திருச்செந்தூர் முருகன் முகத்தில் அம்மை நோய் தழும்பு! ஆச்சர்ய நிகழ்வு!
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ராஜகோபுரக் கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு, தங்கத்தகடு பதிக்கப்பட்டு கோபுரங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. கோயலின் உட்புறமும் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் உள்ளிட்டோர் திருவுருவ சிலைகளிலும் வேலைப்பாடுகள் முடிவடைந்துவிட்டன. மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி 8,000 சதுர அடியில் யாகசாலை அமைக்கும் பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலின் சிறப்புகள் என்ன? மற்ற ஆறுபடை வீடுகளில் இருந்து திருச்செந்தூர் மட்டும் ஏன் வேறுபடுகிறது? கோயிலின் வழிபாட்டு முறை எப்படி? பன்னீர் இலை விபூதி பிரசாதத்தின் மகிமை என்ன? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த பதிவில் விரிவாக காணலாம். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் குறித்து ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் அளித்துள்ள சிறப்பு நேர்காணல் தகவல்களையும் பார்ப்போம்.
கடற்கரை ஓரத்தில் அழகாய் காட்சியளிக்கும் திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரம்
திருச்செந்தூர் கோயில் அமைப்பு
முருகனின் ஆறுபடை வீடுகளிலேயே, கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே கோயில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயம்தான். எனவே திருச்செந்தூர் என்றதுமே நம் நினைவுக்கு முதலில் வருவது, கடல் குளியலும் நாழிக்கிணறும். ஆனால் இவை தவிர மேலும் பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இக்கோயில். குறிப்பாக, ஓம் என்ற பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, சர்வ வாஸ்து லட்சணங்களோடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கோயில் கருவறையில் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சி தருகிறார் முருகன். முருகனின் இந்த சிலைக்குப் பின்னால் இடதுபக்க சுவரில், முருகன் பூஜை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்த பிறகே முருகனுக்குப் பூஜை செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை அழித்தபோது, கந்தனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்ததாகவும், அகத்தியர் வழிகாட்டுதலின்படி, பஞ்ச லிங்கங்களை மணலிலேப் பிடித்து வழிபாடு செய்து அந்த தோஷத்திலிருந்து விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழிபாடு பார்த்திபலிங்க பூஜை என்று அழைக்கப்படுகிறது. மேலும் கருவறைக்கு எதிரே சிவனுக்குரிய நந்தியும், முருகனுக்காக இரண்டு மயில்களும் இங்கு வீற்றிருக்கின்றன. இந்த அமைப்பு, திருச்செந்தூர் தவிர, வேறு எந்த முருகன் ஆலயத்திலும் இல்லை.
அத்துடன், திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவின் போது மட்டுமே, ஆறுமுகமும் பன்னிரண்டு கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை முழுதாகக் காண முடியும். மற்ற நாட்களில், அங்கவஸ்திரம் எனும் மேல்துண்டால் மூடி விடுவார்கள்.
பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர்
முருகன் முகத்தில் அம்மை தழும்பு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள உற்சவர் சண்முகருக்கு முகத்தில் அம்மைத் தழும்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது வரலாற்று ரீதியாக சொல்லப்படும் விஷயம். இது திருச்செந்தூர் முருகனின் தோற்றத்தின் ஒரு பகுதியாகவும், அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும் சில பக்தர்கள் முருகனின் முகத்தில் அம்மைத் தழும்புகள் இருப்பதை கவனித்ததாகவும் கூறுகிறார்கள்.
"முன்பு திருவனந்தபுர மன்னராக இருந்த மார்த்தாண்ட மகாராஜா, அங்கிருந்த சண்முகரை வழிபட்டுக் கொண்டிருந்தார். அக்காலத்தில், திருச்செந்தூரில் வசித்து வந்த திருசுதந்திர முக்காணி பிராமணர்களுக்கும், திருவனந்தபுரம் முக்காணி பிராமணர்களுக்கும், திருமண வழியில் நெருங்கிய உறவு இருந்ததாம். இதனால் திருவனந்தபுரம் சென்று வந்து கொண்டிருந்த திருச்செந்தூர் திருசுதந்திரர்கள் அங்கிருந்த சண்முகரைக் கண்டு, அவரின் அழகில் மயங்கி, அவரை எப்படியாவது திருச்செந்தூர் கோயிலுக்கு எடுத்துவந்துவிட எண்ணினர். அதற்கேற்ப, தன்னுடைய சண்முகர் திருமேனியை திருச்செந்தூருக்கு எடுத்துச்செல்ல முருகனும் அவர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து திருச்செந்தூர் திருசுதந்திரர்கள், ஒரு நாள் இரவு, மூங்கிலில் ஊஞ்சல் பல்லக்கு செய்து, அதில் சண்முகரை மறைத்துவைத்து, துணியை மூடி திருச்செந்தூர் புறப்பட்டனர். அவர்களை திருவிதாங்கூர் சுங்கச்சாவடியில் காவலர்கள் தடுத்தனர். உடனே, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக, தங்கள் குழந்தைக்கு அம்மை போட்டு இருக்கிறது என்றும், அதனைக் குணப்படுத்த பாண்டி நாட்டு வைத்தியரிடம் கொண்டு போகிறோம் என்றும் பொய் சொல்லினர். அம்மை என்றதும், அங்கிருந்த காவலர்கள், அந்த ஊஞ்சலைத் திறந்துகூட பார்க்காமல் அனுப்பி விட்டனர். காவலர்களிடமிருந்து தப்பிய அடியவர்கள், விரைவாக அங்கிருந்து தப்பிக்க, திருவனந்தபுரத்திலிருந்த சண்முகர் சிலை காணவில்லை என்பது மன்னர் மார்த்தாண்ட மகாராஜாவுக்கு தெரியவந்தது. மன்னர் பதற்றம் அடைய, அன்று இரவு அவரது கனவில் வந்த சண்முகர், என் குழந்தைகள், என் விருப்பப்படி என்னைத் திருச்செந்தூருக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தடுக்க வேண்டாம். நீ என்னைக் காண விரும்பினால், திருச்செந்தூருக்கு வா என்று கட்டளையிட்டு மறைந்தாராம். சண்முகரைக் காக்க, திருச்செந்தூர் திருசுதந்திரர்கள் அம்மை என்று பொய் சொன்னதால், சண்முகரின் முகத்தில் உருவான அம்மைத் தழும்பு இன்றும் மறையாமல் இருக்கிறதாம்."
