போதைப்பொருள் வழக்கில் சிக்கப்போகும் 3 எழுத்து நடிகர், நடிகை! 4 எழுத்து இசையமைப்பாளர்!
போதைப்பொருள் வழக்கில் மூன்றெழுத்து நடிகர், நடிகைக்கும், நான்கெழுத்து இசை அமைப்பாளருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.;
அண்மைக்காலமாகவே தமிழ்நாட்டில் குறிப்பாக இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதனை தடுக்க அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே போதைப்பொருள் தொடர்பான வழக்கில் பிரபலங்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் சிக்கி வருகின்றனர். அண்மையில் மலையாள திரையுலகில் பல நடிகர்கள் போதைப்பொருள் வழக்கில் சிக்கினர். இந்நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைதாகியுள்ளார். இன்று, நேற்று இல்லை வெகுகாலமாகவே இந்த போதைப்பொருள் பயன்பாடு சினிமாவில் உள்ளது என நடிகர் விஜய் ஆண்டனியும் தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் சலசலப்பு அதிகரித்துள்ளது. மோலிவுட், கோலிவுட் வட்டாரங்களில்தான் இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததா என்றால் இல்லை. முன்னரே ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கியுள்ளனர். போதைப்பொருள் புழக்கத்திற்கும், சினிமா வட்டாரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.
கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?
எந்தவித திரையுலக பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஸ்ரீகாந்த். ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’ படங்களில் நடித்தார். அதன்பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பம்பர கண்ணாலே உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தாலும், கலவையான விமர்சனத்தையே பெற்றன. இதனையடுத்து வந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனைத்தொடர்ந்து நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு நண்பன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு 'கொகைன்' சப்ளை செய்ததாக ஆப்ரிக்காவின் கயானாவை சேர்ந்த ஜான் (38) என்பவர் கைது செய்யப்பட்டார். ஒசூரில் கைது செய்யப்பட்ட ஜான் சென்னை அழைத்துவரப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை சப்ளை செய்தார்? என்ற பட்டியலை போலீசாரிடம் கொடுத்தார். அந்த பட்டியலில்தான் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீகாந்திடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்று மருத்துவ சோதனையும் செய்யப்பட்டது. மருத்துவ சோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணா கைது...
ஸ்ரீகாந்தின் கைதை தொடர்ந்து அவரின் நண்பரும், நடிகருமான கிருஷ்ணாவிற்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் கிருஷ்ணா தலைமறைவாக இருந்த நிலையில், அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனையடுத்து தனது வழக்கறிஞருடன் கிருஷ்ணாவே போலீசாரிடம் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனக்கு இரைப்பையில் பிரச்சனை இருப்பதால் தான் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை என தெரிவித்து, தனக்கு இருக்கும் நோய்கள் தொடர்பான சான்றிதழ்களையும் போலீசாரிடம் சமர்ப்பித்தார். தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்தது. இதற்கிடையே விசாரணை குறித்து தனது கூட்டாளிகளுடன் கிருஷ்ணா code word-ல் பேசியதாகவும், அவர் பயன்படுத்தாவிட்டாலும், போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்ததாகவும் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் மேலும் பல சினிமா பிரபலங்கள் இந்த போதைப்பொருள் பயன்பாட்டு வழக்கில் சிக்கலாம் என கூறப்படுகிறது.
நீண்ட காலமாகவே சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக விஜய் ஆண்டனி, மாரி செல்வராஜ் கருத்து
இன்று நேற்று இல்லை... வெகுகாலமாகவே சினிமாத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு...
ஸ்ரீகாந்த் கைது தொடர்பாக நடிகரும், பாடகருமான விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, இன்று, நேற்று இல்லை, வெகுகாலமாகவே சினிமாத்துறையில் போதை பயன்பாடு உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம்தான் போதைப்பொருள் பயன்பாடு. போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது, விசாரணை நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாக நீதிமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் பயன்படுத்தினார் என உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார். விஜய் ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், “போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான். அதில் நடிகர்கள் விதிவிலக்கல்ல” என தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, மலையாளம், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் போதைப்பயன்பாடு உள்ளது.
கோலிவுட் மட்டுமா மோலிவுட், ஹாலிவுட், பாலிவுட்டிலும்தான்!
தற்போது தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டாலும், சினிமாவில் இது புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கூட மலையாள நடிகர்கள் பலரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதாகினர். அண்மையில் விபத்தில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோவும் கைதானது குறிப்பிடத்தக்கது. மேலும் ராப் பாடகர் வேடனும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு மலையாள திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு தலைதூக்கிய நிலையில், எதிர்பாராத சூழலில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுகவின் முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் வழக்கு பெரிதும் பேசப்பட்டு வந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் மகனும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட்...
ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தாண்டி அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அயன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமடைந்த, அமெரிக்க நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், போதைப் பொருள் பயன்பாட்டிலிருந்து மீண்டு வந்தவரே. இதற்கு முன்னரும் பல ஹாலிவுட் நடிகர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் உயிரிழந்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் - நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்
கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன்!
கடந்த 2021-ஆம் ஆண்டு, மும்பை கடற்பகுதியில் ஒரு சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக 20 பேரை போதைப்பொருள் தடுப்புப் படையினர் (என்சிபி) கைது செய்தனர். இதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேரை விடுவிப்பதாக என்சிபி அறிவித்தது. நடிகர் சஞ்சய் தத்தும் போதைப்பொருள் பயன்படுத்தி, பின் கைவிட்டதாக தெரிவித்தார். கடந்தாண்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரரும் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
மன்சூர் அலிகான் மகன் கைது!
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைதும் செய்தனர். இந்த வழக்கில் தனது மகனுக்கு ஆதரவாக பேசாத மன்சூர் அலிகான், பள்ளி, கல்லூரி, சந்தை என தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது எப்படி? தமிழ்நாட்டில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஸ்ரீகாந்த்...
நடிகர்கள் என்பதால் பெரிதாக பேசப்படுகிறதா?
உலகளவிலும், இந்தியாவிலும் நாள்தோறும் பலரும் போதைப்பொருளை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. தினந்தோறும் போதைப்பொருள் வழக்குகளில் ஆயிரம்பேர் கைது செய்யப்படுகிறார்களாம். அப்படி இருக்கையில் திரைத்துறையினர், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மட்டும் பெரிதாக பேசப்படுவது ஏன்? காரணம் திரைத்துறையினர் என்பதால். குறிப்பாக திரைப் பிரபலங்கள் என்றாலே அவர்கள் செய்யும் சிறு விஷயம் கூட பெரிதாக்கப்படுகிறது. மேலும் நடிகர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்ற பொதுக்கருத்தும் முன்னிறுத்தப்படுகிறது. நாம் யாரும் நடிகை, நடிகையரை சக மனிதராக பாவிப்பதில்லை. அவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தது போன்ற ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் திடீரென இதுபோன்ற சர்ச்சைகளில் அவர்கள் சிக்கும்போது, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வமே ஸ்ரீகாந்த் கைது போன்ற செய்திகள் கவனம் பெறுவதற்கு காரணமாக உள்ளது.
மேலும் சிக்கப்போகும் பிரபலங்கள்!
போதைப்பொருள் வழக்கில் மூன்றெழுத்து நடிகர், நடிகைக்கும், நான்கெழுத்து இசை அமைப்பாளருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள தனிப்படை போலீஸார், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் போதைப்பொருள் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்ற தகவலை சேகரித்து வருகின்றனர்.