
1 பெண், 2 ஆண்கள்! சட்டம் சொல்வது என்ன? 1000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படித்தானாம்...
இந்தியாவில் திருமணம் என்பது நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் திருமண பந்தத்திற்கு என்றே பல சட்டங்களும் உள்ளன. இந்து திருமண சட்டத்தின்படி ஒருவர் ஒரு துணையை மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீபத்தில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்று அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர், சகோதரர்கள் இருவரை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளார். இப்படி இரண்டு ஆண்களை ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்ள காரணம் என்ன? நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இவர்களின் திருமணம் செல்லுபடியாகுமா? என்பது குறித்து விரிவாக காண்போம்.
மணமகள் சுனிதா சவுகான், மணமகன்கள் பிரதீப், கபில் தேகி
ஹட்டி சமூகத்தினரின் பாரம்பரியம்...
இந்தியாவில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சார நடைமுறையே பொதுவாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவேளை இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் முறையாக விவாகரத்து பெற்று, வேறு திருமணம் செய்து கொள்ளலாம். அது பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி. இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பெண் ஒருவர், ஒரே நேரத்தில் சகோதரர்கள் இருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஷில்லை கிராமத்தை சேர்ந்த சுனிதா சவுகான் என்பவர் பிரதீப் மற்றும் கபில் தேகி என்ற சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் மூவரின் முழு விருப்பத்தோடுதான் நடைபெற்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிர்மௌர் மாவட்டத்தின் டிரான்ஸ்-கிரி பகுதியில் உள்ள ஷில்லை கிராமத்தில், கடந்த ஜூலை 12ஆம் தேதி தொடங்கிய இவர்களின் திருமண கொண்டாட்டம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. நாட்டுப்புற பாடல்கள், நடனம் என திருமணம் களைகட்டியது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் இந்த திருமணம் குறித்து பல கேள்விகளை முன்வைத்தனர்.
இதனையடுத்து இந்த திருமணம் தங்கள் ஹட்டி இனத்தின் பாரம்பரிய நடைமுறையான ‘ஜோடிதாரா’ முறைப்படி நடைபெற்றது எனவும், தங்கள் விருப்பப்படியே நடைபெற்றது எனவும் மணமக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய குன்ஹாட் கிராமத்தை சேர்ந்த மணமகள் சுனிதா, “எனக்கு எங்களது பாரம்பரியம் தெரியும். நான் எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் பணிந்து இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அவர்களது சகோதர பிணைப்பிற்கு நான் மரியாதை கொடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார். ஷில்லை கிராமத்தை சேர்ந்த, அரசுத் துறையில் பணிபுரியும் மணமகன் பிரதீப், “எங்கள் மூவரின் கூட்டு முடிவுதான் இந்த திருமணம். எங்கள் பாரம்பரியம் குறித்து பெருமைக் கொள்வதால், நாங்கள் இந்த முறையை பின்பற்றினோம்” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து வெளிநாட்டில் வேலை செய்யும் பிரதீப்பின் சகோதரரான மணமகன் கபில், “நாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம். நான் வெளிநாட்டில் வசித்தாலும், இந்த திருமணம் மூலம் எங்கள் மனைவிக்கு ஐக்கியப்பட்ட குடும்பமாக ஆதரவு, பாதுகாப்பு மற்றும் அன்பை நாங்கள் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.
"பல கணவர் மணம்" முறைக்கு ஹிமாச்சலப் பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது...
ஜோடிதாரா என்றால் என்ன?
ஹிமாச்சலப் பிரதேசத்தின் வருவாய் சட்டங்களும் ஹட்டி சமூகத்தினரின் இந்த பாரம்பரிய முறையை அங்கீகரித்து, அதற்கு “ஜோடிதாரா” என்று பெயரிட்டுள்ளது. இந்த திருமண முறையை ஜஜ்தா எனவும் கூறுகின்றனர். டிரான்ஸ்-கிரியில் உள்ள பதானா கிராமத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற ஐந்து திருமணங்கள் நடந்துள்ளன. ஹிமாச்சலப் பிரதேசம் - உத்தரகாண்ட் எல்லையில் இந்த ஹட்டி சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்பட்டனர். ஹட்டி சமூகத்தினரிடையே பல நூற்றாண்டுகளாகவே இந்த ‘பல கணவர் மணமுறை’ நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் பெண்களிடையே அதிகரித்து வரும் கல்வியறிவு காரணமாகவும், இப்பகுதியின் பொருளாதார மேம்பாடு காரணமாகவும் சமீப காலமாக இந்த நடைமுறை குறைந்து வந்துள்ளது.
