அரசியலில் களமிறங்கும் அறந்தாங்கி நிஷா! விரைவில்...
அரசியலுக்கு வருவதில் விருப்பம் இருப்பதாக காமெடி கலைஞர் அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.;
எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் தன்னைத் தானே எந்த அளவுக்கு கேலி செய்யமுடியுமோ அந்தளவுக்கு கேலி செய்துகொண்டு மற்றவர்களை சிரிக்கவைக்கும் நகைச்சுவை கலைஞர்களில் ஒருவர் நிஷா. நகைச்சுவை என்பதை தாண்டி, அவ்வப்போது பல சமூக பிரச்சனைகளிலும் தலையிட்டு மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். இந்நிலையில் தற்போது சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு பொதுப்பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார் நிஷா. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாரி- 2 படத்தில் அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் நிஷா. பட்டிமன்ற பேச்சாளரான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை திறன்மூலம் மக்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொண்ட நிஷா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதனிடையே கிடைத்த பட வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். கோலமாவு கோகிலா, மாரி 2, இரும்புத்திரை, சீமராஜா, திருச்சிற்றம்பலம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது அறந்தாங்கி என்றாலே நிஷாதான் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமடைந்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியோ, திரைப்படமோ எதுவாயினும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பு மூலம் மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களில் ஒருவராக நிஷா இருந்துவருகிறார் என்பதில் சந்தேகமில்லை. நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்பே நிஷா தனது உறவுக்காரரான ரியாஷ் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நிஷா பல மேடைகளிலும் தனது கணவர் குறித்து கிண்டலடித்து பேசுவார். ஆனால் அதை எதையும் மனதில்கொள்ளாமல் எப்போதும் நிஷாவிற்கு ஆதரவாகவே இருப்பார் ரியாஷ். அதுபோல தற்போதுவரை தனது தாய், தந்தையருக்கு உதவி செய்துவருகிறார் நிஷா. தனது குடும்பத்தைத் தாண்டி பல பேரிடர்களிலும் சென்னை, திருச்சி, தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார் நிஷா. கடந்தாண்டு வந்த ஃபெஞ்சால் புயலில் கூட பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொடுத்தார். அப்போது மக்கள் பலரும், நீங்கள் வந்தால்கூட எங்களுக்கு நல்லது செய்வீர்கள் எனக்கூறினார்களாம். இதனால் தனக்கு அரசியலில் நுழைய ஆசை இருப்பதாகவும் நிஷா தெரிவித்தார். ஏனெனில் கூடுதல் உதவிகள் செய்ய, கேள்வி கேட்க ஒரு பதவி இருந்தால் நன்றாக இருக்கும். பதவியில் இருந்து கேள்வி கேட்டால் என்னை யாரென்று கேட்கமாட்டார்கள். அதனால் அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு பதவிக்கு போவேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சமூகத்தில் நிலவிவரும் சில பிரச்சனைகள் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் நிஷா.
மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் விவகாரம் குறித்து இலை மறை காய் போல பேசிய நிஷா
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா...
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா பெயரை குறிப்பிடாமல் அவர்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிஷா, “என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் வெளியே வந்தால்கூட, அதைப்பற்றி 10 பேர் பேசுவார்கள். என்னைப் பொறுத்தவரை பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி யாரையும் ஏமாற்றாமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஒரு வாழ்க்கைக்குள் இருக்கும்போது இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதே முதலில் தவறு. இன்னொருவருக்கு நாம் இருக்கிறோம் என்று ஒரு நம்பிக்கையை கொடுக்கக்கூடாது. பெண்களை ஒரு நகை, பணம் கொடுத்து ஏமாற்றுவதைவிட ஒரு நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றிவிடலாம். அந்த நம்பிக்கையான வார்த்தையை யாருக்கும் தவறாக கொடுக்கவேண்டாம் என நினைக்கிறேன். அதனால் யாருக்கும் நம்பிக்கை கொடுக்காமல் அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொண்டாலே போதும். செலப்ரிட்டி என்று இல்லை, எல்லா ஊர்களிலும் இது நடக்கும். செலப்ரிட்டி என்பதால் இன்னும் பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதிலும் பெண்கள்தான் குற்றம் சாட்டப்படுகின்றனர். சமூகம் எப்போதும் பெண்களை கேள்வி கேட்கவே பயன்படுத்துகிறது. நீ ஏன் இப்படி இருக்கிறாய்? நீ ஏன் இந்த ட்ரெஸ் போடுறே? நீ ஏன் அவங்ககிட்ட பேசுன? என்றுதான் கேட்பார்கள். யாருமே ஏன் அவன் உன்னைப் பார்க்குறான்? என்று கேட்கமாட்டார்கள்.
