்லது ஒரு மனைவி வருவார். ஆனால் இப்போதெல்லாம் லிவ் இன் உறவில் இருப்பவர்கள்தான் வருகிறார்கள். ஒருவருக்கு ஒன்று எளிதாக கிடைப்பதுதான் இங்குள்ள பிரச்சனை. பெறுவது கடினமாக இருந்தால் நாம் சிறிது காத்திருப்போம். அந்த காத்திருப்புக்கான இடைவெளியில் நிறைய மாற்றங்கள் நிகழும். நினைத்ததும் வாங்குவது, நினைத்ததும் எளிதாக கிடைப்பதுதான் இங்கு தவறுகள் நிகழ்வதற்கு காரணம். பிரச்சனைகளுக்கு மற்றொரு முக்கிய காரணம் ஆப்ஷன்கள் அதிகமாக இருப்பது. முன்பெல்லாம் நாம் செருப்பு அறுந்துவிட்டால் தைத்து போடுவோம். ஆனால் இப்போது அதை தூக்கிப்போட்டுவிட்டு வேறு ஒன்றை வாங்கிக் கொள்வோம். இங்கு மனிதர்களும், செருப்புகள் போன்றுதான் ஆகிவிட்டார்கள். அதை சரிசெய்து கொள்ளலாம் என்ற மனப்பக்குவத்தில் யாரும் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருவனுக்கு இருவர் என்ற நிலைமாறி தற்போது ஒருவருக்கு பலபேர் என்ற நிலைமை வந்துவிட்டது. இது எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை. மது, ஊழலை போன்று இந்த விவகாரத்தையும் ஒழிக்க முடியாது.

Updated On 8 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story