பெண்ணின் உடலில் இருந்த மச்சத்தை காட்டிக்கொடுத்த ஏஐ சேலை புகைப்படம்! எச்சரிக்கும் போலீஸ்!

கூகுளின் ஜெமினி ஏஐயின் நானோ பனானா தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் 3டி மாடல் புகைப்படங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பார்க்கலாம்.;

Update:2025-09-23 00:00 IST
Click the Play button to listen to article

அழகான பொருட்களில் ஆபத்து இருக்கும் என பலரும் கூறுவார்கள். அந்த வரிசையில் ஒன்றுதான் தற்போது வைரலாகி வரும் இந்த ஏஐ புகைப்படங்கள். ஏஐ-ஆ? இப்போது எல்லாமே ஏஐ-தானே, நீங்கள் எதை சொல்கிறீர்கள் என பலரும் குழம்புவர். கடந்த வாரம் முழுவதும் நமது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்கள், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் முழுவதும் நமது நண்பர்களின் புகைப்படங்களால் நிரம்பியிருக்கும். என்னடா என்னைத் தவிர எல்லாரும் அப்டேட்டா இருக்கீங்க என்ற அளவு நாம் அதனை பார்த்து வியந்திருப்போம். பெண்கள் புடவை அணிந்துகொண்டு தலையில் பூ வைத்திருக்குமாறும், ஆண்கள் கையில் ரோஜாப்பூ வைத்திருக்குமாறும் மாறி மாறி புகைப்படங்களை பதிவிட்டு வந்திருப்பர். இதில் பல பெண்களும் இதற்கு முன்பு புடவை கட்டிக்கூட இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் புடவை கட்டியிருப்பது போலவும், மாடலிங் ஃபோட்டோஷுட் எடுத்திருந்தது போலவும் புகைப்படங்கள் பதிவிட்டிருப்பர். போதும்டா சாமி என்னை விட்ருங்க என்ற அளவிற்கு நம்மை வெறுப்பேத்திய இந்த ஃபோட்டோக்களுக்கெல்லாம் காரணம் கூகுளின் ‘நானோ பனானா’தான். மனிதன் சொல்வதை அப்படியே உள்வாங்கி, அதன் அறிவுக்கு எட்டிய ஒரு பதிலை தரும் தொழில்நுட்பம்தான் ஏஐ. தற்போதைய காலக்கட்டத்தில் ஏஐ-யின் வளர்ச்சி என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட இந்த ஏஐ-யின் சில செயல்பாடுகள் அவ்வப்போது கவனம் பெறும். அப்படி தற்போது கவனம் பெற்றதுதான் நம் நண்பர்கள் பலரும் பதிவிட்டு வரும் ஏஐ இமேஜ்கள்.  இந்தப் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? இந்த தொழில்நுட்பத்தின் பின்னணி என்ன? திடீரென இவை கவனம் பெறுவதற்கான காரணம் என்ன? என்பதை பார்ப்போம்.    


ட்ரெண்டான AI சேலை மாடல் ஃபோட்டோகிராஃபி 

ஜெமினி நானோ பனானா...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையம் முழுவதும் ட்ரெண்டான ஏஐ அனிமேஷன்தான் கிப்லி ஆர்ட். சாட் ஜிபிடியால் உருவாக்கப்பட்ட இந்த கிப்லி ஆர்ட்டை போல, தற்போது கூகுள் ஜெமினியின் நானோ பனானா ட்ரெண்டாகி வருகிறது. அதாவது ஒரு கம்ப்யூட்டர் டெஸ்க் டாப் அருகே நமது மினியேச்சர் படத்தை உருவாக்குவது, கேங்ஸ்டர் பட ஹீரோ, ஹீரோயின் போல லாங் கோட்டோடு புறாக்கள் பறக்க பின்னணியில் நிற்பது, சிகரெட் புகைக்கும் 80-ஸ் ஹீரோ போல் காட்சி கொடுப்பது, சேலையில் ஒரு பக்க காதருகே பூவோடு வசீகரமாக மிளிர்வது என ஜெமினி ஏஐ புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இவை அனைத்திற்கும் காரணம் இந்த நானோ பனானாதான். இந்த நானோ பனானாவில் நமது புகைப்படத்தை பதிவிட்டு, என்ன ப்ராம்ட் வேண்டுமோ அதை உள்ளிட்டால், நாம் கேட்டதுபோல நம் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, 3டி லுக்கில் கிடைக்கும். வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களையும் இந்த நானோ பனானா தொழில்நுட்பம் கவர, அனைவரும் தங்கள் புகைப்படங்களை எடிட் செய்து போட ஆரம்பித்தனர்.


அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் AI

அதனை தங்கள் வாட்ஸ்ஆப் டிபியாகவும் வைக்கத் தொடங்கினர். இப்படி இந்தியா முழுக்க ட்ரெண்டாக, இதன் விளைவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். காரணம் ஒரு பெண், நானோ பனானாவில் சுடிதார் அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால் அது புடவையில் வரும்போது கையில் மச்சம் இருப்பதுபோல காட்டியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், என் கையில் மச்சம் இருப்பது ஏஐ-க்கு எப்படி தெரிந்தது? இது பயமாக இருக்கிறது என தெரிவித்தார். இதற்கு விளக்கம் அளித்த நிபுணர்கள், ஜெமினி என்பது கூகுளின் டூல். இந்த ஏஐ டூல் நீங்கள் கொடுக்கும் ப்ராம்ட்டைக் கொண்டு படத்தை மீள் உருவாக்கம் செய்யும்போது உங்களுடைய அனைத்து ஸ்டோர்டு படங்களையும் ஒரு பார்வையிடும். அப்படித்தான் உங்களுடைய பழைய படங்களில் இருந்து மச்சத்தை அடையாளம் கண்டு இந்தப் படத்தில் புகுத்தியிருக்கும்” என்றனர். மேலும், ஏஐ, நாம் கொடுக்கும் ப்ராம்ட்டுக்கு ரியலிஸ்டிக் படத்தை உருவாக்கும் கட்டளையை உள்வாங்கியிருக்கும். அதனால், நாம் கேட்டவுடன் அது நம் டிஜிட்டல் ஃபுட்பிரிண்ட் முழுவதிலும் உலாவந்துவிட்டு அச்சு அசலாக இல்லாவிட்டாலும் அசலுக்கு நெருக்கமான படங்களைத் தருகிறது என்று கூறுகின்றனர்.


வைரலான கம்ப்யூட்டர் டெஸ்க் டாப் மினியேச்சர் மாடல் (ரஜினிகாந்த் - நாகர்ஜுனா)

ஏஐ-ஆல் உண்டாகும் அச்சம்...

இதனிடையே இதனைப்பார்க்கும் பலரும் மீண்டும் ஏஐ-யால் ஏற்படும் வேலை இழப்புகள், படைப்பாற்றல் திறன் பாதிப்பு குறித்து பேசத் தொடங்கியுள்ளனர். அதாவது நீண்டகாலமாகவே ஏஐ-யின் வளர்ச்சியால் மனித வேலைவாய்ப்பு என்பது குறைந்து வருகிறது. அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட், கூகுள், போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் நடந்த பணி நீக்கங்களை கூறலாம். இது ஒருபக்கம் இருக்க சமீபமாக நாம் சொல்லும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல்கள், இசைக்கூட ஏஐ-யால் உருவாக்கப்பட்டு தரப்படுகிறது. இதனால் கலைத்துறையில் இருக்கும் பலரும் பாதிப்படையக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் இதுபோன்ற ஏஐ தொழில்நுட்பம் மக்களிடையே பெரும் கவலையை உண்டாகியுள்ளது. என்னதான் ஏஐ மனிதன் விரும்பும் அனைத்தையும் செய்தாலும், அது இதை செய்யவேண்டும் என்ற உள்ளீட்டை மனிதன்தான் கொடுக்கவேண்டும். அதாவது இப்போது ட்ரெண்டான இந்த ஏஐ புகைப்படங்களில் கூட, நமது புகைப்படம் எப்படி வேண்டும் என்பதை நாம் ப்ராம்ட்டாக கொடுக்கவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஏஐ-யாகவே இருந்தாலும் அதனை செயல்படுத்த படைப்பாற்றல் சிந்தனை கொண்ட மனிதன் தேவை. அதனால் ஏஐ படைப்பாற்றாலை விழுங்கிவிடாது, யாருடைய வேலையையும் பறித்துக் கொள்ளாது. மாறாக, படைப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். என்று கூறப்படுகிறது. 


ஜெமினி ஏஐ-யின் கருவியே நானோ பனானா..

நானோ பானாவை பயன்படுத்துவது எப்படி?