நாய்களையும் பாதுகாத்து, நம்மையும் அரசு பாதுகாக்க வேண்டும் - நிஷா
தெருநாய் தொல்லை..
தெருநாய் சர்ச்சை குறித்து பேசிய நிஷா, “நாயை ஒழிக்கவேண்டும், அழிக்கவேண்டும் என யாரும் சொல்லவில்லை. அதுவும் ஒரு உயிரினம்தான். நானுமே வண்டியில் போறப்போ நாயை தெரியாமல் இடித்துவிட்டால், என் வீட்டுக்காரரை திட்டுவேன். ஏம்பா பாத்துப்போப்பா. அதுவும் ஒரு உயிர்ப்பா. அதுக்கு வலிக்கும்னு திட்டுவேன். அவைகளுக்கும் வலி இருக்கு என்பது நமக்கு புரிகிறது. அதேசமயம், ஒரு குழந்தை போகும்போது கடிச்சா எப்படி? பெத்தாதான் குழந்தையா? எல்லோருடைய குழந்தையும் நம்ம குழந்தைதான். யாருக்குமே பிரச்சனை இல்லாதவரைக்கும் எதுவுமே யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் ஒருவருக்கு அது பிரச்சனை என்னும்போது, தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது என்பது தவறே கிடையாது.
நிகழ்ச்சி ஒன்றில் அறந்தாங்கி நிஷா
தவறான உறவுகள்...
என்னுடையது கிராமத்துக் காதல். என் அத்தைப்பையன்கள் எல்லோருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனாலும் இப்போதும் அவர்களை பார்த்தால் எனக்கு வெட்கம் வரும். ஆனால் இன்றைக்கு கல்யாணம் செய்துகொள்பவர்கள் ப்ரீ- வெட்டிங் ஷூட் செய்தால்கூட அவர்களுக்கு வெட்கம் வருவதில்லை. எங்களுக்கெல்லாம் கல்யாணத்தன்று உட்காரவைத்து ஃபோட்டோ எடுப்பதுகூட பயமாக இருந்தது. எனக்கென்னவோ அது அழகாக இருந்தது. தயங்கி தயங்கி பார்க்கும் முதல் பார்வை அழகு எனக் கூறுவார்கள். இன்றைக்கு அந்த பார்வையை யாரிடமும் பார்க்கவில்லை. மிகவும் ஆச்சர்யாக இருக்கிறது. அழகான விஷயங்களை எல்லாம் 80ஸ், 90ஸில்தான் பார்க்க முடிந்தது. ஆனால் இன்று லவ், பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி, என நிறைய சொல்கிறார்கள். இவை எல்லாம் தெரியாமல் வளர்ந்துவிட்டோம் நாங்கள். ஆனால் இந்த சமூகத்தில்தான் என் குழந்தைகள் வளரப்போகிறார்கள் என்று நினைக்கும்போது பயமாக இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றே தெரியவில்லை.
கணவன், மனைவி ஆதரவு...
கணவரின் ஆதரவு குறித்துப் பேசிய நிஷா, எனக்கு அவர் ஆதரவாக இருப்பதுபோல அவருக்கும் நான் ஆதரவாக இருக்கிறேன். எப்போதுமே நீங்கள் எல்லோரும் செய்யும் தவறு, கணவர் ஆதரவாக இருக்கிறார் என அதையேக் கூறுவதுதான். நிறைய மனைவிகள் மனரீதியாக ஆதரவாக இருப்பார்கள் கணவர்களுக்கு. பணத்தால் ஒருவருக்கு உதவி செய்வது எளிது. ஆனால் மனரீதியாக உதவுவது என்பது மிகவும் கடினம். அதனை நிறைய மனைவிகள் செய்துவருகிறார்கள். நான் இருக்கேன், நீங்க போய் பாருங்க, நீங்க செய்ங்க என ஆதரவாக இருப்பார்கள். என் கணவர் எனக்கு எப்போதும் ஆதரவுதான்.
பெண்கல்வி, பெண் வேலைவாய்ப்பு...
ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என சொல்வார்கள். ஆனால் இன்று படிக்கிற பெண்களால்தான் பல வீட்டில் அடுப்பு எரிகிறது. நாமதான் படிக்கிறோம், சமூகத்தை பாதுகாக்குறோம். எனக்கு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், இன்னைக்கு ஆண்கள் பெண் குழந்தைகள் வேணும்னு கேக்குறாங்க. நீங்க எந்த ஹாஸ்பிடல் போய் பார்த்தாலும், எனக்கு பெண் குழந்தை பிறந்தால் போதும்னு சொல்றாங்க. ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடி பார்த்தா, பொம்பள பிள்ளையே வேண்டாம் என்று சொன்னாங்க. பெண்பிள்ளைகள் படிக்கிறார்கள். எல்லா விஷயத்திலும் தைரியமாக இருக்கிறார்கள். பெற்றோர்களை பார்த்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் பார்க்கும்போது குறைசொல்லாமல் இருந்தால் போதும் என்றுதான் தோன்றுகிறது. எங்கள் ஊரில் என்னைவிட நகைச்சுவை செய்யும் ஆட்கள் நிறையபேர் இருக்கிறார்கள். என்னைவிட சூப்பராக பேசுவார்கள். எனக்கு வெளியேவர வாய்ப்பு கிடைத்ததால் நான் இங்கு இருக்கிறேன். எங்க பட்டிமன்ற பேச்சாளர்களையெல்லாம் நீங்கள் பார்த்தால் தெரியும். அவர்கள் எல்லாம் அவ்வளவு திறமைசாலிகள். ஆனால் அவர்களால் வெளியே வரமுடியாது. சென்னையா? இவ்ளோ தூரம் வரணுமா? என வரமாட்டார்கள். அவர்கள் எல்லாம் வராததால் நான் எல்லாம் வந்துவிட்டேன். இன்னும் சமூகத்தில் திறமையான ஆட்களை வெளியேவிடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் வந்தால், அந்த கிராமத்தில் இன்னும் பத்துபேர் வெளியே வருவார்கள்.
கணவர் ரியாஷுடன் நிஷா
பெண்களின் நிதி சுதந்திரம்...
பெண்களின் பண சுதந்திரம் குறித்து பேசிய நிஷா, பண சுதந்திரம் என்பது ஒரு நம்பிக்கை. இப்போது வரைக்கும் என் அம்மாவிடம் ஒரு ரூபாய் நான் வாங்கியது இல்லை. ஏனென்றால், நாம் அம்மாவிடம் காசு கேட்டால் எல்லோரும் சொல்வது, அப்பாகிட்ட கேளு என்றுதான். இன்றைக்கு தைரியமாக என் தம்பி, அப்பாவுக்கு நான் செய்கிறேன். 10 வருஷமாக என் கணவரிடம் ஒரு ரூபாய்கூட நான் வாங்கியது இல்லை. அது திமிர் கிடையாது. என்னுடைய நம்பிக்கை. நான் யாரிடமும் காசு கேட்க மாட்டேன்... என்னுடைய பணத்திலிருந்து கொடுப்பேன்... என்னுடைய பணத்திலிருந்து கொடுக்கும்போது நான் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் இல்லை. அந்த நம்பிக்கையை கொடுப்பது நாம் சம்பாரிப்பதுதான்.
என்னை பொறுத்தவரை எல்லாப் பெண்களும் ஏதாவது ஒருவேலை செய்யவேண்டும். சின்ன சின்னத் தொழில் என்றாலும் அவர்களது கையில் 10 ரூபாய் இருக்க வேண்டும். அதுதான் எனக்கு பிடித்த விஷயம். பெண்களே சம்பாதிக்க வேண்டும். திமிராக இருக்கவேண்டும். தொடர்ந்து தாய்மை குறித்து பேசிய நிஷா, எனக்கு என் மகன் அர்ஷத் பிறந்த பிறகுதான் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஆனால் தாய்மை மட்டும்தான் பெண்மையை முழுமையாக்கும் என்பது கிடையாது. நிறையபேர் கல்யாணம் செய்யாமல், குழந்தை இல்லையென்றாலும் சாதித்திருக்கிறார்கள். அதனால் தாய்மையை வைத்துதான் பெண்மை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. பெண்ணாக பிறந்தாலே அவள் முழுவதையும் அடைந்துவிட்டாள் என்றுதான் அர்த்தம். பெண் என்பவள் பொதுவுடமைவாதி, சுயநலவாதி அல்ல.