இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கொரோனா காலக்கட்டம் முடிந்தாலும் தற்போது பல படங்கள் திரையரங்குகளில் வெளியாவதைவிட, ஓடிடி போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகி வருகிறது. இதனால் உலகளாவிய ரசிகர்களை கவர்வது என்பது தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவுக்கு முக்கிய வேலையாக உள்ளது. இதில் உலக ரசிகர்களை கவர முக்கிய பாலமாக இருப்பது டப்பிங். ஓடிடியில் படங்கள் வெளியானாலும் ஆங்கிலம் அல்லது டப்பிங் செய்யப்பட்டு அவரவர் சொந்தமொழியில் அவை வெளியிடப்பட்டால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். மேலும் ஒரு படத்திற்கு கதை, காட்சி, நடிப்பு போன்றவை எவ்வளவு முக்கியமோ அதுபோல டப்பிங் என்பதும் மிகமுக்கியம். காட்சிக்கு ஏற்றவாறு டப்பிங் கொடுக்கப்பட்டால்தான் அது வெற்றிப்பெறும். அதுபோல உள்ளூரில் எவ்வளவு பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும், மாற்றுமொழிக்கு செல்லும்போது டப்பிங் சரியில்லை என்றால் அது டம்மியாகிவிடும். இதற்கு பல தெலுங்கு படங்களை உதாரணமாக கூறலாம். ஆனால் சமீபகாலமாக இந்த டப்பிங்கிற்கும் ஏஐ பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏஐயின் பயன்பாடு டப்பிங் துறையில் உண்மையில் தாக்கத்தை கொடுக்குமா? என பேசியுள்ளனர் டப்பிங் கலைஞர்கள் பாலசூர்யா மற்றும் அவரது மனைவி பவித்ரா. இதுதொடர்பாக ராணி ஆன்லைனுக்கு அவர்கள் அளித்துள்ள நேர்காணலை காணலாம்.


டப்பிங் கலைஞர்கள் பாலசூர்யா & பவித்ரா

காதல் திருமணம் நடந்தது எப்படி?

பாலசூர்யா: நான் டப்பிங் பயிற்சியாளராக இருந்தேன். பவித்ரா எனது மாணவியாக இருந்தார். முதலில் ஒரு ஆசிரியர்- மாணவருக்கு இடையேயான உறவுதான் எங்களுக்குள் இருந்தது. ஒருவருடத்திற்கு பிறகு அவர் டப்பிங் கலைஞரானார். நானும் டப்பிங் கலைஞர். அப்படியே சென்றுக்கொண்டிருந்தபோது, ஒரேத்துறையில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். வேலைமீதும் பவித்ரா ஆர்வமாக இருப்பார்கள். இப்படிப்பட்ட பெண்தான் வேண்டும் என்ற எண்ணம் முன்கூட்டியே இருந்தது. அதனால் எங்கள் உறவு திருமணத்தில் முடிந்தது.

பவித்ரா: இது எனக்கு தெரியாது. நான் இவரிடம் டப்பிங் பயிற்சி எடுத்துவந்தேன். அதோடு நடிப்பும் சொல்லிக்கொடுத்தார்கள். குறும்படங்களில் நடித்தேன். டப்பிங்கும், நடிப்பும் எப்படி இணைந்தது? இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம் என்ன போன்றவற்றை இவர்தான் கற்றுக்கொடுத்தார். இரண்டும் இணைந்தால் எப்படி வரும் என்பதையும் அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அப்போது என்னைப் பற்றி அவருக்கு தெரிந்தது.


கார்ட்டூனுக்கு குரல் கொடுக்கும்போது வாய்ஸ் டோன் முக்கியம் - டப்பிங் கலைஞர் பவித்ரா

திரைத்துறையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

பாலசூர்யா: எனக்கு சின்ன வயதில் இருந்தே படங்கள் பார்க்க ஆர்வம் அதிகம். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒருதரப்பினருக்கு படம் பார்த்தால் சந்தோஷமாக இருக்கும். மற்றொரு தரப்பினருக்கு படம் பார்த்தும் அதன் தாக்கம் ஒருவாரத்திற்கு இருக்கும். நான் இரண்டாவது தரப்பு. எப்படி நடித்தார்கள்? எப்படி படம் எடுத்தார்கள்? அதை எப்படி செயல்படுத்தியிருப்பார்கள்? என அதன் சிந்தனையாகவே இருக்கும். காலேஜ் வரும்போதே எனக்கு தெரிந்துவிட்டது. படிப்பைவிட இதில்தான் ஆர்வம் அதிகம் என்று. அதனால் அதை நோக்கியே பயணத்தை தொடர்ந்தேன்.

