வாரத்தில் ஒருநாள் மட்டும் நாஞ்சில் விஜயன் என்னுடன் இருந்தால் போதும்! திருநங்கை வைஷு கெஞ்சல்?
சின்னத்திரை கலைஞர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை வைஷு என்பவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் என்ன, இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன என்பது குறித்து காணலாம்.;
கடந்த வாரம் முழுவதும் இணையத்தை பரபரப்பாக வைத்திருந்த விவகாரம்தான் நாஞ்சில் விஜயன் - விஜே வைஷு காதல் சர்ச்சை. தானும், நாஞ்சில் விஜயனும் 6 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்ததாகவும், அப்போது பாலியல் ரீதியாகவும் உறவில் இருந்ததாகவும், ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னிடம் பேசுவதை நாஞ்சில் நிறுத்திவிட்டதாகவும் விஜே வைஷு புகார் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட நாஞ்சில் விஜயன், தான் வைஷுவை சகோதரியாக மட்டும்தான் பார்த்ததாகவும், இதற்குமேல் இதுகுறித்து பேசவேண்டாம் எனவும் தெரிவித்தார். அதற்கும் விளக்கமளித்து வைஷு மீண்டும் வீடியோ வெளியிட்டார். இப்படி இருக்க இந்த விவகாரம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார் திருநங்கை ஜாஸ்மின். பிக்பாஸில் பங்கேற்பதற்காக வைஷு இப்படி செய்துவருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாதம்பட்டி - ஜாய் கிரிசில்டா பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில், கிரிஸில்டாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டு புகாரளித்ததாக கூறிய வைஷுவின் முழு குற்றச்சாட்டு குறித்தும், அந்தக் குற்றச்சாட்டின் உண்மை பின்னணி குறித்தும் காணலாம்.
நாஞ்சில் விஜயன் மீது புகாரளித்த திருநங்கை வைஷு
திருநங்கையை ஏமாற்றிய நாஞ்சில் விஜயன்?
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல காமெடி கலைஞராக பணியாற்றி வருபவர் நடிகர் நாஞ்சில் விஜயன். பல ரியலிட்டி ஷோக்களில் காமெடி கலைஞராக கலந்து கொண்டிருக்கிறார். அன்புள்ள கில்லி, நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நாஞ்சில் விஜயனுக்கும், மரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது பெண்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை வைஷு என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் நாஞ்சில் விஜயன் கிட்டத்தட்ட 7 வருடங்களாக தன்னை காதலித்து வந்ததாகவும், பாலியல் ரீதியாக தன்னுடன் உறவில் இருந்ததாகவும், ஆனால் கடந்த ஆறு மாதங்களாக தன்னிடம் பேசுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக நேர்காணல்களிலும் கலந்துகொண்ட பேசிய அவர், தானும், நாஞ்சில் விஜயனும் கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் நண்பர்களாக பழகி வந்ததாகவும், இடையில் நாஞ்சிலுக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அவருக்கு ஆறுதலாக இருக்க அடிக்கடி அவரை சென்று பார்த்ததாகவும், அப்போது அவரை பிடிக்க தனது காதலை அவரிடம் தெரிவித்ததாகவும் திருநங்கை தெரிவித்துள்ளார். முதலில் நாஞ்சில் விஜயன் காதலை மறுத்ததாகவும், பின்னர் காதலை ஏற்றுக் கொண்டதாகவும், 2018 முதல் தாங்கள் காதலித்து வந்ததாகவும், மேலும் பாலியல் ரீதியாக உறவில் இருந்ததாகவும் கூறியுள்ளார். தன்னால் குழந்தை பெற்றுத்தர முடியாது என்ற காரணத்தினால் நாஞ்சிலுக்கு தானே திருமண வரன்கள் தேடியதாகவும், அப்போதுதான் தனது தோழியான மரியாவை நாஞ்சிலுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடன் பேசுவதை நாஞ்சில் விஜயன் நிறுத்திவிட்டதாகவும், அவரது மனைவிதான் தன்னுடன் பேசக்கூடாது என நாஞ்சிலை கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆறு மாதங்களாக தன்னை அனைத்து தளத்திலும் நாஞ்சில் விஜயன் ப்ளாக் செய்து விட்டதாக திருநங்கை வைஷு கூறியுள்ளார்.
