இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எலும்பு புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? எலும்பு புற்றுநோயை குணப்படுத்த முடியுமா? எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? என்பது குறித்தெல்லாம் பேசியுள்ளார் மருத்துவர் காளிதாஸ். அவர் ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணலை பார்ப்போம்.

மூட்டு அறுவை சிகிச்சையால் பாதிப்புகள் ஏற்படாது - மருத்துவர் காளிதாஸ்

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையால் பாதிப்புகள் ஏற்படுமா?

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மனித குலத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த சிகிச்சையால் பலனடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இன்னும்கூட பொதுமக்கள் மத்தியில், இந்த சிகிச்சை குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தான் இருக்கிறது. இப்போதும் இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு பலரும் பயப்படுகின்றனர். நான் வலியோடு கூட இருந்து கொள்கிறேன், ஆனால் எனக்கு சிகிச்சை வேண்டாம் என்று சொல்கின்றனர். இந்த சிகிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன. முதலில் வலி குறையும். சிகிச்சையை மறுக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் பல தருணங்களை நீங்கள் இழப்பீர்கள். அதாவது கோயிலுக்கு போவது, உட்கார்ந்து பூஜை செய்வது போன்ற சின்ன சின்ன வேலைகளை கூட செய்ய முடியாது. வலியால் அவஸ்தைப்படுவீர்கள். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை யார் யாருக்கெல்லாம் தேவையோ, அவர்கள் எல்லாம் தாராளமாக செய்து கொள்ளலாம். ஒரு சிலருக்கு வலியும், தொற்றும் வரலாம். ஆனால் இதுபோன்ற பாதிப்புகள் ஒருசிலருக்கே ஏற்படும்.

இடுப்பின் அசைவுகள் முன்புபோல இருக்குமா?

நாங்கள் பொதுவாக சொல்லக்கூடியது, அதிகமாக வேலை செய்யாதீர்கள். இடுப்பு எலும்பை மாற்றி வைக்கும்போது, அந்த எலும்பின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான் என வெளிநாடுகளில் சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு நன்றாக இருக்கிறார்கள். தரையில் சம்மணங்கால் போட்டு உட்காராதீர்கள், வெ்ஸடர்ன் டாய்லட் பயன்படுத்துங்கள் போன்றவற்றை மட்டும்தான் சொல்லுவோம். மற்றபடி பெரிதாக எந்த கட்டுப்பாடும் கிடையாது. மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு பலரும் விளையாட்டுப் போட்டிகளிலேயே கலந்து கொள்கின்றனர். அதனால் இந்த சிகிச்சையை தைரியமாக செய்து கொள்ளலாம்.

ஊசிகள் எப்போதும் தற்காலிக தீர்வே, அறுவை சிகிச்சைதான் சிறந்தது - மருத்துவர் காளிதாஸ்

எலும்புகளில் ஊசி போடுவது ஆரோக்கியமானதா?

எலும்பில் ஊசி போட்டால், எலும்பு வீணாகிவிடும், நடக்க முடியாமல் போய்விடும் என்பது போன்ற பல தவறான புரிதல்கள் மக்களிடத்தில் உள்ளன. எலும்பில் ஊசி போடமாட்டோம். இரண்டு எலும்புகளுக்கு இடையே, இணைப்பில்தான் ஊசி போடுவோம். டெண்டினோசிஸ் (தசை நாண்களில் ஏற்படும் வலி, வீக்கம்) இருந்தால், அதன்மீது ஊசிப் போடுவோம். இவை ஒரு தற்காலிக நிவாரணம்தானே தவிர, முழு தீர்வு கிடையாது. இப்போதெல்லாம் மேம்பட்ட சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. முன்னரெல்லாம் ஸ்டிராய்டு மட்டுமே பயன்படுத்துவோம். இப்போதெல்லாம் பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா, ஸ்டெம் செல் தெரபி, போன் மேரோ கான்சென்ட்ரேட் (எலும்பு மஜ்ஜை செறிவு) என வந்துள்ளது. எலும்பு தேய்மானத்தை தடுப்பதோடு, அதனை மீண்டும் உருவாக்க இந்த ஊசிகள் பயன்படுகின்றன. இதைவிடவும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இப்போது வந்துவிட்டன. அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சரியான மருத்துவரை அணுகி, இந்த ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் முன்னரே வேறு ஏதேனும் பாதிப்புகள் உங்களுக்கு உள்ளதா என்பதை சோதனை செய்துவிடுவார்கள். பின்னர்தான் இந்த ஊசிகளை போடுவார்கள். ஊசி ஒரு தற்காலிக தீர்வுதான். நிரந்தர தீர்வுக்கு மாற்று சிகிச்சைக்குத்தான் செல்ல வேண்டும்.

Bone profile என்ற பெயரில் எலும்புகளுக்கென்று தனி பரிசோதனை முறை உள்ளது

தசைநார் கிழிதலை முழுவதுமாக குணப்படுத்த முடியுமா?

குறிப்பிட்ட அந்த தசைநார் எந்த வேலையை செய்கிறது என்பது முதலில் தெரிய வேண்டும். தொடை மற்றும் கால் எலும்பை மடக்கி நீட்டுவதற்கு இருக்கும் திசுதான் தசைநார். அந்த தசைநாரில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால், அதனை கண்டிப்பாக குணப்படுத்த முடியும்.

ஆர்த்ரோஸ்கோபி என்றால் என்ன?