நானோ பனானா என்பது ஜெமினியின் புகைப்பட எடிட்டிங் கருவியாகும். கூகுளின் டீப் மைண்ட் (Deep Mind) பிரிவினர் இதை வடிவமைத்துள்ளனர். நானோ பனானா மூலம் உங்களின் புகைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என ஜெமினியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  முதலில் கூகுள் ஜெமினிக்குள் செல்லவேண்டும். அது நமது லாகினை கேட்கும். எந்த அக்கவுண்டை லாக் செய்ய விரும்புகிறீர்களோ, அதை லாகின் செய்யலாம். கூகுள் கணக்கு இல்லாதவர்கள் அப்போதே கணக்கு தொடங்குவதற்கான ஆப்ஷனும் கொடுக்கப்படும். பின்னர் கூகுள் ஏஐ ஸ்டூடியோவில் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜை (Nano Banana) தேர்வு செய்தால் சிறிய வாழைப்பழம் போன்ற ஒன்று திரையில் தோன்றும். பின் உங்களுக்கு எந்தப் படம் வேண்டுமோ அதை தேர்வு செய்து பதிவேற்றவேண்டும். பின்னர் என்ன மாதிரியான எடிட்டிங், என்ன மாதிரி நமக்கு புகைப்படம் வேண்டும் என்பதை ப்ராம்ட் செய்ய வேண்டும். பின் ஜெனரேட் என்ற பட்டனை அழுத்தியதும் நானோ பனானா உங்களின் புகைப்படத்தை எடிட் செய்யத் தொடங்கிவிடும். நாம் எந்த மாதிரியான மாற்றங்கள் வேண்டும் என்று குறிப்பிடிருந்தோமோ அதை மாற்றி அழகாக கொடுக்கும். 

இணையத்தை ஆக்கிரமித்த மீம்ஸ்கள்...

இணையத்தில் வைரலாகும் இந்த 3டி மாடல் ஃபோட்டோக்களை குறிக்கும் வகையில், ஆண்கள் பலரும் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பது போல பதிவிடும் ஃபோட்டோக்களை குறிப்பிட்டு, ‘பெரிய நேரு பரம்பரை, சட்டையில் ரோசாப்பூ குத்தாம வெளிய வரவேமாட்டாரு’ என்னும் கவுண்டமணி, செந்தில் காமெடி டயலாக்கும், நாம் சொன்னவாறு எடிட்டிங்கில் வரவில்லை என்றால், “படிக்க தெரிஞ்சா படி, தப்பு தப்பா படிச்சி அடிவாங்கி சாகாத சொல்லிட்டேன்” என ஏஐ-ஐ திட்டுமாறு மானஸ்தன் பட சரத்குமார், வடிவேலு பட காமெடியும், “பாஸ் பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரி பளபளனு இருக்கீங்க” என தலைநகரம் படத்தின் வடிவேலு காமெடியும் வைத்து பல மீம்ஸ் டெம்ப்ளேட்டுகள் இணையத்தில் உலா வருகின்றன.

விளைவுகள்...

இதுபோன்ற ஆப்களில் அல்லது தொழில்நுட்பகளில் நமது புகைப்படங்களையும், தனிப்பட்ட சில தகவல்களையும் கொடுப்பது ஆபத்து என நீண்டகாலமாகவே தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். காரணம் ஒருமுறை நாம் இவற்றிடம் புகைப்படத்தை கொடுத்தால் அதை அழிக்க முடியாது. அதுபோல நீங்கள் ஏஐ-யிடம் புதிதாக ஏதேனும் கேட்கும்போதெல்லாம், அது நீங்கள் கேட்ட முந்தைய கேள்விகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டே பதில் அளிக்கும். கூகுள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது குறித்து பல வாக்குறுதிகளை கொடுத்தாலும், நாம் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படங்களை பதிவிடும்போது, அவற்றை ஹேக் செய்து தவறானவற்றிற்கு பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். அதனால் இதுபோன்ற ட்ரெண்டிங்கில் ஈடுபடுவதற்கு முன்பு பலரும் விளைவுகளை அறிந்து பின்னர் செயல்படுங்கள்.


சேலையில், ஒரு பக்க காதருகே பூவோடு ஒளிரும் பெண்களின் புகைப்படங்கள் 

காவல்துறை கூறுவது என்ன?

புகைப்படத்தை எடிட் செய்து அதை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் பதிவிடும்போது ஹேக்கர்கள் இதனை பயன்படுத்தி தவறான காரியங்களுக்கு உங்கள் புகைப்படத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் நீங்கள் சைபர் கிரைம் குற்றத்திலோ, மோசடியிலோ சிக்கக்கூடும் என்றும், எனவே யாரும் இதுபோன்ற செயலியை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி அதனை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கின்றனர். "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதுபோல அல்லாமல், முன்னெச்சரிக்கையாக இருப்பதே உத்தமம்!

Tags:    

மேலும் செய்திகள்