முட்டை போடாமல் கேக்கை சாஃப்டாக செய்வது எப்படி?
வீட்டிலேயே ஆரோக்கியமான, சுவையான இனிப்புகளை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அதற்கு யோகர்ட் புளூபெர்ரி கேக் ஒரு சிறந்த தேர்வாகும். முட்டை சேர்க்காமல், எக்லெஸ் முறையில் செய்யப்படும் இந்த கேக், எளிமையான பொருட்களுடன், மிகக் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடியது. மாலை நேர சிற்றுண்டியாகவோ, விருந்தினர்களுக்கு பரிமாறவோ இந்த சுவையான கேக்கை வீட்டிலேயே தயார் செய்து மகிழலாம். புளூபெர்ரியின் சுவையும், யோகர்ட்டின் மிருதுவான தன்மையும் சேர்ந்து ஒரு தனித்துவமான சுவையை நிச்சயம் தரும். அந்த வகையில் இந்த சூப்பரான யோகர்ட் புளூபெர்ரி கேக்கை தயாரிப்பது எப்படி என்பதை ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் லோகேஸ்வரன் தமிழரசன் செய்து காட்டுகிறார்.
புளூபெர்ரி கேக் செய்முறை
* முதலில், ஒரு பெரிய பாத்திரத்தில் 100 கிராம் யோகர்ட் மற்றும் 140 கிராம் சர்க்கரையைச் சேர்த்து, சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்றாகக் கலக்கவும். இதற்கு ஒரு மிக்ஸர் அல்லது விஸ்க் பயன்படுத்தலாம்.
* சர்க்கரை கரைந்ததும், 60 மில்லி பால் சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும். இப்போது, 140 கிராம் மைதா மாவு, 4 கிராம் பேக்கிங் பவுடர், 2 கிராம் பேக்கிங் சோடா ஆகியவற்றைச் சேர்த்து, மாவு எல்லா இடத்திலும் தெறிக்காதவாறு மெதுவாகக் கலக்கத் தொடங்கவும். மாவு ஓரளவு கலந்த பிறகு, வேகத்தைக் கூட்டி, ஒரு சீரான பதத்திற்கு வரும்வரை கலக்கவும்.
மிக்ஸரில் புளூபெர்ரி கம்போஸ் கலவையை கலக்குதல்
* மாவு கலந்த பிறகு, புளூபெர்ரி கம்போஸ் அல்லது பழ நிரப்பை சேர்த்து, மீண்டும் ஒரு முறை மெதுவாக கலக்கவும். இந்த செய்முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட புளூபெர்ரி கம்போஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. புளூபெர்ரி, சிறிது தண்ணீர் மற்றும் சர்க்கரையை சேர்த்து, ஜாம் பதத்திற்கு வரும்வரை வேக வைத்தால், கம்போஸ் தயாராகிவிடும். நேரமில்லாதவர்கள் பேக்கரியில் கிடைக்கும் புளூபெர்ரி பழ நிரப்பியை வாங்கிப் பயன்படுத்தலாம். இப்போது உருகிய வெண்ணெய் சேர்த்து, அவை கலவையுடன் முழுமையாகச் சேரும் வரை நன்கு கலக்கவும்.
* பின்னர் பேக்கிங் மோல்டில் சிறிதளவு வெண்ணெய் தடவி, அதன் மேல் வெண்ணெய் தாளை அதாவது பட்டர் ஷீட்டை ஒட்டி வைக்கவும். இது கேக் ஒட்டாமல் எளிதாக வெளியே வர உதவும். பின்னர், தயாரித்த மாவை மோல்டில் ஊற்றவும். மோல்டின் விளிம்புவரை மாவை நிரப்பாமல், சிறிதளவு இடம் விடவும். இது கேக் உப்பி வரும்போது மோல்டிற்குள்ளேயே அழகாக அமர உதவும்.
உருக்கிய வெண்ணெயை கலவையுடன் சேர்த்து நன்கு கலக்குதல்
* மாவை மோல்டில் ஊற்றிய பிறகு, மோல்டை மெதுவாகத் தட்டி, மாவை சமமாக பரவச் செய்யவும். பின்னர், 180°C வெப்பநிலையில் முன்கூட்டியே சூடாக்கப்பட்ட ஓவன் அடுப்பில் 30 நிமிடங்களுக்கு சுடவும்.
* கேக் வெந்த பிறகு, அடுப்பிலிருந்து வெளியே எடுத்து, 20 நிமிடங்கள் ஆறவிடவும். ஆறிய பிறகு, மோல்டின் ஓரங்களை ஒரு கத்தி கொண்டு மெதுவாக விடுவித்து, கேக்கை வெளியே எடுக்கவும். பின்னர், வெண்ணெய் தாளை நீக்கி, துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.
புளூபெர்ரி கேக்கின் நன்மைகள்
* புளூபெர்ரி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள செல்களை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
* முட்டை சாப்பிடாதவர்களுக்கு அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். இதில் பயன்படுத்தப்படும் யோகர்ட், கேக்கிற்கு மிருதுவான தன்மையையும், புளிப்புச் சுவையையும் தருகிறது.
* யோகர்ட்டின் ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.இது இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, எலும்புகளை வலுப்படுத்துகிறது.மேலும், மனதை இலகுவாக்குவதுடன், புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பையும் அளிக்கிறது.
யோகர்ட் புளூபெர்ரி கேக் ரெடி
* வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இதனைச் செய்யலாம். அதிக நேரம் தேவைப்படாது என்பதால், அவசரமாக இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது இது ஒரு அருமையான தேர்வாகும்.
வீட்டிலேயே குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படும் இந்த யோகர்ட் புளூபெர்ரி கேக், சுவை மற்றும் ஆரோக்கியத்தின் சரியான கலவையாகும். இதை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து, சுவைத்து மகிழுங்கள். மாலை நேர சிற்றுண்டியாகவோ, விருந்தினர்களுக்கு பரிமாறவோ இது ஒரு சிறந்த இனிப்புப் பலகாரம்.