மூட்டு இணைப்பில் மீடியல் (நடுப்பகுதி), கிளாட்டர் என இரண்டு பகுதிகள் உள்ளன. அவற்றில் துளை போட்டு, அதன்வழியாக லைட், கேமரா போன்றவற்றை உள்ளே அனுப்பி, தசைநார்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து சரிசெய்வதுதான் ஆர்த்ரோஸ்கோபி ஆகும். லேப்ராஸ்கோபி மாதிரியேதான் ஆர்த்ரோஸ்கோபி.

எலும்புகளுக்கு ஸ்டெம்செல் சிகிச்சை செய்வது எப்படி?

தற்போதெல்லாம் ஸ்டெம் செல்களை ஒருசில நிறுவனங்கள், அதற்கான உகந்த வழிமுறைகளுடன் பாதுகாத்து வைத்திருக்கின்றன. அவர்கள் மருத்துவ சேவைகளுக்கு வழங்கி வருகிறார்கள். ஆனால் அதிக விலையுடையது. அந்த செல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என அந்த நிறுவனம் சில வழிகாட்டுதல்களை கூறும். அதன்படி அவர்களிடம் அதை வாங்கி, நாம் ஊசிமூலம் செலுத்தினால், கண்டிப்பாக திசுக்கள் மீண்டும் உருவாகும்.

எலும்பு புற்றுநோயை குணப்படுத்த முடியும்

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள சோதனை முறைகள் உள்ளனவா?

போன் புரொஃபைல் (எலும்பு பரிசோதனை) என்ற பெயரில் ஒரு மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வோம். அதில் வீக்கம், ரத்த அளவு, சர்க்கரை அளவு, சிறுநீரக பிரச்சனைகள் ஏதேனும் இருக்கிறதா என பார்ப்போம். ரூமட்டாய்டு ஆர்த்ரிடிஸ் (முடக்குவாதம்) உள்ளதா? யூரிக் அமிலம் அதிகமாகியுள்ளதா? கால்சியம், பாஸ்பரஸ் எவ்வளவு உள்ளது? ‘விட்டமின் டி’ உடலில் எவ்வளவு உள்ளது? என்பதை பரிசோதிப்போம். அப்படி ஒருவேளை சிலருக்கு வாதம் இருந்தால் அவர்களுக்கு சுழற்சி எதிர்ப்பு சிட்ருலினேட்டட் பெப்டைட் (anti-CCP), அணுக்கரு எதிர்ப்பு ஆன்டிபாடிகள் (ANA test) போன்ற ரத்த பரிசோதனைகளை மேற்கொள்வோம். இதனை முழுவதுமாக மேற்கொண்டால் நம் எலும்பு எந்த நிலையில் உள்ளது? பலவீனமாக உள்ளதா என்பதை கண்டறியலாம்.

எலும்புப்புரை மற்றும் முடக்குவாதத்திற்கு உள்ள வித்தியாசங்கள் என்ன?

எலும்புப்புரை (Osteoporosis) நோய் வயதானவர்களுக்கு வரக்கூடியது. எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எலும்பு பலவீனமாவதே எலும்புப்புரை (Osteoporosis) எனக் கூறுகிறோம். உடல் பருமன் அதிகரிக்கும்போது, சரியான டயட் மேற்கொள்ள தவறும்போது இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும். 45 வயதாகும்போது பெண்களின் மாதவிடாய் நின்றுவிடும். இந்த ஹார்மோன் மாற்றத்தால், எலும்பில் உள்ள கால்சியம் அளவு குறைந்து எலும்புப்புரை நோய் வரலாம். அதுபோல நீண்டகாலமாக ஸ்டிராய்டு, போதைப்பொருட்கள் பயன்பாடு இருந்தாலும் எலும்புகள் பாதிப்படையும். முடக்குவாதம் 5 வயதுடைய குழந்தைக்கும் வரும், பெரியவர்களுக்கும் வரும். அதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை கண்டறிவது கடினமானது. சிறு சிறு மூட்டுகள் பாதிக்கப்படும். அதிகாலையில் சிலநேரங்களில் தசைகள் பிடித்துக் கொள்ளும். இடுப்பு வலி, முட்டி வலி வரலாம். முடக்குவாதத்தில் பல வகைகள் உள்ளன. இதற்கெல்லாம் இப்போது நிறைய மருந்துகள் வந்துவிட்டன.

எலும்புக்கு கால்சியம், விட்டமின் டி, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஒமேகா சத்துக்கள் முக்கியமானவை

எலும்பு புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

புற்றுநோய் எதனால் வருகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஒரு சில புற்றுநோய்க்கு காரணத்தை கூறலாம். ஆனால் எலும்பு புற்றுநோய்க்கு இதுதான் காரணம் எனக் கூறமுடியாது. எலும்பு புற்றுநோயை குணப்படுத்த முடியும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம். எலும்பு புற்றுநோய் ஏற்பட்டால், எலும்பில் வலி, வீக்கம் இருக்கும். இந்த வலி, வீக்கம் வரும்போது நாமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஒரு சோதனையை செய்ய வேண்டும். அப்போது ஆரம்ப கட்டத்திலேயே பயாப்ஸி செய்து, புற்றுநோயை கண்டறிந்து அதனை குணப்படுத்தலாம். நிறைய சிகிச்சை முறைகள் தற்போது வந்துவிட்டன. அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வலி, வீக்கம், லேசாக விழுந்தாலும் எலும்பு முறிவு போன்றவையே எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

எலும்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்?

எலும்புக்கு கால்சியம், விட்டமின் டி, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஒமேகா 3 போன்றவை முக்கியமானவை. பால், முட்டை, மீன், இறைச்சி, கீரைகள், உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதுடன், போதுமான அளவு சூரிய ஒளியையும் பெற்றால், எலும்பு ஆரோக்கியமானதாக இருக்கும்.

Updated On 29 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story