‘இனிமேல் எனக்கு சேவை செய்யதான் நீ’ என்று அம்மன் கூறினாள்! மெய்சிலிர்க்கும் நளினி!

அம்மன் என்றாலே நளினிதான் என்று சொல்லும் அளவுக்கு ஆதீத கடவுள் பக்தியும், ஆன்மிக எண்ணங்களும் கொண்டவர். பல இடங்களில் தன் வாழ்வில் நிகழ்ந்த சிலிரிப்பூட்டும் ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை நளினி.;

Update:2025-09-30 00:00 IST
Click the Play button to listen to article

கடவுளை மனமுறுகி வேண்டும் ஒருசிலரை பார்த்திருப்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை நளினி. சில படங்களில் அம்பிகை வேடங்களில் நடித்தும் புகழ்பெற்றவர். அம்மன் என்றாலே நளினிதான் என்று சொல்லும் அளவுக்கு ஆதீத கடவுள் பக்தியும், ஆன்மிக எண்ணங்களும் கொண்டவர். பல இடங்களில் தன் வாழ்வில் நிகழ்ந்த சிலிர்ப்பூட்டும் ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை நளினி. அந்த வகையில் அண்மையில் தனது தெய்வபக்தி தொடர்பாக அவர் அளித்த நேர்காணல் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதில் அவர் பகிர்ந்துகொண்ட சில முக்கிய தகவல்களைப் பார்ப்போம். 


13 வயதில் தன்னை அம்மன் காப்பாற்றியதாக கூறும் நளினி 

நடிகை நளினி...

80ஸ், 90ஸ்களில் தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நளினி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் 13 வருடம் சேர்ந்து வாழ்ந்த பின் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு அருணா, அருண் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விவாகரத்துக்கு பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே மீண்டும் பிரபலமானர். நடிகை நளினி ஒரு நடிகை என்பதையும் தாண்டி அதீத தெய்வபக்தி கொண்டவர் என்பதை நாம் நன்கு அறிவோம். அம்மன் தெய்வங்களை தொடர்ந்து வழிபடுவதை நளினி வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களுக்கு சென்று அவர் வழிபட்டு வருகிறார். நாம் அம்மன் கோயில்களுக்கு எங்காவது செல்ல வேண்டுமானால், கூகுள் எல்லாம் தேவையில்லை, நடிகை நளினியிடம் கேட்டாலே போதும் என்ற அளவுக்கு அம்மன் கோயில் விவரங்களை கையில் வைத்துள்ளார். அம்மன் தெய்வங்கள் என்று மட்டும் அல்லாமல் அனைத்து கடவுள்களையும் அவர் வழிபட்டு வருகிறார். இந்நிலையில் அம்பிகை மீதான தனது பக்தி குறித்து அண்மையில் அவர் பகிர்ந்துள்ள தகவல்களைப் பார்ப்போம். 


கோயிலில் மடிப்பிச்சை எடுக்கும் நளினி..

“நான் போகவில்லை... அவள்தான் கூட்டிச்செல்கிறாள்”...

திடீர் திடீரென கோயில்களில் வழிபாடு, மடிப்பிச்சை, பரிகாரம் என அடிக்கடி நடிகை நளினியை பார்ப்போம். இந்த ஆன்மிக பயணத்திற்கான காரணம் குறித்து பேசிய நளினி, “நான் அவளை (அம்பிகை) தேடி போகவில்லை. அவள்தான் என்னை கூட்டி செல்கிறாள். அவள் சொல்கிறாள், நான் செய்கிறேன். வாழ்க்கையில் நீ எல்லாவற்றையும் பார்த்துவிட்டாய்... ‘இனிமேல் எனக்கு சேவை செய்யதான் நீ’ என ஒருவர் கூறினாராம். அதிலிருந்து கடவுளுக்கு சேவை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம் நளினி. மேலும் அதிகாலை 3.16 என்றால் சரியாக கண்விழித்து விடுவாராம். அப்படியே தூங்கினாலும் நான் இருட்டில் இருக்கிறேன் வந்து விளக்கேற்று என்று, அம்மன் எழுப்பிவிடுவாளாம். நளினி எழுந்து விளக்கேற்றிவிட்டு, 10 நிமிடம் பிரபஞ்சத்திடம் பேசுவாராம்.  

அம்மனை எப்படி வழிபடுவது?

அம்மன் வழிபாடு குறித்து பேசிய நளினி, நம் அம்மாவை நாம் கொஞ்சுவது இல்லை. ஆனால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி கொஞ்சுங்கள். நான் அம்மா, தாயே, கடவுளே அப்படி எல்லாம் கும்பிடமாட்டேன். அம்பாள் எனக்கு குழந்தையாக தெரிவாள். நிறைய விஷயங்கள் அப்படித்தான் அவளை கொஞ்சி, கெஞ்சி பெறுகிறேன். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்லி அழைத்தாலே போதும். அவள் உங்கள் அருகில் வந்து அமர்ந்துவிடுவாள் என தெரிவித்துள்ளார். 

அடிக்கடி சமயபுரம் செல்வது ஏன்?

