9 வயது சிறுமிக்கு ரத்தப்போக்கு! ஆதரவற்றோர் இல்லத்தில் கொடூரம்! சமரசம் பேசிய பாதிரியார்?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், 9 வயது சிறுமியை பள்ளியின் தாளாளரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-09-30 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் மரபில் ஆசிரியர்களுக்கு பின்தான் தெய்வம் என்ற சொற்றொடர் இருக்கிறது. அதற்கு காரணம் தாயின் அன்பையும், தந்தையின் அறிவுரைகளையும் மாணவர்களுக்கு வழங்கி, தங்கள் அனுபவங்கள் மூலம் மாணவர்களை உலக அனுபவங்களை பெறச்செய்யும் படிப்பறிவை கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். முகத்தை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் அடியுங்கள் எனக்கூறி, ஆசிரியர்களிடத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை விடுவார்கள். அப்போதுதான் ஒழுக்கமாக வளருவார்கள் என்பது பெற்றோரின் நம்பிக்கை. ஆனால் அப்படிப்பட்ட ஆசிரியர்களே சமீபகாலமாக ஒழுக்கமற்றவர்களாக இருப்பதுதான் இங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள், சிறுமிகள் என பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் கல்வி அறிவை வழங்கும் ஆசிரியர்களாலேயே அது நிகழ்த்தப்படுவது இன்னும் வேதனையளிக்கிறது. இந்நிலையில் ஒசூரில் உள்ள ஒரு காப்பகத்தில், 9 வயது சிறுமி கடந்த 8 மாதங்களாக காப்பகத்தின் உரிமையாளாரல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை மறைக்க பள்ளித் தாளாளரின் மனைவியும், பாதிரியார் ஒருவரும் துணைநின்றது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கிருஷ்ணகிரி தனியார் காப்பகத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

தனியார் காப்பகம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மத்திகிரி பகுதியில் ‘பெசோ’ என்ற பெயரில் தனியார் காப்பகம் ஒன்று கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த காப்பகத்தை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாம்கணேஷ்(63) என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். தாளாளாருக்கு உதவியாக அவரது மனைவி ஜோஸ்பின் (61) என்பவரும் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். காப்பக வளாகத்தில் பெசோ நர்சரி அண்ட் பிரைமரி என்ற பெயரில் ப்ரீகேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளியும் நடத்தப்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் சிறுவர், சிறுமியர் என மொத்தம் 33 பேர் தங்கி உள்ளனர். காப்பகத்தில் 7 ஆசிரியர்கள், 2 உதவியாளர்கள், 1 வாட்ச்மேன் என மொத்தம் 10 பேர் வேலைசெய்து வந்தனர். காப்பகத்தில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு நிதி உதவி மூலம் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை வழங்கப்பட்டு வந்துள்ளன. மேலும் அதே பணத்தில் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. 

9 வயது சிறுமிக்கு தாளாளரால் பாலியல் தொல்லை!

இந்த காப்பகத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த தந்தையை இழந்த 9 வயது சிறுமி 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்.9ஆம் தேதி சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என காப்பக நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. தகவலறிந்து காப்பகத்திற்கு சென்ற சிறுமியின் தாய், ரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி சோர்வாக இருந்ததை பார்த்துள்ளார். உடனடியாக சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதனால்தான் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் இதுகுறித்து விசாரிக்க, பள்ளி தாளாளர் தன்னிடம் தவறாக நடந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், தனது உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சென்று, காப்பகத்தில்  இதுகுறித்து கேட்டுள்ளார். இதனிடையே சாம்கணேஷ் அழைப்பின்பேரில் அங்குவந்த பாதிரியார் செல்வராஜும், நாதமுரளி என்பவரும் மாணவியின் தாயிடத்திலும், அவரது உறவினர்களிடத்திலும் சமரசம் பேச முயன்றுள்ளனர்.

