இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உண்மையில் யோகா என்றால் என்ன? தியானம் செய்தால் நமது மனம் மற்றும் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா? உடல்நலப் பிரச்சனைகள் சரியாகுமா? உள்ளிட்ட நம்மிடையே இருக்கும் சில பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார் யோகா பேராசிரியர் சந்துரு. மேற்கண்ட சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் விதத்தில் ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலை காணலாம்.


பரமாத்வாவோடு, ஜீவாத்மா ஒன்றிணைதல்தான் யோகா - சந்துரு

யோகம் என்றால் என்ன? யோகா என்றால் என்ன?

யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. ஜோதிடத்தில் நிறைய யோகங்கள் உள்ளன. யோக கலைகளில் யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். கலப்பிடுதல், ஒன்றோடு ஒன்று இணைவது எனக்கூறலாம். பரமாத்மாவோடு, ஜீவாத்மா ஒன்றிணைதல்தான் யோகா. அதற்காக செய்யக்கூடிய பயிற்சிகள்தான் யோக பயிற்சிகள். யோகா, உடல்நலம், மனநலத்தை நன்றாக வைத்துக்கொள்ளும். ஆத்ம பலம் கொடுக்கும். ஆனால் அதனுடைய இறுதி, இறைநிலையோடு இணைவதுதான். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்வோம்.


யோகா பயிற்சி என்பது உடல் மற்றும் மனதுக்கு நலம்பயக்கும் - சந்துரு

யோகா பக்தியுடன் தொடர்புடையதா?

யோகா பக்தியுடன் தொடர்புடையதுதான் என்று முழுமையாக சொல்லமுடியாது. இறைநிலை, யோகம் என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என சொல்லப்படுவதுண்டு. புறவழிப்பாடு, அகவழிப்பாடு, அகத்துள்ளேயே வழிபாடு என சொல்லப்படுகிறது. இவ்வாறு படிநிலைகள் பல உள்ளன. படிநிலைகள் பலவாக இருந்தாலும், முதல்படி பக்தி. உச்சப்படி ஞானம். இன்று யோகாவில் பெரியநிலைக்கு சென்றவர்கள் பக்திநிலையை மறைக்கிறார்கள். ஒருசிலர் பக்தியில் இருந்து வந்ததுதானே எனக் கூறுகிறார்கள்.

யோகாவிற்கு குருமார்கள் அவசியமா?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு எனக்கூறுவார்கள். அதன் அர்த்தத்தை பணம் என்றே அனைவரும் கூறுகின்றோம். ஆனால், எந்தக் கடல் தாண்டினாலும் ஒரு நல்ல குருவை தேர்ந்தெடு என்பதுதான் அந்த பழமொழியின் உண்மையான அர்த்தம். கடவுளே குருவாக வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. உலகில் இருக்கும் அனைத்து வித்தைகளுக்கும் குரு என்பவர் வேண்டும். குருவிடம் கற்றப்பிறகு நீங்கள் தனியாக செய்யலாம். ஆரம்பத்தில் குருவேண்டும். கல்லூரியில் சென்று மருத்துவம் படித்தால்தான் மருத்துவர் என்ற பட்டம் செல்லும். சாதாரண கடைகளில் கிடைக்கும் ஏதோ புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு, பெயருக்கு பின்னால் மருத்துவர் என்று போட்டுக்கொண்டால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் அல்லவா? அதேபோல்தான், முறையாக குருவிடம் சென்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.


சிசுபால மற்றும் பட்டர்ஃபிளை ஆசனம்

மனதை யோகாவால் கட்டுப்படுத்த முடியுமா?

எடுத்தவுடனேயே மனதை கட்டுப்படுத்த முடியாது. அலையும் எண்ணங்களை நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது. மன அலைச்சுழலை குறைக்கமுடியும். முறையான நீண்ட கால பயிற்சிக்குப்பின் மனதை கட்டப்படுத்தலாம்.

