இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய வாழ்க்கை சூழலில் ஆணுக்கு நிகர் பெண் என்ற நிலையை எட்டி பிடிக்க பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அதிலும் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் வளர்ச்சியும் அபரிமிதமாகவே இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் விடா முயற்சியும், போராட்ட குணமும்தான். அப்படியானதொரு போராட்ட குணத்துடனும், நம்பிக்கையுடனும், ஆண்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஜிம், அதாவது உடலை வலிமைப்படுத்தும் பாடி பில்டிங் துறையில் ராதிகா டேனியல் என்ற பெண்மணியும் சாதித்து வருகிறார். சென்னையில், மிகச்சிறந்த உடற்பயிற்சி கூடத்தை நடத்தி தொழில்முனைவோராக வலம் வரும் இவர், இத்துறையில் சாதித்தது எப்படி? எதிர்கொண்ட சவால்கள் என்ன? என்பது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதன் நேர்காணலை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆண்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த இந்த துறையில் ஒரு பெண்ணாக நீங்கள் சாதித்தது எப்படி?

பெண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி கூடங்களை நாடுகின்றனர். ஆனால், பெண்களுக்கென்று தனித்துவமாக உடற்பயிற்சி கூடங்கள் இயங்குகிறதா என்றால் மிகவும் குறைவுதான். அப்படியான நிலையில்தான், எங்களின் குடும்ப நண்பரான இம்மானுவேல் என்பவர் ஆண்களுக்கென்று ஒரு உடற்பயிற்சி கூடத்தை நடத்திவந்தார். அதேபோல் பெண்களுக்கென்று தனியாக இருந்தால் நன்றாக இருக்கும். என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும் இன்றும் வீட்டைவிட்டு வெளியே வந்து ஜிம் போன்ற உடற்பயிற்சி கூடங்களுக்கு வர யோசிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அந்த தயக்கத்தை முதலில் உடைக்க வேண்டும் என்றால் பெண்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு உடற்பயிற்சி கூடத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும் என்று எங்களிடம் பேசினார். முதலில் எனது கணவரிடம் இதுபற்றி விளக்கினார். நான் பி.காம் முடித்துவிட்டு சீக்கிரமே திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டதால் வெறும் குடும்ப தலைவியாக மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தேன். நாலு பேருக்கு முன்நின்று பேசக் கூட தைரியம் இல்லாமல் இருந்த என்னை வெளியில் கொண்டுவந்து, இன்று என்னை இதுபோன்ற ஒரு இடத்தில் அமர வைத்திருப்பது என் கணவரின் நண்பரான இம்மானுவேல்தான். அவர் பெண்களுக்காக ஆரம்பித்த ஜிம்மை முழுக்க முழுக்க கவனித்துக்கொள்ளும் படிதான் முதலில் என்னை கேட்டார். பிறகு என்னிடம் ஒரு தயக்கமும், பயமும் இருந்ததை கண்டு, எனக்குள் வேறு என்ன திறமை இருக்கிறது? எதில் ஆர்வம் இருக்கிறது? என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஒரு கணக்காளராக இங்கு பணியில் அமர்த்தினார். இப்படித்தான் எனது ஜிம் பயணம் ஆரம்பித்தது.


ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஃபிட்டாக இருக்க வேண்டும் - ராதிகா டேனியல்

இன்று நான் இந்த அளவுக்கு வந்திருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் என் கணவர் கொடுத்த உத்வேகம்தான். ஜிம் தொடர்பான விஷயங்களில் அவருக்கு ஆர்வமும் அதிகம் உண்டு. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது எனது கணவரின் எண்ணம். அதற்காக நான் சில காலம் ஜிம் பயிற்சிகளை மேற்கொண்ட அனுபவங்களும் இருக்கிறது. என்னை இந்த துறைக்குள் கொண்டுவந்த இம்மானுவேல் ஒரு வழக்கறிஞர். அவர் ஒரு கட்டத்தில் வழக்கறிஞர் தொழிலையும் பார்த்துக்கொண்டு, இதையும் கவனிக்க முடியவில்லை என்றுகூறி, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என எங்களிடம் ஒப்படைத்துவிட்டார். எந்த ஜிம்மில் ஒரு கணக்காளராக எனது பணியை தொடங்கினேனோ, அதே ஜிம்மின் முதலாளியாக, பெண் தொழிலதிபராக இன்று நான் வலம் வருகிறேன். அவர் செய்த உதவியால் இன்று நானே தனியாக ஒரு உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறேன். இங்கு பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி வந்து செல்ல வேண்டும், யாராலும் அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது என்று முழுவதும் பெண்களை மட்டுமே வைத்து இந்த பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறேன். இங்கு எந்தவொரு ஆணுக்கும் அனுமதி கிடையாது. பிளம்பர், எலக்ட்ரீசியன் வந்தால்கூட ஜிம்மில் பெண்கள் இல்லாத நேரமாக பார்த்துதான் உள்ளே அனுமதிக்கிறோம்.

ஜிம்மிற்குள் வருவதற்கு மிகவும் தயங்கியதாக கூறினீர்கள்? அந்த தயக்கத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாமா?


