
தமிழ் சினிமாவில் 80, 90களில் கதாநாயகிகளாக நடித்த பெரும்பாலான நடிகைகள் தற்போது சினிமாவில் இருந்தே காணாமல் போய்விட்டனர். ஆனால், நடிகை தேவயானி தசாப்தங்கள் தாண்டி சினிமாவில் தன் இடத்தை பூர்த்தி செய்து வருகிறார். வெறும் நடிகையாக மட்டுமின்றி கைக்குட்டை ராணி குறும்படம் மூலம் இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். சினிமா வாழ்க்கையில் ஒருபக்கம் கவனம் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பில் எப்போதும் கவனம் செலுத்துபவர் நடிகை தேவையானி. அதிலும் கடந்தாண்டுகளில் இவரின் குடும்ப நேர்காணல்கள் பல வெளிவந்து, மகள்களை தேவயானி எளிமையாக, அடக்கமாக வளர்த்திருப்பதாக ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் தனது கணவர் மற்றும் மகள்கள் குறித்தும், பிள்ளைகள் வளர்ப்பு குறித்தும் அண்மையில் தேவையானி பேசியுள்ளார். அதுபற்றி காண்போம்.
தனது அறிமுக படம் மற்றும் சூர்யவம்சம் படத்தில் நடிகை தேவயானி
தேவயானியின் திரை அறிமுகம்...
90ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்றால் அவர் தேவயானி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தியிலும் நடித்தார். மும்பையில் பிறந்த தேவையானிக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பு, நடனத்தின் மீது ஆர்வம் இருந்துள்ளது. அப்போது ஹிந்தி படம் ஒன்றின் ஆடிஷன் அறிவிப்பை பார்த்துள்ளார். தனது தாயிடம் கூறிவிட்டு அந்த ஆடிஷனில் கலந்துகொண்டுள்ளார். ஆடிஷனில் நடிகை தேவயானி தேர்வாகி, படப்பிடிப்பு முழுவதும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஆனால் புரொடக்ஷனில் வந்த பிரச்சனையால் தற்போதுவரை அந்தப்படம் வெளியாகவில்லை. அதன்பின்தான் மலையாள திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். ‘கின்னாரி புழையோரம்’ என்ற படம்தான் தேவயானி நடித்த முதல் மலையாள படம். இதுதான் அவர் நடிப்பில் வெளிவந்த முதல் படமும் கூட.
இதனைத்தொடர்ந்து 1995ஆம் ஆண்டு தொட்டா சிணுங்கி எனும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படம் தோல்வியடைய, அடுத்ததாக நடித்த கல்லூரி வாசல் படமும் தோல்வி அடைந்தது. ஆனாலும் தனது அழகாலும், திறமையாலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் தேவயானி. அந்த வகையில் அஜித்திற்கு ஜோடியாக ‘காதல் கோட்டை’ படத்தில் நடித்தார். இந்தப்படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, மக்கள் அனைவரும் தேவயானியை கொண்டாட ஆரம்பித்தனர். காதல் கோட்டை படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதையும் வென்றார் தேவயானி. இப்படத்திற்கு பிறகு சூர்யவம்சம், மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், தொடரும், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், தென்காசிப்பட்டணம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார் தேவயானி. இவ்வாறு பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், தற்போதுவரை அனைவராலும் சூர்யவம்சம் படத்தாலேயே நினைவுக்கூரப்பட்டு வருகிறார். தேவயானிக்கு தனிப்புகழை தேடிக் கொடுத்தது சூர்யவம்சம். இப்படத்தில் தேவயானி கதாபாத்திரம் செய்த இட்லி உப்மாவால்தான் பலருக்கும் இட்லி உப்மா பிடிக்க ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.
கோலங்கள் தொடர் அபி... மற்றும் தம்பி நகுலுடன் இருக்கும் தேவயானி
தேவயானி மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ் திரையுலகுதான் அவருக்கு பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது. இதனிடையே இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தேவயானி. திருமணத்தைத் தொடர்ந்தும் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். படங்களில் நடித்து தேவையானி புகழ் பெற்றிருந்தாலும், ‘கோலங்கள்’ தொலைக்காட்சி தொடர் அவருக்கு மேலும் ஒரு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியது. தற்போதும் கோலங்கள் தொடர் நினைவுக்கூரப்பட்டு, இதில் தேவையானி நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் பலர் மீம்ஸ் டெம்ப்லேட்டுகளாகவும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்தார். அப்படி பஞ்சதந்திரம் படத்தில் அவர் நடித்த ‘நிர்மலா’ கதாபாத்திரம் இப்போதும் அனைவராலும் ரசிக்ககூடிய கதாபாத்திரமாக இருக்கும். தற்போதும் அக்கா, அம்மா என தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி, எப்போதும் மக்கள் மனதில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் தேவயானி. நடிகை தேவயானி மட்டுமின்றி அவரது சகோதரர்களும் திரை அனுபவம் கொண்டவர்களே. தேவயானியின் இளைய சகோதரர்தான் நடிகர் நகுல். தேவயானியின் மூத்த சகோதரரான மயூர் ஜெய்தேவ் மாடலிங் துறையில் இருந்துள்ளார். நகுல், தேவயானிக்கு முன்னரே திரையுலக்கு வந்தாராம். கதாநாயகனாக வேண்டும் என விருப்பம் கொண்டு வந்தவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.
ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் ‘கைக்குட்டை ராணி’ குறும்படத்திற்காக விருது வென்ற தேவயானி
கைக்குட்டை ராணி...