அப்படியே திருமணங்கள் நடைபெற்றாலும், ரகசியமான முறையில் நடத்தப்பட்டு, ஹட்டி சமூகத்தினரால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளது. சொத்து பிரிந்து சென்றுவிடக் கூடாது என்பதற்காக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாரம்பரிய முறை கண்டுபிடிக்கப்பட்டதாக, ஹட்டி சமூகத்தின் முதன்மை அமைப்பான கேந்திரிய ஹட்டி சமிதியின் பொதுச் செயலாளர் குந்தன் சிங் சாஸ்திரி தெரிவித்துள்ளார். தொலைதூர கடினமான, மலைப்பாங்கான பகுதிகளில் சிதறிய விவசாய நிலங்களை நிர்வகிக்க இந்த நடைமுறை உதவும். மேலும் சகோதரர்களை ஒரே பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் குடும்பத்தில் சகோதரத்துவத்தையும், பரஸ்பர புரிதலையும் மேம்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்த மரபு, காலப்போக்கில் மறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிர்மௌர் மாவட்டத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் சுமார் 450 கிராமங்களில், ஹட்டி சமூகத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சில கிராமங்களில் பாலியண்ட்ரி முறை (பல கணவர் மணம்) இன்னும் ஒரு பாரம்பரியமாக உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பழங்குடிப் பகுதியான ஜான்சர் பாபரிலும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி மாவட்டமான கின்னூரிலும் இந்த மரபு பரவலாக இருந்தது.
இரண்டு தாலிகளுடன் இரண்டு ஆண்களை திருமணம் செய்துகொண்ட உ.பி. பெண்
இந்திய திருமணச் சட்டம் கூறுவது என்ன?
இந்தியாவில் இதுபோன்று ஒரு பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்து கொள்வது இது ஒன்றும் முதல்முறையல்ல. கடந்த ஆண்டு கூட உத்தரப்பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், இரு ஆண்களை திருமணம் செய்துகொண்டார். இந்தியாவில் ஆணிண் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18. இந்தியச் சட்டத்தின்படி ஒரு ஆண், ஒரு பெண்ணையும், ஒரு பெண் ஒரு ஆணையும் திருமணம் செய்து கொள்ளலாம். இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு இன்னும் சட்டம் அங்கீகாரம் வழங்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள் ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் சேர்ந்து வாழலாமே தவிர அதனை சட்டத்தில் பதிவு செய்ய முடியாது. இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை.
அதுபோலத்தான் இந்த ஜோடிதாரா திருமண முறையும். இந்திய சட்டப்பட்டி கணவரோ, மனைவியோ இறந்துவிட்டால் அல்லது விவகாரத்து பெற்றுவிட்டால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும். கணவரோ அல்லது மனைவியோ ஒரு திருமண பந்தத்தில் இருக்கும்போதே வேறு ஒருவரை திருமணம் செய்வது என்பது இந்திய திருமணச் சட்டத்தின்படி தவறாகும். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்தினரும் வெவ்வேறு திருமண சடங்குகளை பின்பற்றி வருகின்றனர். இது போன்ற அனைத்து சடங்குகளையும் இந்திய சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால் மரபு, பாரம்பரியம் என்ற பெயரில் பலதுணை திருமணம் செய்துக் கொள்வதை அங்கீகரிக்கவில்லை. இந்தியாவில் பலதுணை மணம் (polygamy) என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் இருக்கும் சில குழுக்களுக்கு மட்டும் பல மனைவி மணம் (polygyny) செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. ஹட்டி உள்ளிட்ட சில குழுக்களுக்கு பல கணவர் மணம் (polyandry) புரிந்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இந்திய சட்டப்பிரிவுகள் (IPC) 494 மற்றும் 495 இன் கீழ் இந்த ஹட்டி சமூகத்தினர் பல கணவர்களை மணம் புரிய சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பின்பற்றப்படும் இந்த ஜோடிதாரா முறை, அம்மாநில உயர் நீதிமன்றத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
