இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ரூ.150–200 கோடி வரை வருவாய் ஒப்பந்தங்களை இழக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் மீதான தடையால் கிரிக்கெட்டர்களின் பிராண்ட் மதிப்பு மற்றும் சம்பளம் போன்றவையும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் தடைவிதிப்பிற்கும், தோனி, கோலி, ரோகித் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் சம்பள குறைவுக்கும் இடையே இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.


ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு இளைஞர்கள் அடிமையாவது என்பது அதிகரித்து வருகிறது. போதைவஸ்து போல இந்த சூதாட்ட செயலிகளுக்கு மக்கள் அடிமையாவது மட்டுமில்லாமல், உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். இப்படி ஆன்லைன் சூதாட்டங்களால் நிகழும் மரணங்கள், பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவையாக இருக்கின்றன. ஏனெனில் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கும் நபர்கள் பணத்தை இழப்பதால் வாழ்க்கையில் பெரிய சிக்கல்களையோ, பாதிப்பையோ சந்திப்பதில்லை. ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பணமும் இன்றி, கடன் வாங்கி இதில் விளையாடுவதால் கடன் சுமை அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த அழுத்தம் தொடரும்போது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டங்களால் பல இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது நடந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில், “ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதை தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் உடனடி ஒப்புதலை தொடர்ந்து மசோதா சட்டமாகவும் மாறியது.

மசோதாவை தாக்கல் செய்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் சூதாட்டங்களால் ஆண்டுதோறும் சுமார் 45 கோடி இந்தியர்கள் மொத்தமாக ரூ.20,000 கோடி வரை இழப்பதாகக் குறிப்பிட்டார். இந்த ஆன்லைன் சூதாட்ட செயலிகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை (money laundering) மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ய பயன்படுத்தப்படுவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கவலை தெரிவித்தார்.


பிரபல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள்

பாதிக்கப்படும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள்...

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச்சட்டத்தால் பல பிரபல விளையாட்டு செயலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. $8 பில்லியன் மதிப்புள்ள Dream11 மற்றும் $2.5 பில்லியன் மதிப்புள்ள Mobile Premier League (MPL) போன்ற பிரபலமான ஃபேண்டசி கிரிக்கெட் தளங்கள் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் முக்கிய நிறுவனங்களில் அடங்கும். இதுதவிர, My11Circle, Howzat, SG11 Fantasy, WinZO, Games24x7, Junglee Games, PokerBaazi மற்றும் Rummy Culture உள்ளிட்ட பிற செயலிகளும் பாதிக்கப்படும். மேலும் ஆன்லைன் ஃபேண்டஸி கேமிங் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, ட்ரீம்11 நிறுவனம் உடனான ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. இதனால் புதிய ஸ்பான்ஸரை தேடும் பணியிலும் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. ட்ரீம்11 நிறுவனம் கடந்த ஜூலை 2023-ல் ரூ. 358 கோடிக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்ததால், இந்த ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், பிசிசிஐ, புதிய ஸ்பான்சர் மூலம் மூன்று வருட ஒப்பந்தத்திற்கு சுமார் ரூ. 450 கோடி வரை வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதிய ஒப்பந்தம் என்பது, 2025 முதல் 2028 வரையிலான காலகட்டத்தில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் இருதரப்புப் போட்டிகள், ஐசிசி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் பன்னாட்டுப் போட்டிகளுக்கும் பொருந்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இருதரப்புப் போட்டிக்கும் சுமார் ரூ.3.5 கோடி மற்றும் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.1.5 கோடி ஸ்பான்சர்ஷிப் வருவாய் ஈட்ட பிசிசிஐ இலக்கு நிர்ணயித்துள்ளது. சட்ட அமலை தொடர்ந்து பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்திவிட்டதாகவும், இலவச போட்டிகள் தொடரும் எனவும் ட்ரீம்11 நிறுவனம் அறிவித்துள்ளது.


பயனர்களின் இருப்புத்தொகையை திருப்பி தருவதாக எம்பிஎல், ட்ரீம் லெவன் அறிவிப்பு

APP-ல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் நிலை?

இந்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை, செயலியில் பணம் கட்டியுள்ள பயனர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தடையால் செயலியில் டெபாசிட் செய்த பணத்தை எப்படி, எப்போது எடுக்கலாம் என்பது குறித்தே பலரும் சிந்துத்து வருகின்றனர். இந்நிலையில் MPL இந்த புதிய சட்டத்தை முழுமையாகப் பின்பற்றுவதாக அறிவித்து, “இந்தியாவில் MPL தளத்தில் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து கேமிங் சலுகைகளையும் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம். எங்களின் முதன்மையான முன்னுரிமை எங்கள் பயனர்களுக்கே. புதிய வைப்புத்தொகைகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் இருப்புகளை தடையின்றி எடுக்க முடியும். இருப்பினும், ஆன்லைன் பண விளையாட்டுகள் இனி MPL தளத்தில் கிடைக்காது” என தெரிவித்துள்ளது. MPL-ஜ தொடர்ந்து ZUPEE,“எங்கள் அனைத்து பயனர்களும் எந்த நேரத்திலும் எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் இருப்புகளைத் தடையின்றி எடுக்கலாம்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. DREAM11 நிறுவனமும், பயனர்களின் இருப்புத்தொகை திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்துள்ளது.

ரூ. 200 கோடி வரை இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்...

பல ஆண்டுகளாக, Dream11, MPL, மற்றும் My11Circle போன்ற ஆன்லைன் விளையாட்டு தளங்கள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஸ்பான்சர்களில் ஒன்றாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சூதாட்ட செயலிகள் தடைச்சட்டத்தால் இவை ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளன. இவற்றின் விலகல் பிசிசிஐக்கு எப்படி இழப்போ, அதுபோல எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கும் இழப்பாக அமைந்துள்ளது. காரணம் மேற்கண்ட செயலிகளுக்கு இவர்கள் விளம்பரதாரராகவும், ஒப்பந்ததாரராகவும் உள்ளனர். ட்ரீம் லெவன் போன்ற ஆன்லைன் விளையாட்டு செயலிகளுடன் கொண்டிருந்த பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிக வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது. கோலி தனது MPL ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.10–12 கோடி சம்பாதித்ததாகவும், ரோகித் சர்மா, டிரீம்11 மூலம் ரூ.6–7 கோடி சம்பாதித்ததாகவும், வின்சோவிடமிருந்து தோனியும் இதே அளவு தொகையை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தடைச்சட்டத்தால், இவர்களின் ப்ராண்ட் மதிப்பும், வருமானமும் குறைய வாய்ப்புள்ளது. அதாவது அவர்கள் ஈட்டும் வருமானத்தில் 20–25% குறையக்கூடும். குறிப்பிட்டு கூறவேண்டுமானால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் இந்திய வீரர்களுக்கு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும்.


பிரபல கேமிங் நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிஸடர்களாக இருக்கும் தோனி, கோலி

இந்த செயலிகளின் தடை தாக்கம் கிரிக்கெட்டோடு மட்டும் நின்றுபோகவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த விளம்பரச் சந்தையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் 7–8% பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் டிஜிட்டல் விளம்பரச் செலவுகளில் 15–20% பங்களிப்பை வழங்குகின்றன. இவற்றின் பங்களிப்பின் மதிப்பு ஆண்டுதோறும் ரூ.8,000–10,000 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Updated On 2 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story