கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: சுவையான வெல்ல அதிரசம்!
கிருஷ்ண ஜெயந்தி என்றாலே அதிரசம் இல்லாமல் கொண்டாட்டம் முழுமையடையாது. அதிரசத்தின் இனிப்பும், அதன் மென்மையான சுவையும் அனைவருக்குமே பிடிக்கும்.;
கிருஷ்ண ஜெயந்தி என்றாலே அதிரசம் இல்லாமல் கொண்டாட்டம் முழுமையடையாது. அதிரசத்தின் இனிப்பும், அதன் மென்மையான சுவையும் அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் அதிரசத்தை செய்ய பலர் தயங்குவார்கள். பாகு பதம் பார்த்து செய்ய வேண்டும் என்பதால் பலருக்கும் தயக்கம். இந்நிலையில் வெல்ல அதிரசத்தை மிக எளிமையான முறையில், சில முக்கிய குறிப்புகளுடன் எப்படிச் செய்வது என்பதை சமையல் கலைஞர் லதா நமக்காகச் செய்து காட்டுகிறார். கடந்த வாரம் ஸ்ரீ ஜெயந்தி பட்சணமாக வெல்ல சீடை செய்து காட்டிய அவர், இந்த வாரம் அதிரசம் செய்கிறார்.
அதிரசம் செய்முறை
* முதலில், பச்சரிசியை நன்றாக ஊறவைத்து, நன்கு கழுவி, தண்ணீரை வடிகட்டி, உலர வைக்கவும். அரிசி நன்கு காய்ந்ததும், அதை நைஸான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
* அடுத்து, வெல்லத்தைப் பாகு காய்ச்ச வேண்டும். அதற்கு வெல்லத்தை இடித்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு நன்றாக காய்ந்ததும், அதை வடிகட்டி, அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
* பாகின் பதம் மிகவும் முக்கியம். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு துளி பாகை விட்டால், அது உருண்டை பிடிக்கக்கூடிய பதம் வர வேண்டும். இந்த பதத்தை "தக்காளி பதம்" என்று குறிப்பிடுவார்கள்.
அதிரச மாவை வட்ட வடிவில் தட்டுவது...
* பாகு சரியான பதத்தில் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளற வேண்டும். மாவு நன்றாக ஒன்று சேர்ந்ததும், அதன் மீது சிறிதளவு நெய் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் அப்படியே ஊற விடவும்.
* மறுநாள், அதிரசம் செய்ய மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, வாழை இலையில் அல்லது எண்ணெய் தடவிய கவரில் தட்டையாக தட்டிக்கொள்ளவும். அதிரசம் பெரியதாகவோ, சிறியதாகவோ அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தட்டிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு சிறிய அளவில் செய்தால் சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்த அதிரசத்தை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும். பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து வேக வைப்பது அவசியம்.
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக வெள்ள பாகில் செய்த அதிரசம்
அதிரசத்தில் உள்ள சத்துகள்
அதிரசத்தில் பயன்படுத்தப்படும் வெல்லம் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல், வெல்லம் குளிர்ச்சியான நேரத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளின் போது அதிரசம் செய்வது, அதன் சுவைக்காக மட்டுமின்றி, அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும்தான். கண்டிப்பாக, நீங்கள் இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு அதிரசத்தை வீட்டிலேயே செய்து பாருங்கள். மேலும் பல பலகார குறிப்புகளுடன் உங்களை அடுத்த வாரம் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்!