பவித்ரா: என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் குரல் நன்றாக இருக்கிறது எனக் கூறுவார்கள். அதை சொல்லசொல்ல ஒரு சேனலில் விஜேவாக முயற்சி செய்தேன். வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஆர்ஜேவாக முயற்சி செய்தேன். அதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீட்டில் மீடியா பக்கம் சென்றால், படிப்பு போய்விடும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் மனதில் டப்பிங் இருந்துகொண்டே இருந்தது. படித்து முடித்தவுடன் இதில் முயற்சி செய்ய தொடங்கிவிட்டேன்.


அனிமேஷன் கதாபாத்திரம் மோனாவிற்கு குரல் கொடுத்துள்ளார் பவித்ரா

அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்வது எப்படி?

பவித்ரா: கதாபாத்திரம், கார்ட்டூன், வாய்ஸ் ஓவர் என டப்பிங்கில் பல வகைகள் உள்ளன. கதாபாத்திரத்தை பொறுத்தவரை வயது, உடல்வாகு, அவர்களுடைய வேலை என்ன போன்றவற்றை பார்த்தால்தான் அவர்களுக்கு எப்படி குரல் கொடுக்கவேண்டும் என்பது நமக்கு தெரியும். கார்ட்டூனுக்கு டோன் என்பது முக்கியம். மூக்கு, தொண்டை, வயிறு என மூன்று இடங்களிலிருந்து கார்ட்டூனுக்கு குரல் கொண்டுவருவோம்.

பாலசூர்யா: அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் கொஞ்சம் குண்டாக இருக்கிறது என்றால், அடிவயிற்றிலிருந்து குரல் வரவேண்டும். அதுவே கதாபாத்திரம் ஒல்லியாக இருக்கிறது என்றால், மூக்கிலிருந்து பேசவேண்டும். உடல்எடையை வைத்து ஒரு குரலை பொறுத்துவோம். இந்த குரல் இதற்கு பொருந்துகிறது எனும் முடிவை ஸ்டூடியோவின் உரிமையாளர், ஒலி பொறியாளர், இயக்குநர்கள் முடிவு செய்வார்கள்.

மக்கள் யாராவது அடையாளம் கண்டு வாழ்த்தியுள்ளனரா?

பவித்ரா: எங்களை அடையாளம் காண்பது கஷ்டம். கேமராவிற்கு பின்னால்தான் வேலை. நாங்களாக சொன்னால்தான் உண்டு.

நீங்கள் குரல் கொடுத்ததில் மிகவும் பிடித்த கதாபாத்திரம்?

பாலசூர்யா: நிறைய குரல் கொடுத்துள்ளோம். வெப் சீரிஸ்களுக்குத்தான் அதிகம் குரல் கொடுக்கிறோம். குரல் கொடுக்கும்போது அது என்ன படம், கதாபாத்திரம் பெயர் என்ன? கொரியன் சீரிஸா என எதுவும் தெரியாது. குரல் கலைஞர்களுக்கு இந்த விவரங்களை சொல்லக்கூடாது என விதிமுறைகள் உள்ளன. படம் வெளியில் வரும்போதுதான் நமக்கு தெரியும். நிறைய சீரியல்களில் பேசியுள்ளோம். எனக்கு பிடித்தது, வெப் சீரிஸுகளில் மற்ற மொழிகளுக்கு குரல் கொடுக்கும்போது, அதுதொடர்பான கலாச்சாரத்தையும் குரலில் கொண்டுவர வேண்டும். காட்சிக்கான சூழ்நிலையையும், கதாபாத்திரத்தின் மனநிலையும் குரலில் கொண்டுவருவதுதான் சவாலான விஷயம்.


டப்பிங்கிற்கு படிப்பு அவசியமில்லை

டப்பிங் கலைஞருக்கு என்ன திறன் அவசியம்?

பவித்ரா: நிறையபேர் இதற்கு படிப்பு முக்கியம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கென்று தனியாக படிக்கவேண்டாம். இயற்கையாகவே குரல் அழகாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. குரலை எப்படி பண்பேற்றி கொண்டுவருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அவர்கள் எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. லிப்ஸிங், வரிகளை சரியாக கவனிக்க வேண்டும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பண்பேற்றுவது போன்றவற்றை செய்தாலே சரியாக வந்துவிடும்.

பாலசூர்யா: காட்சிக்கு ஏற்றவாறு குரலை பொறுத்தவேண்டும். சரியான இடத்தில் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் சொல்வதை புரிந்துகொள்கிறார்கள் என்றால் அதை நடைமுறைப்படுத்துவது எளிது. டப்பிங்கிற்கு படிப்பு முக்கியமில்லை. ஆனால் டப்பிங்கில் படிப்பு தேவை. சினிமாவில் எதை செய்கிறோம் என்பதைத்தாண்டி எதை செய்யக்கூடாது என்பதில் தெளிவிருக்கவேண்டும். அதை டப்பிங் கலைஞர்கள் தெளிவாக சொல்லிக்கொடுத்து விடுவார்கள். புரிதல் இருந்தால் போதும்.