உடல்நலத்திற்கு யோகா எந்தவிதத்தில் பயனளிக்கிறது?

சில ஆசனங்களை செய்ய வேண்டும். சிசுபால ஆசனம், பட்டர்ஃப்ளை ஆசனம் அவற்றில் முக்கியமானவை. இந்த இரண்டு ஆசனங்களையும் தினசரி செய்துவந்தால், முதுகு தண்டுவடம் நன்றாக இருக்கும். ஸ்ரீ ரவிசங்கரால் உருவாக்கப்பட்ட சுதர்சன கிரியா மூச்சுப் பயிற்சியை தினமும் மேற்கொள்ளலாம். உடலுக்கு நல்லது. இதனை எல்லோரும் செய்யலாம்.

எந்தவிதமான நோய்களை யோகா தடுக்கும்?

சிறுவயதில் இருந்தே ஒருவர் முறையாக யோகா செய்தால் எந்த நோயும் அவருக்கு வரவே வராது. மரணத்தையே வெல்லலாம் என சொல்கிறார்கள். சர்க்கரை, மன அழுத்தம் இருப்பவர்கள் யோகா செய்தால், அவை 100% குணமாகும். ஒருவேளை நோய் முற்றி இருந்தால், யோகா பயிற்சியின் மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு என்று உள்ள பயிற்சிகளை செய்தால், கண்ணாடியே போடவேண்டாம். ஆனால் அதனை தினமும் செய்யவேண்டும். உடற்பயிற்சியில் கண்பயிற்சிக்கென இரண்டு நிமிடங்களை ஒதுக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் செய்தாலே கண்ணாடி போட்டிருக்கும் அனைவரும் கண்ணாடியை எடுத்துவிடலாம். அதுபோல உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை இருக்கும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தவும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் யோகாவில் பயிற்சிகள் உள்ளன.


மன அழுத்தம் & மன அலைச்சுழலை கட்டுப்படுத்தும் ஆற்றல் யோகாவிற்கு உண்டு - சந்துரு

காலை வேளையில்தான் யோகா செய்ய வேண்டுமா?

யோகா, காலையில்தான் செய்யவேண்டும். அதுதான் சிறப்பு. உடற்பயிற்சி காலையில் செய்யவேண்டும். தியானம் விடியற்காலையில் செய்யவேண்டும். அனைவரும் 4.30 - 6 பிரம்மமுகூர்த்தம் சிறந்தது எனக்கூறுவார்கள். ஆனால் அதைவிட சிறந்தது 03 - 4.30 ரிஷிமுகூர்த்தம். அது அமைதியான நேரம். பெரும்பாலும் யாரும் அந்த நேரத்திற்கு எழுந்திருக்க மாட்டார்கள். 8 கோடி பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அதில் 8 லட்சம் பேர்தான் எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் எழுந்து, கண்ணைமூடி அமர்ந்து, குருமார்கள் எந்த தியானத்தை சொல்லிக் கொடுத்தார்களோ அதை செய்யவேண்டும். ஆரம்பத்தில் அரைமணிநேரம் செய்தாலும், மூன்று, நான்கு வருடங்களுக்கு பிறகு 1 மணிநேரம் தியானம் செய்யவேண்டும். தியானம், உடற்பயிற்சியை ஒரு ஆறுமாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால், நமக்குள்ளே ஒரு உள்ளுணர்வு தோன்றும். நீங்கள் யாரிடமும் எதையும் கேட்கவேண்டிய அவசியமே வராது. தெளிந்த மனநிலை இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும். ஒருவரை பார்த்தாலே அவரை எடைபோடும் தன்மை நமக்கு வந்துவிடும். தியானத்திற்கு அவ்வளவு சக்தி உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு யாரும் தியானம் செய்வதில்லை.