தேவயானி நடிகையாக மட்டுமின்றி இயக்குநராகவும் அவதாரம் எடுத்த குறும்படம்தான் ‘கைக்குட்டை ராணி’. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தேவயானி, தனது சொந்த கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில், குழந்தைகளின் உணர்வுகளை மையமாக கொண்டு எடுத்த குறும்படம்தான் கைக்குட்டை ராணி. இசைஞானி இளையராஜா இசையில், பி. லெனின் படத்தொகுப்பில் உருவாகிய 'கைக்குட்டை ராணி' 17வது ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் விருதையும் வென்றது. இதன்மூலம் தனது முதல் இயக்கத்திற்கே சர்வதேச விருதையும் வென்றார் தேவயானி.
நீ வருவாய் என மற்றும் திருமதி தமிழ் படத்தில் நடிகை தேவயானி
வீட்டை எதிர்த்து திருமணம்...
தற்போதும் தமிழ் திரையுலகில் பேசப்படும் நட்சத்திரங்களின் திருமணங்களில் ஒன்று நடிகை தேவயானியின் திருமணம். படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோதே நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜகுமாரனை, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார் தேவயானி. இவர்களின் திருமண செய்தி திரையுலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவயானி சுவர் ஏறி குதித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது. அப்போது பல பத்திரிகைகளே இயக்குநர் ராஜகுமாரனின் தோற்றம் குறித்து விமர்சித்து எழுதி இருந்தார்களாம். இந்த திருமணத்தால் பல வருடங்கள் தேவயானியின் பெற்றோர் அவரிடம் பேசவில்லை என்றும், இரண்டாவது குழந்தை பிறந்தபிறகே வந்து பேசியதாகவும் பலமுறை நடிகை தேவயானியே தெரிவித்திருப்பார். இதுபோல பல விமர்சனங்கள், எதிர்ப்புகள், தடைகளை தாண்டி பலருக்கும் பிடிக்காமல் இருவரும் திருமணம் செய்துகொண்டாலும், தற்போது இப்படி ஒரு அழகான குடும்பமா என வியக்கும் அளவிற்கு வாழ்ந்து வருகின்றனர் ராஜகுமாரன் - தேவயானி தம்பதி.
தேவயானியின் குடும்பம்...
கடந்த 2001ஆம் ஆண்டு இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை தேவயானிக்கு இனியா, ப்ரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் இனியா கல்லூரி இறுதியாண்டும், ப்ரியங்கா கல்லூரியில் முதலாம் ஆண்டும் படித்து வருகிறார்கள். இருவருமே சினிமா துறை சம்பந்தப்பட்ட படிப்பையே படித்தும் வருகின்றனர். இதில் இளைய மகள் ப்ரியங்கா தற்போது பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பாடியும் வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ள ப்ரியங்கா, தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என நடிகை தேவயானி அண்மையில் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தானும், தன் கணவரும் தங்கள் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பல்வேறு கலை மற்றும் கூடுதல் செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்குவித்து வருவதாகவும், பரதநாட்டியம், பாட்டு, ஓவியம், நீச்சல், சிலம்பம், கராத்தே போன்ற பலவற்றை தங்கள் மகள்கள் இனியா மற்றும் பிரியங்கா கற்றுக்கொண்டதாகவும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
“சின்ன வயதில் இருந்தே நானும், என் கணவரும் படிப்பைதவிர மற்ற கூடுதல் செயல்பாடுகளில் அவர்களை சேர்த்துவிட்டுள்ளோம். மூன்றரை வயதிலிருந்தே பரதநாட்டியம், ஓவியம், இசை, வரைதல், நீச்சல், சிலம்பம், கராத்தே போன்ற நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறுவோம். அவர்களும் நாங்கள் கூறுவதற்கு ஒத்துழைப்பார்கள். வேண்டாம் என்று சொன்னதே கிடையாது. எதில் போய் சேருங்கள் என்றுக் கூறினாலும், உடனே அதில் சேர்ந்துவிடுவார்கள். அதை செய்துவிடுவார்கள். புரிந்துகொள்வார்கள். நானும் என் கணவரும் திரைத்துரையில் இருப்பதால் கலை மீது எங்களுக்கு ஆர்வம் இருக்கும் இல்லையா? கற்றலுக்கு வயதே இல்லை. எப்போதும் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொண்டே இருங்கள். கற்றதை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும். என்னுடைய சின்ன பொண்ணு ப்ரியங்கா நன்றாக வரைவாள். இப்போது விஷ்வல் ஆர்ட்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள். முகத்தை பார்த்தால் அப்படியே வரைந்துவிடுவாள். பென்சில் ஆர்ட், பெயிண்டிங் போன்றவற்றை அழகாக செய்வாள். என் பெரிய மகளும் நன்றாக வரைவாள். புகைப்படம் எடுப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஃபோட்டோகிராஃபியில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது” என குழந்தைகள் குறித்து பேசியுள்ளார் தேவயானி.
தனது இளைய மகள் பிரியங்காவுடன்...
தொடர்ந்து குழந்தை வளர்ப்பு பற்றி பேசிய தேவயானி, “பெற்றோர்கள் குழந்தைகள் மனதில் ஒரு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அவர்களுடனான ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாட வேண்டும். குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு நிறைய படிப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை கையில் கொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால், மொபைல் ஃபோனில் கவனம் செலுத்த மாட்டார்கள். இந்தச் செயல்பாடுகள் குழந்தையின் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், அவர்களை வீடியோ கேம்கள் மற்றும் மொபைல் ஃபோன்களிலிருந்து விலக்கி வைக்கும் என்றும், இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்" என்றும் தெரிவித்துள்ளார்.