செய்வினைகளையும் விரட்டும் சக்தி படைத்த பன்னீர் இலை விபூதி
திருச்செந்தூரில் வியாழக்கிழமைகளில் குருவாக காட்சியளிக்கும் முருகன்
திருச்செந்தூர் முருகன் கோயில் குரு பகவானின் பரிகார ஸ்தலமாக வழிபடப்படுகிறது. அசுரர்களை சூரசம்ஹாரம் செய்வதற்கு முன், முருகன், குருபகவானிடம் அசுரர்களின் வரலாறு மற்றும் பலம் பற்றி கேட்டறிந்தார். அதன்படி குருபகவான், முருகப்பெருமானுக்கு அசுரர்களைப் பற்றிய தகவல்களை வழங்கிய தலம் இதுவாகும். எனவே, இங்குவந்து வழிபட்டால் குருபகவானின் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதுவே திருச்செந்தூரில் முருகன் குருவாக காட்சி அளிப்பதன் பின்னணி. வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் முருகனை குருவாக நினைத்து வழிபட்டால், குருவின் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் காணலாம். அத்துடன், திருச்செந்தூர் முருகனை வணங்குவதால் புத்திரப்பேறு, ஞானம், வேலைவாய்ப்பு போன்ற பல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
செய்வினைகளை விரட்டும் பன்னீர் இலை விபூதி!
திருச்செந்தூர் தலத்தின் சிறப்பம்சம், பன்னீர் இலை விபூதி பிரசாதம். பன்னீர் இலையில் வைத்து விபூதி வழங்கப்படும். வேறு எந்த கோயிலிலும் இப்படி வழங்கப்படுவது இல்லை. இந்த பன்னீர் இலை விபூதி, செய்வினைகளை விரட்டும் சக்தி படைத்ததாம். "திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடித்து கடற்கரையில் நின்றாராம் முருகப்பெருமான். அவரைத் துதித்த வேதங்கள் அனைத்தும், பன்னீர் மரங்களாக அவ்விடத்தில் தோன்றியதாகவும், தேவர்கள் அங்கு பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பதும் ஐதீகம். எனவே, இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. மேலும், பன்னீர் இலையில் காணப்படும் பன்னிரண்டு நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுகின்றன.
திருச்செந்தூர் ஆலயத்தில் களைகட்டியுள்ள கும்பாபிஷேக பணிகள்
திருச்செந்தூர் முருகனை மச்சான் சாமி என அழைக்கும் மீனவர்கள்
மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், இன்றைக்கும் மீனவர்கள் முருகனை, மச்சான் சாமி என்றும் மாப்பிளை சாமி என்றும் அழைக்கின்றனர். எனவே திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நிச்சயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருச்செந்தூர் தலத்தின் கும்பாபிஷேகம் பற்றி பேசியுள்ள ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த், முருகனை வழிபடும்போது, கண்டிப்பாக அவரது அடியார்களையும் வணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் கும்பாபிஷேகத்திற்கு நேரில் சென்று வணங்க முடியாதவர்கள், திருச்செந்தூர் சுப்பிரமணியனை மனக்கண்ணில் நிறுத்தி, அவனது பாடல்களை மனதிற்குள்ளேயே பாடி, அவனது அடியார்களை மனதார நினைத்து வழிபட்டாலே அனைத்து பலன்களும் கிட்டும் என்று அடித்துக்கூறுகிறார். மேலும் திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் களை கட்டியுள்ள இந்த நேரத்தில், நாள்தோறும் வீட்டிலிருந்தபடியே முருகனை வழிபட்டாலும், பில்லி, சூனியம், ஏவல், தோஷம் என அனைத்து தீயசக்திகளும் விலகி, வாழ்க்கையில் மகிழ்ச்சி வெள்ளம் பெருகும் என்கிறார்.