பணக்காரர்கள், தவறாமல் ஓணம் கொண்டாடுவது ஏன்? ஓணம் பண்டிகையின் ரகசியம்!

தமிழர்களாக இருக்கட்டும், தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருக்கட்டும், பணக்காரர்கள் அனைவரும் ஓணத்தை பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர்.;

Update:2025-09-02 00:00 IST
Click the Play button to listen to article

மகாபலி மன்னனின் மறு வருகையை கொண்டாடும் ஓணம் விழா, கேரள மாநிலத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. தமிழ்நாட்டிற்கு எப்படி பொங்கல் திருவிழாவோ, கேரளாவிற்கு ஓணம் திருவிழா. மகாபலி மன்னனை நினைவுகூர்ந்து, வீடுகளை அலங்கரித்து, அத்தப்பூ கோலமிட்டு, விதவிதமான உணவு சமைத்து கேரள மக்கள் ஓணத்தை கொண்டாடுகின்றனர். ஆனால் மலையாள மக்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்களும், ஏன்.. உலகம் முழுவதும் உள்ள இந்துமத நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் ஓணம் கொண்டாட வேண்டும் என்று ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஓணம் கொண்டாடுவதால், வாழ்க்கையில் சங்கடங்கள் தீர்ந்து, செல்வ வளம் பெருகும் என்று கூறியுள்ளார். ஓணம் தொடர்பாக, ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு நேர்காணலை பார்க்கலாம்...


 3 அடி மண் கேட்ட வாமனர், மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்ததே ஓணம் விழாவிற்கு காரணமாக அமைந்தது 

ஐயா, ஓணம் பண்டிகையின் ஆகச்சிறந்த சிறப்பு என்ன?

ஓணம் என்பது மலையாள மொழி பேசும் மக்கள் மட்டும் கொண்டாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. செல்வம் என்று சொன்னால், அது அனைவருக்கும்தான் தேவைப்படுகிறது. செல்வம் பெருகும் பண்டிகைதான் ஓணம். ஓணத்தில் ஏதோ ஒருவகையில், வாமனரையோ, மகாபலி சக்கரவர்த்தியையோ நினைத்துவிட்டால், உங்களுக்கு செல்வம் எப்படியாயினும் பெருகத் தொடங்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையும் கூட. பல செல்வந்தர்கள் ஓணத்தை தவறாது கொண்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன். அது தமிழர்களாக இருக்கட்டும், தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருக்கட்டும், பணக்காரர்கள் அனைவரும் ஓணத்தை பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர். 

ஓணம் திருவிழா சொல்லும் மெசேஜ் என்ன?

எதிரிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்பதுதான் ஓணம் திருவிழா நமக்கு சொல்லும் மெசேஜ். அதனை விளக்கும் வகையில் கதையை சொல்கிறேன், கேளுங்கள். திருவோணம் நாட்களிலே இந்த வாமனரின் கதையை கேட்டாலே போதும். ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும், மந்திரங்களை சொல்ல வேண்டும் போன்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் இந்த கதையை தவறாமல் கேட்டுவிடுங்கள். உங்கள் ஜாதகத்திலே குரு தொடர்பான தோஷங்கள் இருந்தால் விலகிவிடும். குரு சம்பந்தமான தோஷம் என்றால், ஒருவருக்கு குறிப்பிட்ட விஷயம் தெரிந்திருக்கும். ஆனால் தேவையான நேரத்தில் அது கை கொடுக்காது. ஏதோ ஒரு பதற்றத்தில் தவறவிட்டு விடுவார்கள். குரு தோஷம் இருந்தால் குழந்தைகளுக்கு கல்வியிலே தடுமாற்றம் இருக்கும். பெரியவர்களுக்கு பொருளாதார பிரச்சனை உள்ளிட்டவற்றை உண்டாக்கும். எனவே இந்த கதையை கேட்கும் அனைவருக்கும் எப்பேற்பட்ட குரு தோஷமும் நிவர்த்தி ஆகிவிடும். மேலும் எப்பேற்பட்ட சங்கடமும் விலகி, செழிப்பு மேலோங்கும் என வாமன புராணம் கூறுகிறது. வாமனரின் கதையை கேட்டுவிட்டால், வாழ்க்கையில் வாமனர் அளவு உயரலாம். ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெருகும். இந்த கதையை அனைத்து நாட்களில் கேட்டாலும் நன்மை உண்டாகும். குறிப்பாக திருவோணம் நாட்களில் கேட்டால், மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும்.

அந்த கதையை சொல்லுங்கள்...

புராண கதைகளின் கூற்றுப்படி, மலையாள தேசமான கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அவர் அசுர குலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மக்களை மிகுந்த அரவணைப்புடன் கவனித்துக் கொண்டாராம். மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் நாடு செழிப்பாகவும், மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனராம். தன் தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் அவர் செய்த நற்காரியங்களால், அவரை மக்கள் தங்கள் மனங்களில் உயர வைத்து கொண்டாடி வந்தனர். 


