இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீப காலமாகவே உடற்பயிற்சியாளர்கள், ஜிம் மாஸ்டர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் ஊக்க மருந்து பயன்படுத்தி உயிரிழப்பு, உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு என பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் அதனை விரைவில் அடையும் பொருட்டு, மருந்துகளும், அளவுக்கதிகமான உடற்பயிற்சியும் மேற்கொள்கின்றனர். இதனால் உடலில் காயங்கள், எலும்பு முறிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. அந்த வகையில் தற்போது இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்ற, பிரபல உடற்பயிற்சியாளர் மணிகண்டன் இறந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவு ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதே இவரது இறப்புக்கு காரணம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது நண்பர்கள்தான் அதிக அளவு ஊக்க மருந்தை மணிகண்டனுக்கு கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். விளையாட்டு வீரர்களும், நன்கு உடல்வாகுடன் இருப்பவர்களும் இதுபோன்று இறக்க என்ன காரணம் என்று பார்ப்போம்.


இறந்துபோன ‘மிஸ்டர் இந்தியா’ மணிகண்டன்

மிஸ்டர் இந்தியா மணிகண்டன்...

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (41). அகில இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்ற பிரபல உடற்பயிற்சியாளரான இவர், தான் வசித்து வந்த பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றையும் நடத்தி வந்தார். சிறுவயதில் இருந்தே தனது அக்கா கணவரைப் போல ஜிம் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன், கடுமையாக உடற்பயிற்களை மேற்கொண்டு, மிஸ்டர் இந்தியா மற்றும் மிஸ்டர் சவுத் இந்தியா பட்டங்களை பலமுறை வென்றார். மேலும் incrediblemani25 என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடற்பயிற்சிகள் குறித்த வீடியோக்கள் குறித்தும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் பிரியாணி திறப்புக் கடை விழா ஒன்றில் பங்கேற்ற மணிகண்டன், அங்கு பிரியாணி சாப்பிட்டுள்ளார். மறுநாள் அதிகாலை ( ஜூலை 2) கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வாந்தியும் எடுத்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்றுள்ளார். அதன்பிறகு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.


ஒரு போட்டியின்போது அதிகளவு ஊக்க மருந்து எடுத்து மேடையிலேயே மணிகண்டன் சரிந்ததாக தகவல்...

அதிகளவு ஊக்கமருந்து... நண்பர்கள் சூழ்ச்சி...

சில ஆண்டுகளுக்கு முன் ஆணழகன் போட்டிக்கு தயாரான மணிகண்டனிடம், அவரது நண்பர்கள் சிலர் ஊக்க மருந்து போட சொல்லி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அளவுக்கதிகமான ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் செலுத்தியதாக அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அப்போட்டியின் போது மேடையிலேயே மணிகண்டன் சுருண்டு விழுந்ததாகவும், அதன்பின்னர் உடல்நிலை சீராக இருந்தாலும் போட்டிகளில் பங்கெடுக்க முடியாமல் போனதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். அவரது சகோதரியும், அளவுக்கு மீறிய ஊக்க மருந்து (ஸ்டிராய்டு) பயன்பாடே மரணத்திற்கு காரணம் எனவும் கூறியுள்ளார். அதேவேளை மணிகண்டனுக்கு சர்க்கரை நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று சர்க்கரை அளவு 600-ஐ தொட்டதாகவும், உடனடியாக சிகிச்சை கிடைக்காததால் மணிகண்டன் உயிரிழந்ததாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். மணிகண்டன் உயிரிழப்பு சம்பவம் உடற்பயிற்சி துறையில் பெரும் அதிர்ச்சியையும், ஊக்க மருந்து பயன்பாடு குறித்த விவாதத்தையும் தூண்டியுள்ளது. மேலும் பொறாமையால் சில நண்பர்கள் அளவுக்கு அதிகமான ஊக்க மருந்து கொடுத்து சூழ்ச்சி செய்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டிய வேளையில் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இது புதிதல்ல. இதுபோல உடற்பயிற்சியாளர்கள் பலர் திடீரென இறக்கும் செய்திகள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.


கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், இளைஞர் ஹரிஹரன், அரவிந்த் சேகர்

கன்னட பிரபலம் புனித் ராஜ்குமார்....

கடந்த 2021-ம் ஆண்டு ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறப்புக்கான காரணத்தை ஆராயும்போது, சரியான தூக்கமில்லாது உடற்பயிற்சி மேற்கொண்டதன் விளைவாக இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதுபோல கடந்த 2023ம் ஆண்டு கடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட ஹரிகரன் என்ற 21 வயது இளைஞர், போட்டிக்கு முன்பு வார்ம் அப் செய்துள்ளார். அப்போது மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். மேலும் பட்டாபிராமில் ஸ்டிராய்டு ஊசிப் போட்டுக்கொண்ட உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். அதேபோல ‘மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்ற, சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவரான அரவிந்த் சேகர் கடந்த 2023ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


அளவுக்கதிகமான உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுவது என்ன?

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் சரியான உணவை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் முன் எத்தகைய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், எந்தெந்த நேரங்களில் எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த உணவில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும் எனக் கூறுகிறார்கள். மேலும் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களை பார்த்து உடற்பயிற்சி மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அதுபோல நம் உடலில் எந்த பாதிப்புகள் இருந்தாலும் அதுதொடர்பாக உடற்பயிற்சியாளர்களிடம் கூற வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அளவுக்கதிகமான உடற்பயிற்சியும் உயிரிழப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கின்றனர். அளவுக்கதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, தசைகள் இறுகி சுறுசுறுப்பு தன்மையை இழக்க செய்யும் எனவும் கூறப்படுகிறது. இது நாளடைவில் மன அழுத்தத்தை உண்டாக்க வாய்ப்பு இருப்பதாகவும் உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஊக்க மருந்துகள் இதய திசுக்களை பாதிப்படைய செய்யும்

அதிகளவிலான ஊக்க மருந்துகள் தரும் விளைவுகள்...

அதிக அளவிலான ஊக்க மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது இதய திசுக்கள் பாதிப்படைகின்றன. மேலும் அதிக ஊக்க மருந்து பயன்பாடு மாரடைப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. அதுபோல நரம்பு செயல்பாட்டை பாதித்து, ஹார்மோன்களிலும் மாற்றத்தை உண்டாக்கும் எனக்கூறப்படுகிறது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சே. ஆகையால் எந்த ஒரு செயலின் விளைவையும் தெரிந்து, பின் அந்த செயலை மேற்கொள்ள வேண்டும். ஊக்க மருந்து பயன்படுத்தி பல விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆகையால் இதுபோன்ற ஊக்க மருந்துகளின் விளைவுகளை புரிந்துகொண்டு, சீரான உடல்திறனின் நலனுக்கு உடற்பயிற்சி, உணவுகளை தவிர மற்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.

Updated On 8 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story