டிரெட்மில் உடற்பயிற்சி

எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோல், எனக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. என்னுடைய தோற்றம், உடை இவற்றாலும் ஒரு தயக்கம், பயம் இருந்தது. அந்த பயம் உடைந்து, தைரியமிக்க பெண்ணாக நான் என்னை உணர ஆரம்பித்தது ஜிம்மில் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்த பிறகுதான். ஆரம்பத்தில் ஜிம்மிற்கு போகும்போது யாருக்கும் தெரியாமல் தயங்கி தயங்கி மறைந்து போன நான், ஒரு கட்டத்தில் அதே ஜிம் கொடுத்த நம்பிக்கையால் தலைநிமிர்ந்து போக ஆரம்பித்தேன். மேலும் அந்த ஜிம்மில் நம்முடன் இருக்கும் சக பெண் தோழிகளின் மோட்டிவேஷனல் கதைகளும் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. அப்படி கிடைத்த அனுபவங்கள்தான் என்னை தொழிலதிபராக இங்கு அமர வைத்துள்ளது. யாரோ ஒருவர் போட்ட விதை இன்று விருட்சமாகி நிற்கிறது என்றால் அது சாதாரணமான விஷயம் கிடையாது. என் வெற்றிக்கு பின்னாலும் இங்கு பணியாற்ற கூடிய நிறைய பெண் தோழிகள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

இந்த ஃபிட்னஸ் துறைக்குள் வந்த பிறகு நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?


பெண்களுக்கான எடை தூக்கும் பயிற்சிகள்

வேலைக்கு செல்வதையே அங்கீகரிக்காத ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் நான். அப்படியிருக்கும்போது நான் முழுநேர பணியாக இதை செய்ய ஆரம்பித்தபோது நிறைய தடைகளும், பிரச்சினைகளும் அவ்வப்போது வந்தன. இன்றைக்கும் வந்து கொண்டிருக்கிறது. காரணம் குடும்பத்தையும் கவனித்து, வேலையையும் கவனிப்பதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. டைம் மேனேஜ்மென்ட் மிகவும் அவசியம். வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் கொடுக்க வேண்டும். தொழில் ரீதியாக பார்த்தால் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட சிறு சிறு இழப்புகளை தவிர வேறு எந்த பிரச்சினைகளையும் கடவுள் புண்ணியத்தில் நாங்கள் சந்திக்கவில்லை. காரணம் இங்கு அனைவருமே ஒன்றிணைந்து செயல்படுகிறோம். அதற்கு பல பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். வரும் காலங்களில் சிட்டி முழுவதும் பெண்களுக்கென்று இதுபோன்ற நிறைய உடற்பயிற்சி கூடங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

நிறைய இடங்களில் உடபிற்பயிற்சி கூடங்கள் செய்யல்பட்டு வருகின்றன. உங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு என்று ஏதும் தனித்துவமான சிறப்புகள் இருக்கிறதா?


உடற்பயிற்சி செய்வதன் மூலமாக பெண்களின் தயக்கம், பயம் உடைக்கப்படுகிறது

மற்ற இடங்களில் பெண்களுக்கென்று உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட்டாலும், அதில் பயிற்சி கொடுக்கும் ட்ரெய்னர்கள் ஆண்களாக இருப்பார்கள். ஆனால், எங்கள் கூடத்தில் நாங்கள் ஆண்களை அனுமதிப்பதே இல்லை. ஒரு பெண்ணை சேர்த்துவிட அவர்கள் வீட்டில் இருந்து முதலில் அப்பாவோ அல்லது அண்ணனோ யாரோ ஒருவர் வருவார்கள். அப்படி வந்தால் கூட வெளியிலேயே அதற்கென்று தனி ரூம் வைத்து அங்கு மட்டும் அனுமதித்து அவர்களிடம் தகவல்களை வாங்கிகொண்டு அனுப்பிவிடுவோம். இதனால் இங்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அவர்களின் தயக்கம், பயம் முதலில் உடைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் நிறைய முஸ்லீம் பெண்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் தயக்கத்தை உடைத்து இங்கு வரவைக்க வேண்டும் என்று நினைத்தோம். அதுவும் நடந்துவிட்டது. இங்கு நிறைய முஸ்லீம் பெண்கள் எந்த தயக்கமும் இன்றி தைரியமாக வந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செல்கிறார்கள்.

உங்களை போன்று வீட்டை விட்டு வெளியே வந்து சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

எல்லோரும் துணிந்து வெளியில் வாருங்கள். எங்களுடைய தாரக மந்திரமே “ரைஸ் & ஷைன்” அதாவது எழுந்து பிரகாசி. முதலில் எழுந்து ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அப்படியான ஒரு முயற்சியை எடுத்து வைக்க ஆரம்பித்தோம் என்றால், யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். யாராலும் முடியாது என்று ஒன்றும் இல்லை. நம் ஒவ்வொருவராலும் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு.

Updated On 2 Sep 2024 6:37 PM GMT
ராணி

ராணி

Next Story