பூமியில் உள்ள அனைத்து செல்களிலிருந்தும் விந்தணுக்கள், மிக மிக வேறுபட்டவை என்கிறார் பிரிட்டனின் டண்டீ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சாரா மார்டின்ஸ்.
விரைப்பைக்குள் விந்தணுக்கள் உருவாகும்போது, வட்டமான செல் போல இருக்கும் அவை, வியத்தகு மாற்றம் பெற்று, வால் கொண்டதாக உருமாறுகிறதாம்.
மனித உடலில் உள்ள வேறு எந்த உயிரணுவும் அதன் அமைப்பையோ, வடிவத்தையோ இவ்வளவு தனித்துவமான முறையில் மாற்றுவதில்லையாம்.
மனித உடலுக்கு வெளியே உயிர் வாழக்கூடிய ஒரே செல்லான விந்தணு, ஆணின் உடலுக்குள் உருவாகி முதிர்ச்சியடைய 9 வாரங்கள் ஆகுமாம்.
வெளியேறாத விந்தணுக்கள் உடலிலேயே மடிந்து, உடலால் மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. வெளியேறும் விந்தணுக்கள், கருமுட்டையை நோக்கி சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றன.
ஆணுறுப்பிலிருந்து விந்துணு வெளியேறிய பிறகு, நுண்ணிய வடிவிலான இந்த செல்கள் ஒவ்வொன்றும், கருமுட்டையை நோக்கி வால் போன்ற பகுதியைப் பயன்படுத்தி முன்னோக்கி செல்லுமாம்.
கருமுட்டையை அடைய 50 மில்லியனுக்கும் அதிகமான விந்துக்கள் போட்டியிடுமாம். விந்தணுக்களின் தலைப்பகுதியில் உள்ள கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்குமாம்.
இதற்காக விந்துக்கள் தங்கள் வால்களை அடித்துக்கொண்டு, தங்களை முன்னோக்கி நகர்த்தி, இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்புகொண்டால் மட்டுமே, அது கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முடியும்.