பாதாளலோகத்திலிருந்து ஆண்டுக்கொருமுறை வெளியேவந்து மக்களை பார்க்க மகாபலிக்கு வரமளித்த மகாவிஷ்ணு

இந்த சூழலில்தான் இந்திரப்பதவிக்கு மகாபலி சக்கரவர்த்தி ஆசைப்பட்டார். தன் குல குருவான சுக்கிராச்சாரியாரின் வழிகாட்டுதலின்படி, அந்த பதவியை அடையவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் மாபெரும் வேள்வி நடத்த மகாபலி முடிவு செய்தார். வேள்வியின் இறுதியில் நாட்டு மக்களுக்கு தான, தர்மம் வழங்கவும் திட்டமிட்டார். இதனை அறிந்த தேவர்கள் அச்சத்திற்குள்ளாகினர். மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர். இதில் மகாபலி வென்றார். உடனே தேவர்கள், தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஷ்ணு பகவான் வாமன அவதாரம் எடுத்தார். கஸ்யப்ப முனிவர் மற்றும் அதிதி தம்பதிக்கு மகனாக அவதரித்தார்.

மூன்றடி மண் கேட்ட வாமனர்!

மகாபலி சக்கரவர்த்தியோ தன் வேள்வியை நிறைவு செய்யும் விதமாக, நாட்டு மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். தான தர்மங்கள் செய்து முடிக்கும் தருவாயில், வாமனர் அங்கு தானம் கேட்க வந்தார். வாமனரைப் பார்த்த மகாபலியோ, தாமதமாக வந்துவிட்டீர்களே. இப்போதுதான் அனைத்தும் நிறைவடைகிறது என்று சொன்னார். அதற்கு வாமனரோ, "நான் வெறும் 3 அடி கொண்ட சிறுவன், பெரிதாக எதுவும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும்" என்றார்.

இதனை அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த அசுர குரு சுக்கிராச்சாரியார், அவசரமாக மகாபலியின் அருகே சென்று, இது ஏதோ தேவர்களின் சூழ்ச்சி போல இருக்கிறது, சிறுவனுக்கு தானம் அளிக்காதே என்று சொன்னார். ஆனால் தன் எதிரிகளான தேவர்களை குறைத்து மதிப்பீடு செய்த மகாபலி சக்கரவர்த்தியோ, வந்திருப்பது சிறுவன் தானே, அவன் கேட்கும் 3 அடியை தருவதில் என்ன வந்துவிடப் போகிறது என்று எண்ணி, சிறுவனுக்கு 3 அடி நிலத்தை தானம் தர ஒப்புக்கொண்டு, கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க முற்பட்டார். அப்போது, நீர் வராத மாதிரி, வண்டு அவதாரம் எடுத்து சுக்கிராச்சாரியர் கமண்டலத்தை அடைத்துக் கொண்டார். உடனே வாமனர் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் வழியை குத்தினார். இதனால்தான் சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பறிபோனது.

பின்னர் மகாபலி சக்கரவர்த்தி தானம் தர ஒப்புக்கொண்டதையடுத்து, 3 அடியை தானம் பெற வாமனர் ஆயத்தம் ஆனார். தன் ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி சக்கரவர்த்தி தன் தலை மீது வைக்குமாறு கூறினார். மகாபலியின் தலையில் வாமனர் கால் வைத்ததும், அவர் பாதாளலோகத்திற்கு சென்றுவிட்டார்.


ஓணம் நாட்களில் பெருமாளையும், லட்சுமி தாயாரையும் வழிபட்டால்  செல்வம் பெருகும்!

விஷ்ணுவிடம் வரம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி!

அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லனவற்றை செய்த மகாபலியை பாதாளலோகத்திற்கு தலைவராக நியமித்த விஷ்ணு பகவான், மேலும் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தியோ, அப்போதும் தன் மக்களை மனதில் வைத்தே வரம் கேட்டார். "பாதாளலோகத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை நான் வெளியே வந்து என் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்து, அவர்கள் கேட்பதை அவர்களுக்கு அருள விரும்புகிறேன்" என்று கூறினார். அப்படியே ஆகட்டும் என்று விஷ்ணு வரம் அளித்தார். நீ உன் மக்களை வந்து பார்ப்பதை மக்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள் என்றும் மகாவிஷ்ணு தெரிவித்தார். அதன்படி, ஆண்டுக்கு ஒருமுறை மகாபலி சக்கரவர்த்தி பாதாளலோகத்தில் இருந்து வெளியே வந்து மக்களை பார்த்து, அவர்களுக்கு தேவையானவற்றை அருளும் நிகழ்வே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 

அனைவரும் ஓணத்தை கொண்டாட எளிய வழிமுறை இருந்தால் சொல்லுங்கள்...

ஓணம் நாட்களில் ஸ்ரீமத் பாகவதத்தை கேட்கலாம். பெருமாளின் கதைகளையும், மகாலட்சுமியின் அருட் திருவிளையாடல்களையும் கேட்கலாம். வாமனர் கதையை தவறாமல் கேட்க வேண்டும். மனதார இவர்களை எல்லாம் நினைத்துவிட்டு, மகாபலி சக்கரவர்த்தியே எங்களுக்கு நன்மையை தா என்று சொல்லலாம். எப்பேற்றபட்ட சங்கடங்களும், நாக தோஷங்களும், குரு தோஷமும், பித்ரு தோஷமும் நீங்கும். ஓம் நமோ நாராயணாய... ஓம் நமோ நாராயணாய... என்று சொல்லி பெருமாளை வணங்கிவிட்டால், திருமகளின் அருளும் நமக்கு முழுமையாக கிடைத்துவிடும். பெரும் செல்வத்தை மகாலட்சுமி ஆனவள் அருள்வாள். பெருமாளையும், தாயாரையும் வழிபட்டால், தேவைக்கும் அதிகமான செல்வத்தை வாரி வழங்கிவிடுவார்கள். 

மேலும் செய்திகள்