தமிழ்ப் படங்களில் வரும் கற்பழிப்புக் காட்சிகள் படுமோசம் - ஜெயலலிதா

தென்னிந்திய மொழிப் படங்களில் வரும் கற்பழிப்பு காட்சிகள் படுமோசமாக இருக்கின்றன என்கிறார், ஜெயலலிதா!;

Update:2025-09-23 00:00 IST
Click the Play button to listen to article

(05-08-1973 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

"தமிழ்ப் படங்களில் வரும் கற்பழிப்புக் காட்சிகள் படுமோசமாக இருக்கின்றன" என்கிறார், ஜெயலலிதா!

எப்படி அவரே கூறுகிறார்? படியுங்கள்.

நிருபர்: இந்தியில் வெளிவந்துள்ள புரட்சிப் படம் எதுவும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

ஜெயலலிதா: "தோரகா படம் பார்த்தேன். இது ஆபாசமாக இருப்பதாக சிலர் என்னிடம் கூறினார்கள், ஆனால், அதில் வரும் கற்பழிப்பு காட்சிகள் எனக்கு ஆபாசமாகத் தெரியவில்லை, ரசிக்கும் படியாகவே இருந்தன. அதைவிட, தென்னிந்திய மொழிப் படங்களில் வரும் கற்பழிப்பு காட்சிகள் படுமோசமாக இருக்கின்றன.


தோரகா படம் குறித்து மனம் திறந்த ஜெயலலிதா 

அனுபவம் தேவையா?

நிருபர்: நடிப்புக்கு அனுபவம் தேவையா?

ஜெயலலிதா: நடிப்புக்கு அனுபவம் மட்டும் போதாது. திறமை இருக்க வேண்டும். அதனால்தான் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு என்னால் நடிகையாக முடிந்தது. திறமை பிறவியிலேயே இருந்தால்தான், எந்த நேரத்திலும் சிறப்பாக நடிக்க முடியும். சிலர் நடிப்பதற்கு என்று "மூடு" எடுத்துக்கொண்டு வருகிறார்கள். சோகக் காட்சியில் நடிப்பது என்றால் “உம்" என்று இருப்பார்கள். யாருடனும் பேசக்கூட மாட்டார்கள். மற்றவர்கள் சிரித்துப் பேசுவதும் அவர்களுக்குப் பிடிக்காது. என்னைப் பொருத்தமட்டில் எந்த காட்சி என்றாலும், நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டே இருப்பேன். படப்பிடிப்பு தொடங்கியதும், அந்தக் காட்சிக்கு தேவையான “மூடு" வந்துவிடும்.

திரைப்படக் கல்லூரி

நிருபர்: திரைப்படத் கல்லூரி மாணவ-மாணவிகள் வந்த பிறகு, இந்தியத் திரை உலகிற்கு சிறந்த நடிகர், நடிகைகள் கிடைத்து இருக்கிறார்களா?


சிவாஜி கணேசன் - பானுமதி, இந்தி நடிகர் திலிப்குமார்-மீனாகுமாரி பட காட்சிகள் 

ஜெயலலிதா: இல்லை சிவாஜிகணேசன், பானுமதி போலவோ, இந்தி நடிகர்கள் திலிப்குமார், அசோக் குமார், மீனாகுமாரி போலவோ யாரும் இன்னும் வரவில்லை. திரைப்படக் கல்லூரி நடிப்புத் துறைக்கு ஓரளவுதான் உதவ முடியுமே தவிர, முழுத் திறமையையும் கொடுத்துவிடும் என்று நான் நம்பவில்லை.

பானுமதி

நிருபர்: பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்திரி இவர்கள் நடிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜெயலலிதா: பானுமதி வரிசையில் அஞ்சலிதேவி, சாவித்திரியை சேர்க்க முடியாது. அதற்காக அஞ்சலிதேவி, சாவித்திரி நடிப்பை நான் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால், பானுமதி நடிப்பில் ஒரு மேதை!

நிருபர்: உங்களுக்குப் பிடித்தமான டைரக்டர்கள் யார்?


ஒரு பாத்திரத்தை அப்படியே நடித்துக் காட்டுவதில் இயக்குநர் ஸ்ரீதர் வல்லவர் - ஜெயலலிதா

ஜெயலலிதா: ஸ்ரீதர், பி. மாதவன், ஏ.சி. திருலோகசந்தர். ஒரு பாத்திரத்தை அப்படியே நடித்துக் காட்டுவதில் ஸ்ரீதர் வல்லவர். சோகக் காட்சியை விளக்கும்பொழுது “கிளிசரின்” இல்லாமலேயே ஸ்ரீதர் அழுது காட்டுவார்!

நிருபர்: நீங்கள் யாரை பின்பற்றி நடிக்கிறீர்கள் ?

ஜெயலலிதா: நடிப்பில் நான் யாரையும் பின்பற்றவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்