தாம்பத்ய உறவின்போது மூச்சுத்திணறி மனைவி இறந்ததாக கதறிஅழுது நாடகமாடிய ஜிம் மாஸ்டர்!
திருமணத்தை மீறிய உறவுகளால் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ கொலைசெய்யக்கூட துணிகின்றனர். அப்படியொரு சம்பவம்தான் தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்ட மனைவியை கொலைசெய்துவிட்டு, மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவன் வசமாக சிக்கியுள்ளார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையால் உண்மையை ஒப்புக்கொண்ட கணவனை போலீசார் கைதுசெய்துள்ளனர். ஓசூரில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? பார்க்கலாம்.
திருமணத்தில் முடிந்த ஃபேஸ்புக் காதல்
காட்பாடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 33). இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கின்மூலம் அறிமுகமாகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்துள்ளனர். இப்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலுள்ள ஜூஜூவாடியில் 4 இடங்களில் ஜிம் வைத்து நடத்திவருவதால் அங்குள்ள உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்துள்ளனர். அதில் சசிகலா பெண்களுக்கென்றே பிரத்யேகமாக ஜிம் வைத்து நடத்திவந்துள்ளார். இவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் பாஸ்கருக்கு ஃபேஸ்புக்கின்மூலம் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த பெண்ணும் அவருடைய ஜிம்மில் சேர, பாஸ்கருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்று உல்லாசமாக இருப்பதும், ஊர் சுற்றுவதுமாக இருந்துவந்துள்ளனர். பாஸ்கர் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பது சசிகலாவுக்கு தெரியவர இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது. இருவரின் குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துவந்துள்ளனர். கணவரின் இந்த நடத்தையால் சசிகலா கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்.
மனைவி சசிகலாவை கொலைசெய்த ஜிம் மாஸ்டர் பாஸ்கர்
அழுது நாடகமாடிய கணவன்!
இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு பாஸ்கர் தனது மனைவி சசிகலாவுடன் தாம்பத்ய உறவில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது திடீரென சசிகலாவின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதாகக்கூறி அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்திருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சசிகலா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் முன்பு பாஸ்கர் அழுது நாடகமாடி இருக்கிறார். இருந்தாலும் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சசிகலாவின் குடும்பத்தினர் தெரிவிக்க, உடலை கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பரிசோதனையில் சசிகலாவின் கழுத்தில் காயங்கள் இருப்பது தெரியவர, போலீசாரின் சந்தேகம் பாஸ்கர் பக்கம் திரும்பியிருக்கிறது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. தனது திருமணத்தை மீறிய உறவுக்கு சசிகலா இடைஞ்சலாக இருப்பதாக நினைத்த பாஸ்கர் அவர்மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். ஏப்ரல் 30ஆம் தேதி இரவு அவரை தீர்த்துக்கட்ட நினைத்த பாஸ்கர், சமாதானமாக பேசி அவரை தாம்பத்ய உறவுக்கு அழைத்திருக்கிறார். சசிகலாவும் நம்பி போக, இருவரும் ஒன்றாக மது அருந்தியிருக்கின்றனர். வேண்டுமென்றே மனைவிக்கு அதிகப்படியான மதுவை குடிக்கக் கொடுத்த பாஸ்கர், வித்தியாசமான முறையில் தாம்பத்யத்தில் ஈடுபடலாம் என்று கூறி அவருடைய கை, கால்களை கட்டிப்போட்டிருக்கிறார். அப்போது சசிகலாவின் நிதானமற்ற சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு துணியால் கழுத்தை இறுக்கி நெறித்துள்ளார். இதனால் சசிகலாவின் மூக்கில் ரத்தம் வந்ததாக தெரிகிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். தாம்பத்ய உறவு என்று சொல்லும்போது பிரச்சினையில் சிக்கமாட்டோம் என்று நினைத்த பாஸ்கரின் திட்டம் அவரை வசமாக சிக்கவைத்திருக்கிறது.
தாம்பத்ய உறவின்போது கழுத்தை நெறித்து கொலை
கதறும் சசிகலாவின் குடும்பத்தார்
சசிகலா இறந்தவுடன் பாஸ்கர், தனக்கு ஃபோன் செய்து, உங்களுடைய மகள் மூச்சுத்திணறி இறந்துவிட்டார் என்று கூறி அழுது நாடகமாடியதாக சசிகலாவின் அப்பா கண்ணீர் மல்க கூறியுள்ளார். திருமணமானதிலிருந்தே சசிகலாவிடம் அடிக்கடி பணம் கேட்டு பாஸ்கர் தொந்தரவு செய்துவந்ததாகவும், வேறொரு பெண்ணுடன் இருந்த தொடர்பை தட்டிக்கேட்ட தன் பெண்ணை கொலைசெய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். சசிகலாவின் மரணம் குறித்து அவருடைய உறவினர் பெண் ஒருவர் கூறும்போது, “என்னுடைய அக்கா தனது மகளை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். இவன் அவளை திருமணம் செய்துகொண்டபிறகு அடிக்கடி காசு கேட்டு தொல்லை கொடுத்தான். பெங்களூருவிலிருந்த வீட்டை விற்று 55 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறோம். அவ்வளவு பணத்தை வாங்கிக்கொண்டு எங்களுடைய பெண்ணை கொன்றுவிட்டான். இவ்வளவு கஷ்டப்பட்டு பெண்களை வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்துகொடுக்கிறோம். அப்படியிருக்கையில் இப்படி செய்தால் வாழமுடியுமா? எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரைகூட இரண்டு பேரும் நன்றாகத்தான் இருந்தனர். இப்போது ஒரு பெண்ணுடன் பாஸ்கர் தொடர்பு வைத்திருக்கிறான். அதை எங்களுடைய பெண் கேட்டதும், உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறிக்கொண்டே இருந்தான். மேலும் என்னைவிட்டு போய்விடு, எனது மகன்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் தொடர்ந்து கூறிவந்திருக்கிறான். இப்போது அடித்து சாகடித்துவிட்டான்” என்று கதறி அழுகிறார்.
திருமணத்தை மீறிய உறவுகளால் கொலை குற்றங்கள் அதிகரித்திருப்பதாக காவல்துறை தகவல்
சசிகலாவின் தந்தை பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “நான்தான் கொலைசெய்தேன் என்று அவன் போலீசாரிடம் ஒத்துக்கொண்டான். தான் தான் கை, கால்களையெல்லாம் கட்டிப்போட்டு வாயில் துணியைக் கட்டி சாகடித்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். இருந்தாலும் நாங்கள் போலீசாரிடம் புகார் எழுதிக்கொடுத்தால் இப்படி எழுத வேண்டாம், நாங்கள் சொல்வதைப் போன்று எழுதுங்கள் என்று கூறி, எங்களிடம் எழுதி வாங்கிக்கொண்டனர். முதலில் சசிகலாவின் உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் இருந்தது. இப்போது அதை கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை. அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது ஏற்கனவே தெரியும். முன்னமே 3 முறை வேறு வேறு காவல்நிலையங்களில் அவன்மீது புகார் அளித்திருக்கிறோம். அப்போதும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இப்போது எங்களுடைய பெண்ணின் உயிரே போய்விட்டது. இப்போதாவது நியாயம் வாங்கிக் கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.