திருநங்கை வைஷு & மனைவியுடன் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் (இடது)
இதுதொடர்பாக மேலும் பேசியுள்ள திருநங்கை, “திருமணத்திற்கு பிறகும் இருவரும் உறவில் இருந்தோம். குழந்தை பிறந்த பிறகுதான் என்னுடன் நாஞ்சிலை பேசவிடாமல் மரியா தடுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். இனிமேல் என்னிடம் பேசுவது சரியாக இருக்காது எனக்கூறி ஒதுக்கிவிட்டார். என்னுடைய நம்பரை அனைத்திலும் முடக்கிவிட்டார். வேறு யாருடைய நம்பரிலிருந்து அழைத்தாலும் பதிலளிக்க மறுக்கிறார். திருமணம் செய்தாலும் என்னுடன் உறவில் இருப்பேன் எனக் கூறினார். அதை நம்பித்தான் அவர் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன். ஆனால் இப்போது பேச மறுக்கிறார். என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார். அதனால்தான் காவல் ஆணையரிம் புகார் அளித்தேன்” என வைஷு தெரிவித்துள்ளார். தன்னிடம் மீண்டும் பழைய மாதிரி பேசினால்தான் புகாரை வாபஸ் வாங்குவேன் என்றும், அப்படி வாங்கினாலும் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பேன் என எழுதிவாங்கிவிட்டுதான் விடுவேன் என்றும், ஒருவேளை இதற்கு நாஞ்சில் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவரை கைது செய்ய கூறுவேன் எனவும் கூறியுள்ளார். மேலும் அவரும், நாஞ்சில் விஜயனும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார் வைஷு.
ஜாய் கிரிசில்டாவின் புகாரைத் தொடர்ந்து திருநங்கை வைஷுவும் புகார்
இன்ஸ்பிரேஷன் ஆன ஜாய் கிரிசில்டா...
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ரங்கராஜ் மீது கிரிசில்டா புகார் கொடுத்த பின்புதான், தனக்கும் நாஞ்சில் மீது புகார் கொடுக்க தைரியம் வந்தது எனக் கூறியுள்ளார் திருநங்கை வைஷு.
வனிதா விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய சூர்யாதேவி, நாஞ்சில் விஜயன்
சர்ச்சைகளுக்கு பெயர்போன நாஞ்சில் விஜயன்...
நாஞ்சில் விஜயன் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டிக்டாக்கில் வீடியோக்கள் போட்டுவந்த சூர்யாதேவி என்பவருடன் நாஞ்சில் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. அதனை வனிதாதான் வெளியிட்டார். வனிதா - பீட்டர் பால் திருமணம் தொடர்பாக நாஞ்சில் விஜயன், சூர்யாதேவி விமர்சிக்க, இந்த ஃபோட்டோவை வனிதா வெளியிட்டார். ஆனால் வனிதாவின் புகாரின்பேரில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு ஆதரவாக பேசினார். அப்போது சூர்யாதேவி ஆள் வைத்து நாஞ்சில் விஜயனை அடித்ததாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது. இவர்களின் இந்த பிரச்சனை அப்போது பெரிதாக பேசப்பட்டது.
இதனிடையே 2023-ல் சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளை நடிகை கும்தாஜுடன் இணைந்து ஆன்லைன் மூலம் பிளாக்கில் விற்றதாகவும் நாஞ்சில் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வாறு சர்ச்சைகளுக்கு பெயர்போன நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை வைஷு தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நாஞ்சில் விஜயன் விளக்கம்...
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நடிகர் நாஞ்சில் விஜயன், “என்னுடன் பல வருடங்களாக நீங்கள் வாழ்ந்ததாக தெரிவித்தீர்கள். அப்படி நான் உங்களுடன் இருந்திருந்தால் உங்கள் வீட்டு உரிமையாளரிடம் கேட்போம், அவர்களுக்கு தெரியாமல் இருக்காது. நான் உங்களை காதலித்ததாக சொன்னீர்கள், இப்படி மனசாட்சி இல்லாமல் பேசுகிறீர்கள், நான் உங்களை சகோதரியாக மட்டுமே பார்த்து பழகினேன். என்னுடன் நன்றாக பழகிவிட்டு என்னை காதலிப்பதாக தெரிவித்தீர்கள். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை என்று நான் தெரிவித்து விட்டேன். திருமணத்திற்கு பிறகு இரவு நேரங்களில் வைஷு ஃபோன் செய்வார். இதனால் எனது மனைவி என்னை திட்டுவார். அதன் காரணமாகவே வைஷுவை அனைத்து தளங்களிலும் நான் பிளாக் செய்துவிட்டேன். அதுபோல எனக்கு திருமணம் செய்துவைத்தது அவர்தான் எனக்கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அவரிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறுகிறார். அப்படி கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் காட்டலாமே.
