"மதராஸி"யில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த நடிகை, இவ்வளவு பெரிய ஆளா!
மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்புத் திறனால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ருக்மணி வசந்த்.;
மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்புத் திறனால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ருக்மணி வசந்த். கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்த இவர், தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து, பின்னர் 'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். நடிப்பு, அழகு, தனித்துவமான திறன் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ருக்மணி, தனது திறமைக்காக பல விருதுகளைப் பெற்று, இன்று தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். வீரமிக்க ஒரு ராணுவ வீரரின் மகளான ருக்மணி வசந்த்தின் வாழ்க்கை, சினிமா பயணம் மற்றும் அவர் அடைந்த வெற்றிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை
டிசம்பர் 10, 1996 அன்று பெங்களூரில் ஒரு கன்னடக் குடும்பத்தில் பிறந்த ருக்மணி வசந்த், தனது குடும்பப் பின்னணியாலும், கொள்கையாலும் தனித்துவமான ஒரு கலைஞராக திகழ்கிறார். இவரது தந்தை, கர்னல் வசந்த் வேணுகோபால், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒரு வீரம் மிக்க ராணுவ வீரர். 2007-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க முயன்றபோது வீரமரணம் அடைந்தார். அவரது இந்த உயர்ந்த தியாகத்தைப் போற்றும் விதமாக, இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கால ராணுவ விருதான அசோக் சக்ரா அவருக்கு அளித்து கௌரவிக்கப்பட்டது. கர்நாடகாவிலிருந்து இந்த விருதைப் பெற்ற முதல் நபர் இவர்தான். தந்தையின் இந்த தியாகம், ருக்மணியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.
அசோக் சக்ரா விருதுபெற்ற ருக்மணியின் தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால்
இதேபோல், இவரது தாயார் சுபாஷினி வசந்த், ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞர். மேலும், போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க "வசந்தரத்னா அறக்கட்டளை" என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தாயாரின் இந்தச் சேவை மனப்பான்மை, ருக்மணிக்கும் சமூக அக்கறையை ஏற்படுத்தியது. தனது தந்தையின் இழப்பிற்குப் பிறகு, தன்னுடைய தாயார் அந்த வலியை எப்படி ஒரு சமூக சேவைக்கான சக்தியாக மாற்றினார் என்பதை ருக்மணி பல நேர்காணல்களில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் வளர்ந்த ருக்மணி, தனது பள்ளிப் படிப்பை ஆர்மி பள்ளி மற்றும் ஏர் ஃபோர்ஸ் பள்ளிகளில் முடித்தார். அதன் பிறகு, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் அகாடமி ஆஃப் ட்ரமாடிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் நடிப்புக்கான பட்டம் பெற்றார். இந்த உயர்தர நடிப்புப் பயிற்சி, அவரது நடிப்பை மெருகேற்ற பெரிதும் உதவியது.
கன்னடத்தில் கிடைத்த அங்கீகாரம்
2019-ல் கன்னடத் திரைப்படமான ‘பீர்பால்’ மூலம் ருக்மணி வசந்த் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். இதில் ஒரு அறிமுக நடிகையாக இருந்தபோதிலும், இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும், அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, 2023-ல் வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ திரைப்படம்தான். இந்தப் படத்தில், நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக, 'பிரியா' என்ற பாசமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது: ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘சைட் பி’.
கன்னடத் திரைப்படமான பீர்பாலில் நடிகை ருக்மணி
முதல் பாகத்தில் அவரது நடிப்பு, படத்தின் உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்குப் பெரும் பங்களித்ததோடு, பார்வையாளர்கள் அனைவரையும் கலங்க வைத்தது. அவரது சிரிப்பு, அழுகை, சோகம் என ஒவ்வொரு உணர்ச்சியையும் பிரியா கதாபாத்திரத்தில் அழகாக வெளிப்படுத்தினார். இது வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், ருக்மணியின் நடிப்பு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த ஒரு படமே, கன்னட சினிமாவில் அவருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது. மேலும், இதே ஆண்டில் அவர் கணேஷ் நடித்த ‘பாணதாரியல்லி’ திரைப்படத்திலும் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தனது பன்முகத்திறமையை வெளிப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் அறிமுகம்
'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு, ருக்மணி கன்னட சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். 2024-ல், அவர் நடித்த கன்னடத் திரைப்படங்களான 'பஹீரா' மற்றும் 'பைரதி ரணகல்' ஆகிய இரண்டும் வெற்றிப் படங்களாக அமைந்தன. குறுகிய காலத்தில் அவர் முன்னணி நடிகையாக உருவெடுத்ததற்கு மிக முக்கிய காரணம், அவர் தேர்ந்தெடுத்த தனித்துவமான கதாபாத்திரங்களும், அவரது யதார்த்தமான நடிப்பும்தான்.
கன்னட திரையுலகில் தனது வெற்றியை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, ருக்மணி மற்ற மொழிகளிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார். 2024-ல், நடிகர் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக, ‘அப்புடோ இப்புடோ எப்புடோ’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டே, ‘ஏஸ்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'ருக்கு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார். இந்த திரைப்படம் அவருக்குத் தமிழக ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மதராஸி’ திரைப்படத்தில் ருக்மணி
இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மதராஸி’ திரைப்படத்திலும் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ருக்மணியின் யதார்த்தமான நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது. தனது நேர்த்தியான நடிப்புத் திறனால், தென்னிந்தியாவை கலக்கி வரும் ருக்மணி வசந்த் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக, கன்னடத்தில் அவர் நடித்த 'சப்த சாகரதாச்சே எல்லோ' திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது மற்றும் IIFA உத்சவம் நட்சத்திர விருதுகள் போன்ற மதிப்புமிக்க விழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதை வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
பான் இந்திய நட்சத்திரமாக
தற்போது, ருக்மணி வசந்த்தின் திரைப் பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. 2022-ல் பெரும் வெற்றி பெற்ற 'காந்தாரா' திரைப்படத்தின் முன்தோற்றக் கதையான 'காந்தாரா: அத்தியாயம் 1' படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் 'கனகவதி' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இது அவரது பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னடத் திரையுலகின் மாபெரும் நட்சத்திரமான யாஷ் உடன் இணைந்து அவர் நடிக்கும் இந்தப் படம், ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதுவும் ருக்மணி வசந்த்தின் திரைப் பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'காந்தாரா: அத்தியாயம் 1' படத்தில் கனகவதியாக ருக்மணி
இது தவிர, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய படத்திலும் கதாநாயகியாக நடிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி அவரைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 'சலார்' திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘என்டிஆர்நீல்’ என்ற இந்த பிரம்மாண்ட படத்தில், ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இது ருக்மிணி வசந்தின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சினிமா பின்னணி இல்லாத ஒரு குடும்பத்திலிருந்து வந்து, ஒரு ராணுவ வீரரின் மகளாக, தனது கடின உழைப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களின் மூலம் கலை உலகில் ஒரு தனி முத்திரையைப் பதித்து வருகிறார் ருக்மணி. நடிப்பு, நடனம், சமூக சேவை என பன்முகத் திறமைகளைக் கொண்டு, தனக்கென ஒரு தனிப் பாதையை அமைத்துக்கொண்டிருக்கும் ருக்மணி வசந்த், வரும் காலங்களில் இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராகத் திகழ்வார் என நம்பப்படுகிறது.