பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம்! - அரசு உத்தரவு
2019ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கியது பொள்ளாச்சி பாலியல் வழக்கு. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், ‘அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்க’ என்று கெஞ்சி, கதறி அழும் ஆடியோக்கள் ஊடகங்களில் பரவி அனைவரையும் பதைபதைக்க வைத்தன. இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் தைரியமாக புகாரளிக்க, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. 9 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடியின் வசம் முதலில் கொடுக்கப்பட்டு பின்னர் சிபிஐ வசம் சென்றது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் மே 13ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருமே குற்றவாளிகள் என நிரூபணமான நிலையில் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வரவேற்பு அளித்துவருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கலாம்.
வீடியோ ஆதாரங்களால் சிக்கிய குற்றவாளிகள்!
2016 - 18க்கு இடைப்பட்ட காலத்தில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பல்வேறு இளம்பெண்களை ஆசைவார்த்தை காட்டி தனியாக அழைத்துச்சென்று அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி, மீண்டும் பாலியல் உறவில் ஈடுபட அழைத்திருக்கின்றனர். இதற்கு உடன்படாத பெண்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி, அதையும் வீடியோவாக பதிவு செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் குறித்து முதலில் சரிவர விசாரிக்கப்படாத நிலையில், அப்போதைய எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டனர். வழக்கில் இந்த மூவர் தவிர வேறு சிலரும் ஈடுப்பட்டிருந்ததை வீடியோ ஆதாரங்கள்மூலம் கண்டறிந்த போலீசார் அவர்களுடைய செல்போன் தொடர்புகளை வைத்து தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். தேடுதல் நடந்துகொண்டிருந்தபோதே குறிப்பிட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. தலைமறைவாக இருந்துகொண்டு இந்த செயலில் ஈடுபட்ட திருநாவுக்கரசு என்பவரை மார்ச் 5ஆம் தேதி போலீசார் கைதுசெய்தனர். அவருடைய செல்போனில் இதுபோன்று நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்துபோன போலீசார் அவருடன் தொடர்புடையவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் 9 குற்றவாளிகள்
ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் அதிமுக பிரகமுகர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதால் போலீசாரின் விசாரணையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, வழக்கானது மார்ச் மாத இறுதியில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் வழக்கானது ஏப்ரல் மாத இறுதியில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. திருநாவுக்கரசு மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடைய நபர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்த சிபிஐ போலீசார், அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள், கூட்டு பாலியல் வன்முறை வீடியோக்கள் இருப்பதை கண்டறிந்தனர். அவற்றை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக வைத்து, பாதிக்கப்பட்ட பெண்களை தனிப்பட்ட முறையில் அடையாளம்கண்டு அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கினர். அந்த கவுன்சிலிங்கின்போது அதுவரை வெளியே வராத இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களின் பெயரும் வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக, சபரி ராஜனின் லேப்டாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான வீடியோ ஆதாரங்கள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முதலில் கைதுசெய்யப்பட்ட சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர்மீது அதே ஆண்டு மே 24ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ. இதனையடுத்து கைதான அருள் ஆனந்தம் மற்றும் ஹேரோன் பால் ஆகியோர் மீது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதியும், அருண்குமார் மீது அதே ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்
சாகும்வரை ஆயுள் தண்டனை!
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய அடையாளம் வெளியே தெரிந்துவிடும் என்று பயந்ததால் முதலில் வழக்குக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் இந்த வழக்கை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் போதிய ஆதாரங்களை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் 10க்கும் குறைவானவர்களே முதலில் வாக்குமூலம் தந்தனர். இதற்கிடையே சபரிராஜனின் லேப்டாப் மற்றும் திருநாவுக்கரசின் செல்போன் ஆகிய இரண்டிலுமே பெரும்பாலும் ஒரே மாதிரியான வீடியோக்களே இருந்ததால் அவற்றில் விருப்பப்பட்டு மற்றும் பணத்துக்காக வந்தவர்கள் யார் யார்? உண்மையிலேயே மிரட்டி கூட்டிவரப்பட்ட பெண்கள் யார் யார்? என பிரித்து பாதிக்கப்பட்ட பெண்களை மட்டும் அடையாளம் காண்பதற்கு சற்று கால தாமதம் ஆனதாக விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் மொத்தம் 160 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதில், ஒருவழியாக பாதிக்கப்பட்ட பெண்களில் 20 பேர் ரகசிய வாக்குமூலம் கொடுத்த நிலையில், அவற்றுடன் மின்னணு ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்த சிபிஐ, கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்தே 6 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரித்துவந்த நீதிபதி நந்தினி தேவியை இடையே பணியிட மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் தலையிட்டு அந்த உத்தரவை தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் 9 குற்றவாளிகள்மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அரசு தரப்பில் 205 ஆவணங்களும், குற்றச்சாட்டப்பட்டவர்களிடமிருந்து 12 ஆவணங்களும் பெறப்பட்ட நிலையில், 11 ஆவணங்களை நீதிமன்றமே எடுத்தது. இதில் மொத்தம் 48 சாட்சிகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், ஒருவர்கூட இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை 1500 பக்க அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் வழக்கின் தீவிரத்தை கருத்தில்கொண்டு குற்றவாளிகள் யாருக்கும் கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட பெயில் வழங்கப்படவில்லை. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை கோவை மகிளா சிறப்பு நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி வழங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருமே குற்றவாளிகள்தான் என உறுதியான நிலையில், 9 பேருக்குமே சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு குறித்து மோதிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மு.க. ஸ்டாலின்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், நிவாரண தொகையாக ரூ.85 லட்சம் வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். குற்றவாளிகளிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகையையும் அதில் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கூறினார். இதனிடையே, 8 பெண்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மோதிக்கொள்ளும் திமுக மற்றும் அதிமுக!
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கபட்டிருக்கும் தீர்ப்பிற்கு பல தரப்புகளிலும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஆனால் இந்த நியாயமான தீர்ப்பு கிடைத்ததற்கு தங்கள் ஆட்சியில் பதியப்பட்ட வழக்குதான் காரணம் என்று அதிமுகவும், தங்களுடைய ஆட்சி அதிகாரத்துக்கு பிறகுதான் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டிருப்பதாக திமுகவும் மோதிக்கொண்டன. பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு வெளியானதும், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தை பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கி தலைகுனியட்டும்” என்று பதிவிட்டார் ஸ்டாலின். இந்த பதிவு குறித்து கேள்வி எழுப்பும்விதமாக எடப்பாடி பழனிச்சாமி, “நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதி இன்று கிடைத்திருக்கிறது. வழக்கம்போல் உங்கள் ஸ்டிக்கரை தூக்கிக்கொண்டு வராதீர்கள் ஸ்டாலின். இங்கு யார் வெட்கி தலைகுனிய வேண்டும்?” என்று பதிவிட்டார். இப்படி இருவருக்குமிடையே சொற்போர் முற்றிய நிலையில், இரு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியிருக்கின்றனர். மற்ற கட்சித்தலைவர்களும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.