என்னை பார்க்க வேண்டும் என அவள் (அம்மன்) அழைப்பாள். அதனால்தான் அடிக்கடி சமயபுரம் மாரியம்மன் கோயில் செல்வேன் என தெரிவித்துள்ளார் நளினி. இதுதொடர்பாக பேசிய அவர், அவள்தான் காரணம். உன்னை பார்க்க வேண்டும் வா என்றால் சென்றுவிடுவேன். எத்தனைமுறை என்றெல்லாம் கணக்கு கிடையாது. நான் போனால் என்னைவிட அவள்தான் திருப்தியடைவாள், அவள் மகள் வந்துவிட்டாள் என்று. அதைத்தொடர்ந்து வெக்காளியம்மன் கோயிலுக்கு சென்றுவிடுவேன். இவளிடம் சென்றுவிட்டு அவளிடம் போகவில்லை என்றால் கோபித்துகொள்வாள் என தெரிவித்துள்ளார். 

கேட்காமலேயே கிடைத்துவிடும்... 

என் வீட்டில் என்ன செய்தாலும் அவர்களுக்குதான் முதலில். நான் பிரியாணி செய்தாலும் சாமிக்குதான் முதலில். எங்களது சமையலறையிலும் சாமியெல்லாம் வைத்துள்ளேன். முதலில் பால் வைக்கும்போது ஆவியெல்லாம் உங்களுக்கு, அமுதெல்லாம் எனக்கு என்று சொல்லிவிடுவேன். அம்மனிடம் பேசிக்கொண்டே இருப்பேன். என் பொண்ணு கூட, நீங்க மெண்டலாகப் போறீங்க என்று என்னை திட்டுவாள். எனக்கு அவளை கொஞ்சிக்கொண்டே இருப்பது பிடிக்கும். யாராவது என்னிடம் எதாவது சொன்னால், அதை அவர்களுக்கு உடனே செய்துகொடு என வேண்டுவேன். கேட்காமலேயே எனக்கு எல்லாம் கிடைத்துவிடும். சாமியை நினைத்தால் உடனே சாமி படம் அல்லது சிலை கிடைத்துவிடும். புடவை நினைத்தால் உடனே புடவை கிடைத்துவிடும். இந்த கலர் புடவை என நினைப்பதற்குள், யாரோ எங்கள் வீட்டிற்கு வந்து அந்த புடவையை கொடுத்துவிடுவார்கள். உடனே அவளிடம் சென்று இங்க பாரும்மா, நான் கேட்டன்... நீ கொடுத்துவிட்டாய் என்று சொல்லுவேன். கொடுத்தவர் ஒரு நபராக இல்லாமல் என் அம்மாவாகத்தான் தெரிவார்கள். எது கிடைத்தாலும் சந்தோஷப்படுவேன். நான் நினைத்த கலர் அவர்களுக்கு எப்படி தெரியும். என்ன நினைத்தாலும் எனக்கு என் அன்னை கொடுத்துவிடுவாள் என்று நளினி கூறுகிறார். 


அம்மன் சொரூபமாக காட்சியளிக்கும் நடிகை நளினி

கடவுள் மணம்...

என் வீடே மணக்கும். என்னுடைய பொண்ணு வந்து என்னம்மா எங்கயாவது விபூதி கொட்டி தொலச்சியான்னு கேட்பா. இல்லையே பாரு வீடு சுத்தமாகத்தான் இருக்குன்னு சொல்லுவேன். அப்போது எனக்கு கருப்புசாமி உள்ளே வந்துவிட்டு போறாருன்னு உணர்வேன். அவர் வந்து செல்வதை நன்றாக உணர்வேன். அதுபோல சுத்தம் இல்லாதவர்கள் எங்கள் வீட்டு வாசலை கூட மிதிக்க முடியாது. வீடுவரை வருவார்கள். வீடுவரை வந்தேன் வரமுடியவில்லை என சொல்வார்கள், என பல தகவல்களை பகிர்ந்துள்ளார். 

உயிரோட இருக்க காரணமே இவங்கதான்!

முன்னதாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நளினி, தான் உயிரோடு இருப்பதற்கே கடவுள் மீதான நம்பிக்கைதான் காரணம் எனக் கூறியிருப்பார். “நான் 12 வயதாக இருக்கும்போது என்னுடைய உடலில் சிரங்கு, புண் அதிகமாக இருந்தது. அதைப்பார்த்த எல்லோருமே நான் உயிருடனே இருக்கமாட்டேன் என்று சொன்னார்கள். உடனே என்னை சிவாச்சாரியாரிடம் கூட்டி சென்றார்கள். அப்போது அவர் இன்று இந்தப் பெண்ணை ஒதுக்குபவர்கள் எல்லோருமே ஒருநாள் கொண்டாடுவார்கள் என்று சொன்னார்.  சிவாச்சாரியார் சொன்னதை யாரும் நம்பவில்லை. என் அம்மா மாரியம்மனிடம் மண்டியிட்டு, என்னை வேப்பிலையில் போட்டு கதறி அழுவார்கள். அப்போது, அம்மன்தான் எனக்கு உயிர் கொடுத்து காப்பாற்றினார். என் 13 வயதிற்கு பிறகு என் நிலைமை மாறியது. 14 வயதில் நான் நடிக்க ஆரம்பித்தேன். இன்று வரையிலும் என்னுடன் என் கருமாரி துணை இருக்கிறாள். நான் எப்போது அழைத்தாலும் அந்த நொடியே கருமாரி அம்மன் என் முன் தோன்றுவாள். இது நல்லது, இது கெட்டது, இதை செய், இதை செய்யாதே என்று என்னை என் அம்மன் உடனிருந்து வழிகாட்டி கொண்டே இருக்கிறாள். அதற்கு காரணம் ஆன்மிகத்தின் மீதும், ஜோதிடத்தின் மீதும் எனக்கு இருக்கும் நம்பிக்கை என்று நடிகை நளினி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்