குற்றவாளி தாளாளர் உட்பட பாதிக்கப்பட்டோரிடம் பேரம்பேசிய 4 பேரும் கைது

மாணவியின் தாயிடம் ரூ.6 லட்சம் பேரம்பேசி அதில் ரூ.1 லட்சம் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. மறுநாள் நாதமுரளி என்பவர் சாம்கணேஷை சந்தித்து மீதமுள்ள ரூ.5 லட்சத்தை கேட்டுள்ளார். ஆனால் பணம்தர மறுத்த சாம்கணேஷ் ஒசூர் ஏஎஸ்பி அக்ஷய் அனில் ஹரோராவை சந்தித்து பணம் கேட்பதாக புகார் அளித்தார். போலீசார் விரிவாக விசாரித்ததில் பாலியல் வன்கொடுமையை மறைக்க பணம் கொடுத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை சாம்கணேஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் இதுதொடர்பாக ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து தாளாளர் சாம்கணேஷ், அவரது மனைவி ஜோஸ்பின், காப்பக ஆசிரியை இந்திரா, பாதிரியார் செல்வராஜ், ஜெராக்ஸ் கடைக்காரர் நாதமுரளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 பேரும் தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த காப்பகத்தில் இருந்த மற்ற சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இந்தியாவின் தண்டனைகள்...

9 வயது சிறுமி, 63 வயது நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது இந்தியாவில் பெண்களுக்கு எப்போதும் நடக்கும் அநீதிகளில் ஒன்று என்னும் அளவிற்குதான் உள்ளது. காரணம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. இதில் ஒருசில குற்றங்கள் பெரிதாக வெளியில் வெடிக்கும்போது தண்டனைகளை கடுமையாக்க சட்டங்கள் திருத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் வழங்கப்படும் கடுமையான சட்டங்கள், மற்ற உலக நாடுகளை காட்டிலும் குறைவு என்ற அளவிலேயே உள்ளது. 


பாலியல் குற்றங்களுக்கு அரபு நாட்டு தண்டனைகளை இந்தியாவில் வழங்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கை

எப்போதும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக இந்தியர்கள் பலரும் முன்வைக்கும் கருத்து அரபு நாடுகள் போல சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றுதான். காரணம் அங்கு பொதுவெளியில் அனைவரின் முன்னிலையிலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 

உலக நாடுகளில் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனைகள் என்ன?

வடகொரியா

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எந்தவித கருணையும் இன்றி, வடகொரியாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளிகள் தலையிலோ அல்லது உடலின் மற்ற முக்கிய பகுதியிலோ சுட்டுக் கொல்லப்பட்டு வந்தனர். ஆனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சியில், பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள அதேநேரத்தில், மறைமுகமாக இந்த தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

சீனா 

சீனாவில் பின்னிருந்து சுட்டுக் கொல்லப்படும் வழக்கம் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது. ஆனால் சமீபகாலமாக இது நடைமுறையில் இல்லை. சில வழக்குகளில் குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்படுகிறது. 

சௌதி அரேபியா

குற்றவாளிகளின் தலை பொது இடத்தில் அனைவரின் மத்தியிலும் துண்டிக்கப்படுகிறது. இல்லையென்றால் கல்லால் அடித்து கொல்லப்படுகின்றனர். பொது இடத்தில் தலை துண்டிக்கப்படும் நடைமுறை சவுதி அரேபியாவில் மட்டும்தான் உள்ளது. 

ஈரான்

குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிடப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர் சம்மதித்தால், மரண தண்டனை நிறுத்தப்படும். அதற்கு பதிலாக 100 சவுக்கடிகள், ஆயுள் தண்டனை வழங்கப்படும்.


அரபு நாடுகளில் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை...

ஆப்கானிஸ்தான்

குற்றம் செய்த 4 நாட்களுக்குள் தண்டனை வழங்கப்படுகிறது. குற்றவாளிகள் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிடப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களே தண்டனை வழங்கும் நடைமுறையும் உள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து

குற்றவாளிகள் தூக்கிலிடப்படுகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில், விசாரணை முடிந்த 7 நாட்களுக்குள் தண்டனை வழங்கப்படுகிறது.

பாகிஸ்தான்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் வன்கொடுமை குற்றங்களில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை வழங்கப்படுகிறது. 

இதுபோன்ற தண்டனை முறைகள் இந்தியாவில் கொண்டுவரப்பட்டால் குற்றங்கள் குறையும் என நீண்டநாட்களாக பொதுமக்கள் கூறிவருகின்றனர். ஆனால் இந்தியாவில் மரணதண்டனை என்பது அரிதாகவே விதிக்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்