சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பைக்கு பதிலாக கருப்பைக்கு வெளியே குழாயில் கரு வளரும். இது எக்டோபிக் கர்ப்பம் எனப்படுகிறது.
ஆனால் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் 30 வயதான கர்ப்பிணிக்கு கர்ப்பப்பைக்கு பதிலாக கல்லீரலுக்குள் குழந்தை வளர்ந்துள்ளது. இது இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.
உலகில் இதுவரை 8 பேருக்கு மட்டுமே இவ்வாறு நடந்துள்ள நிலையில், இந்தியாவில் இது முதல்முறை என்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பிட்ட பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்துவந்த நிலையில், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் பெண்ணின் கர்ப்பப்பை காலியாக இருந்தது.
பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டதில், கல்லீரலின் வலது பக்கத்தில் கரு கண்டுபிடிக்கப்பட்டது.
அது இதயத்துடிப்புடன் 12 வார கருவாக வளர்ந்திருந்தது. கல்லீரலில் இருந்து வரும் இரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கியுள்ளன.
இதுபோன்ற கர்ப்பம் தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கல்லீரல் சிதைவு அல்லது பெரும் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.
அப்பெண் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Explore