ஆடி மாதம் என்றாலே, கூழும் கருவாட்டு குழம்பும்தான் பலருக்கும் ஞாபகம் வரும். அதுவும் நல்லெண்ணெய்யில் கிராமத்து ஸ்டைலில் வைக்கப்படும் கருவாட்டு குழம்பு என்றால் அதன் சுவையே தனிதான்.
தேவையான பொருட்கள் : வாளை கருவாடு - 8 துண்டுகள், சின்ன வெங்காயம் - 20, தக்காளி - 2, பூண்டு - 20 பல், புளி - நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - 6 ஸ்பூன், மிளகாய் தூள் - 2 ஸ்பூன்..
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மல்லித் தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி.
கடாயை அடுப்பில் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் பூண்டு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன், அதில், கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு 10 நிமிடங்களுக்கு மூடி போட்டு சமைக்கவும்.
இதனிடையே மற்றொரு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாடு துண்டுகளை போட்டு 3 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில், வறுத்து வைத்துள்ள கருவாடு துண்டுகளை எண்ணெய்யுடன் அப்படியே போட்டு கலந்து, 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு அடுப்பை அணைத்தால் கமகம கருவாட்டு குழம்பு தயார்.
Explore