முறையாக யோகா செய்பவர்களுக்கு குறைவான உணவே போதுமானது - சந்துரு

ஆரம்பத்தில் எண்ண ஓட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாது. இதற்கு உதாரணம், கிழவன், வாலிபர் இருவருக்குமே உயிர் உள்ளது. இருவருக்கும் ஒரே அளவு பலம் இருக்கிறதா? என்றால் இல்லை. அப்போது எண்ணங்கள் நிறைய வரும்போது, இது தேவையற்ற எண்ணங்கள் என நமக்கு தெரியும். அந்த எண்ணத்தை நாம் கண்டுகொள்ளக்கூடாது. அதற்கு பலம் கொடுக்கக்கூடாது. இதனை தியானம் செய்ய செய்ய நீங்களே உணர்வீர்கள். மரபணு தொடர்பான நோய்களைக் கூட யோகா மூலம் தடுக்கலாம். உங்கள் தாத்தாவிற்கும், அப்பாவிற்கும் சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், மூன்றாம் தலைமுறையான நீங்கள் தியானம் செய்து அந்த மரபணு வழிமுறையை மாற்றலாம். தியானத்தில் அவ்வளவு சிறப்புகள் உள்ளன. அதனை கற்றுக்கொடுக்க நமக்கு நல்ல குருமார்கள் அமையவேண்டும்.

தியானம், யோகாவிற்கு என்று தனி உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டுமா?

கண்டிப்பாக சைவ உணவுகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். யோகாவை முறையாக செய்தால், நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் யோகா, உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் குறைவான உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது. என் வாழ்க்கையில் பல யோகி, ஞானிகளை எல்லாம் பார்த்துள்ளேன். எனக்கு தெரிந்த யோகி ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஒரு கை அளவு உலர்ந்த திராட்சையை எடுத்துக்கொள்வார். வேண்டுமானால் தண்ணீர் குடிப்பார். அவ்வளவுதான். அவர் உயிருடன் இருக்கிறார். இன்னொரு யோகி தினமும் இரவு மட்டும் பால் குடிப்பார். இது பொய் கிடையாது. இவை நடைமுறைக்கு ஒத்துவருமா? உடல் பலம் கிடைக்குமா? என நாம் கேட்போம். ஆனால் நம்மைவிட அவர்கள் உடலளவில் பலமானவர்கள்தான். நானும் இளம்வயதில் அசைவம் எல்லாம் சாப்பிட்டேன். ஆனால் இப்போது சைவமாக மாறிவிட்டேன். ஒரு நாளைக்கு ஒருவேளை அல்லது இரண்டு வேளைதான் சாப்பிடுவேன். ஆனால் அப்போதைவிட இப்போது உற்சாகமாக இருக்கிறேன்.


உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்தாலே நல்ல உறக்கம் வரும் - சந்துரு

நல்ல தூக்கத்திற்கு எந்த யோகாவை செய்யலாம்?

அனைத்து யோக கலைகளிலும் இளைப்பாறுதல் என்பது இருக்கும். அதாவது யோகப்பயிற்சிகள் செய்து முடித்தவுடன் நாம் சிறிது நேரம் படுத்து ஓய்வு நிலையில் இருக்க வேண்டும். அப்போது பாதத்தில் இருந்து முட்டி, தொடை, வயிறு, தலை என ஒவ்வொரு நிலையாக ரிலாக்சேஷன் செய்ய வேண்டும். இதுபோன்ற பயிற்சிகளை செய்துவந்தாலே இரவில் நன்றாக தூக்கம் வரும். மேலும், காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். வெறும் காலில் நடைபயிற்சி செய்யவேண்டும். யோகா, உடற்பயிற்சியால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கிட்னியில் இருக்கும் கல் போன்றவை குணமாகும். நன்கு உறக்கம் வரும். காலை, மாலை என இருவேளைகளிலும் இந்த பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றுடன் சாத்வீகமான, சத்தான உணவு எடுத்துக் கொண்டாலே உடல் நன்றாக இருக்கும்.

Updated On 9 Sept 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story