மாற்று மொழிகளுக்கு முன்னரே டயலாக் பேப்பர் கொடுத்துவிடுவார்களா?

பாலசூர்யா: டிராக் இருக்கும். மற்ற மொழிகளுக்கும் சரி, ஹாலிவுட்டுக்கும் சரி ட்ராக் இருக்கும். முதலில் அவர்கள் பேசுவதை காட்டுவார்கள். அது என்ன மொழி என்பது நமக்கு தெரியாது. அந்த கதாபாத்திரம் பேசியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு டிராக்கில் இருக்கும். அந்த மொழிபெயர்ப்பை கேட்டு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் பேசவேண்டும். டயலாக் என்றால் அதை அப்படியேத்தான் வாசித்து இருப்பார்கள். நாம்தான் அதை பேசவேண்டும்.


டப்பிங் கலைஞர் பாலசூர்யா

படத்திற்கு டப்பிங் செய்வது கடினமா? கார்ட்டூனுக்கு டப்பிங் செய்வது கடினமா?

பவித்ரா: அனைத்துமே காட்சியை பார்த்து புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. எதுவுமே கடினம் கிடையாது. பண்ண பண்ண வந்துவிடும். காட்சியை பார்த்து கதாபாத்திரத்தை உள்வாங்க வேண்டும். கதாபாத்திரம் என்ன மாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். அதனால் அந்த உணர்ச்சியை சரியாக கையாளவேண்டும். உள்வாங்கினால் எதுவும் கடினம் கிடையாது.

பாலசூர்யா: ஈடுபாடும், புரிதலும் இருந்தால்போதும். தொடர் ஆர்வம் இருந்தால் கஷ்டம் தெரியாது.

உணவில் கட்டுப்பாடு இருக்கிறதா?

பாலசூர்யா: இல்லை. ஐஸ்கீரிம் சாப்பிடக்கூடாது, சூடாக தண்ணீர் குடிக்கக்கூடாது என்றெல்லாம் எதுவும் கிடையாது. அவரவருக்கு என்ன செட் ஆகிறதோ அதுபோல இருந்து கொள்ளலாம்.

பவித்ரா: ஆனாலும் சில் தண்ணீர் குடிப்பது, ஐஸ்கிரீம் சாப்பிடாமல் இருக்கலாம். நாம் முந்தைய தினம் ஒரு குரல் கொடுத்திருப்போம். அதேபோல குரல்ஒலி தொடரவேண்டுமென்றால், இதையெல்லாம் சாப்பிடாமல் அதேகுரலில் கொடுத்தால்தான் சரியாக இருக்கும்.


மனித குரலில் இருக்கும் உயிரோட்டத்தை ஏஐ-ஆல் கொடுக்க முடியாது

ஏஐ தாக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பாலசூர்யா: எல்லா கண்டுபிடிப்புகளுமே 50% வரவேற்கத்தக்கது, 50% ஆபத்து நிறைந்தவையாக இருக்கும். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் உயிரோட்டம் என்பது மனிதன் பேசும்போதுதான் இருக்கும். விஜயகாந்த், விவேக் போன்ற இறந்த கலைஞர்களுக்கு ஏஐ-யில் குரல்கொடுப்பது தவறு கிடையாது. ஏனெனில் உண்மைத்தன்மை அதில்தான் வரும். சிலர் மிமிக்ரி செய்வார்கள். அது தவறு கிடையாது. ஆனால் ஒரு தெலுங்கு படம் வருகிறது என்றால், கதாநாயகனின் தெலுங்கு குரலை வைத்தே தமிழில் அவர் பேசுவதுபோல் வைத்தால் அது நன்றாக இருக்காது. அதான் தெலுங்கில் அவர் பேசிவிட்டாரே. நமது கலாச்சாரம் தெரிந்த ஒருவர் டோன், பண்பேற்றம், உணர்ச்சிகளை குரலில் கொடுக்கும்போதுதான் சரியாக இருக்குமேதவிர, ஏஐ கொடுக்கும்போது சரியாக இருக்காது.

பவித்ரா: மிமிக்ரி, டப்பிங்கான வித்தியாசத்தைதான் பாலசூர்யா கூறினார். மிமிக்ரி என்பது இமிடேட் செய்வது. டப்பிங் என்பது ரீ-ப்ளேஸிங் வாய்ஸ். குரலை இடம் மாற்றி கொடுப்பதுதான் டப்பிங்.

பாலசூர்யா: காட்சியின் உயிரோட்டத்தை ஏஐ-ஆல் கொடுக்கமுடியாது என்பது என் கருத்து.

Updated On 30 Sept 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story