அதுபோல அவரிடம் பேசியிருந்தால் ஐ லவ்யூ, பட்டுமா, தங்கம் என ஒரு வார்த்தையை கூடவா நான் சொல்லியிருக்கமாட்டேன். அந்த வாட்ஸ் ஆப் சாட்டை காட்டலாமே. ஏன் என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளீர்கள். எனக்கு அவமானமாக இருக்கிறது. எனது குடும்பத்தினருக்கும் அவமானமாக இருக்கிறது. தயவு செய்து இனிமேல் இந்த பிரச்சனையை விட்டுவிடுங்கள். நீங்கள் செய்தது செய்ததாகவே இருக்கட்டும், நாங்கள் இந்த பிரச்சனையை மறந்துவிட்டோம். நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்” எனத் தெரிவித்தார். மேலும் ஒருவேளை உங்களிடம் பழகியது உங்களது மனதை காயப்படுத்தியிருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் நாஞ்சில் விஜயன் மன்னிப்பும் கோரினார்.
திருநங்கை வைஷு மீது குற்றச்சாட்டை அடுக்கிய திருநங்கை ஜாஸ்மீன்...
நாஞ்சில் விஜயனின் விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் பேட்டியளித்த வைஷு தனது தரப்பில் இருந்து மற்றொரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், வாரத்தில் ஒருநாள் மட்டும் நாஞ்சில் விஜயன் தன்னுடன் இருந்தால் போதும் என்றும், மற்ற நாட்களில் ஃபோனில் பேசினாலே போதும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பேசிய திருநங்கை ஜாஸ்மின் இது தொடர்பாக நேர்காணலும் அளித்தார். அந்த நேர்காணில் அவர் பல திடுக்கிடும் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். "இந்த விஷயத்தில் நாஞ்சில் விஜயன் தரப்பில் நியாயம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். காரணம் விஜே வைஷு கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் சீசன் நெருங்கும்போது பேட்டிகள் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இப்போது நாஞ்சில் விஜயன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நாஞ்சில் விஜயனை காதலித்ததாக கூறும் காலக்கட்டத்தில் அவர் வேறொரு ஆணுடன் காதலில் இருந்தார் எனக்கூறி அதற்கான ஆதாரங்களையும் போட்டுக் காட்டினார். மேலும், நாஞ்சில் மீது அவர் கூறும் குற்றச்சாட்டு என்ன? நாஞ்சில் அவரை காதலித்தார். இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டோம் என்பதுதானே. ஆனால் அவர் ஆதாரமாக காட்டும் புகைப்படங்களைப் பார்த்தால் அப்படியான குற்றச்சாட்டுக்கு ஏதுவான ஆதாரமாக இல்லையே? காதல் வாழ்க்கை என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் ஐ லவ் யூ சொன்னது தொடர்பான ஒரு வாட்ஸ் ஆப் சாட் கூடவா இல்லை? நெருக்கமான தருணத்தில் எடுத்த ஒரு புகைப்படம் கூடவா இல்லை? தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பிக்பாஸில் கலந்து கொள்ள தன்னை ஒரு பரபரப்புக்குரியவராக காட்டிக் கொள்ளவே வைஷு இப்படி நடந்து வருகிறார்" என்று திருநங்கை ஜாஸ்மீன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருதரப்பிலும் மாறி மாறி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வரும் நிலையில், போலீஸ் விசாரணை மூலமே உண்மை தெரியவரும் எனக் கூறப்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் பல லட்சம் ஃபாலோவர்களை கொண்ட பிரபரலங்களே இப்படி செய்தால், அவர்களை பின்தொடர்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? தனிமனித ஒழுக்கத்தை பிரபலங்கள் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே புதிய வீடியோ வெளியிட்டுள்ள திருநங்கை வைஷு, நாஞ்சில் விஜயனிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.