விஜய்க்கு முற்றும் நெருக்கடி! கைது செய்யப்படுவாரா?
கடந்த சனிக்கிழமையன்று நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
இசைத் தம்பதி ஜிவி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து... இசையமைப்பாளர் தேவாவை தங்கள் நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து கௌரவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் நடிகர் மோகன்லால்... போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் சிறிய தொகுப்பை இந்தவார சினிமா பைட்ஸ் பகுதியில் பார்ப்போம்.
குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதுபெற்ற மோகன்லால்
‘தாதா சாகேப் பால்கே’ விருதுபெற்றார் மோகன்லால்!
இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிவோர்களுக்கும், இந்திய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்களுக்கும் இத்துறையின் உச்ச கவுரவமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும். அந்த வகையில் மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மோகன்லாலுக்கு அண்மையில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. இதனிடையே 2023க்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆக.1ல் அறிவிக்கப்பட்டன. அதற்கான விருது வழங்கும் விழா செப்.23ல் நடைபெற்றது. இதில், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். இந்த விருதினை தனது ரசிகர்களுக்கும், மலையாள திரையுலகினருக்கும் அர்ப்பணிப்பதாக மோகன்லால் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் இதுவரை சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
சிறுமி தோசரை பாராட்டிய கமல்ஹாசன்...
“என் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு வாழ்த்துகள்” - கமல்ஹாசன்!
திரைப்பட தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், கலைஞர்களை கௌரவிக்கும் விதமாகவும் மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை த்ரிஷா தோசர் பெற்றார். மராத்தியில் வெளியான ‘நாள் 2’ என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை த்ரிஷா தோசர் பெற்றார். இப்படத்தில் சிமி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 5 வயது. இதன்மூலம் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை த்ரிஷா தோசர் முறியடித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; “த்ரிஷா தோசருக்கு எனது வாழ்த்துகள். நான் முதல் விருது வாங்கும்போது எனக்கு வயது 6 என்பதால், எனது சாதனையை நீங்கள் முறியடித்துவிட்டீர்கள். உங்கள் திறமைமூலம் தொடர்ந்து பயணியுங்கள் மேடம்! உங்கள் குடும்பத்தினருக்கும் எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்ஜே. சூர்யா, சாய்பல்லவி, விக்ரம் பிரபுவுக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் உயரிய அங்கீகாரங்களில் ஒன்று கலைமாமணி விருது. இயல், இசை, நாடகம் என கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு இந்தவிருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021,22,23ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறுவோருக்கான பட்டியல் அண்மையில் வெளியானது. சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், சின்னித்திரை கலைஞர்கள் கமலேஷ், மெட்டி ஒலி காயத்ரி, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அனகோண்டா ட்ரெய்லர் காட்சி
அனகோண்டா ட்ரெய்லர் வெளியீடு!
கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘அனகோண்டா’. இப்படம் வெளியானபோது மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. விமர்சன ரீதியாக இது வரவேற்பை பெறாவிட்டாலும் 90ஸ் கிட்ஸ்கள், 2000 தொடக்கத்தில் பிறந்தவர்கள் கொண்டாடி ரசித்த படங்களில் முக்கியமான ஒன்று. காட்டுக்குள் சென்றவர்கள் பாம்புக்கு பயந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நொடியும் நகரும் படம்தான் அனகோண்டா. முதல் பாகத்தை தொடர்ந்து 2004-ல் தி ஹண்ட் ஆஃப் தி ப்ளம் ஆர்கிட் என்ற பெயரில் இரண்டாம் பாகம் வந்தது. அதன்பின் 2008, 2009, 2015 என மூன்று அனகோண்டா படங்கள் வந்தன. ஆனால் முதலில் வெளியான படத்திற்கு கிடைத்த வரவேற்பு, வசூல் என எதுவும் மற்ற எந்த படங்களுக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் அனகோண்டா மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை டாம் கோர்மிகன் இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் படம் வரும் டிச.25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஎம்ஐ கட்டாத ரவிமோகனின் பங்களாவை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ்
ரவிமோகன் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ்!
கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இணையத்தில் ட்ரெண்டில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் ரவிமோகன். அதற்கு காரணம் அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி ஆர்த்தியை பிரிவதாக தெரிவித்த விவாகரத்து அறிவிப்பும், தோழி கெனிஷா உடனான நட்புறவும்தான். தொடர்ந்து ரவிமோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கியுள்ளார். இதனிடையே நடிகர் ரவி மோகன் மீது டச் கோல்ட் யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது. அதில், கடந்த ஆண்டு செப்டம்பரில் 2 படங்களில் நடிக்க ரவி மோகனை ஒப்பந்தம் செய்ததாகவும், முதல் படத்திற்கு முன்பணமாக 6 கோடி ரூபாய் வழங்கியதாகவும், ஆனால் தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் வேறு நிறுவனத்தின் படங்களில் அவர் நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரவி மோகனுக்குச் சொந்தமான ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்து அதன் மூலம் தாங்கள் வழங்கிய முன்பணத்தைத் திரும்பப் பெறவும் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதனிடையே, சம்பந்தப்பட்ட பங்களா தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதும், அதற்கான தவணை தொகையை ரவி மோகன் சரியாக கட்டவில்லை என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவரது தரப்பில் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை செலுத்தாததால், தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் 3 அதிகாரிகள் ரவி மோகனின் வீட்டில் ஜப்தி நோட்டீஸை ஒட்டிச் சென்றனர். ரவிமோகன் தற்போது அந்த வீட்டுக்கு செல்வது இல்லை என்று கூறப்படுவதால், ரவி மோகனின் அலுவலகத்திலும் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளதாக கூறி அதிகாரிகள் சென்றனர். ரவிமோகன் இந்த தவணைத் தொகையை கட்டவில்லை என்றால், இந்த பங்களா தனியார் வங்கி வசம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்ரீனா கைஃப் - விக்கி கௌசல்
பெற்றோராகும் கத்ரீனா-கௌசல் தம்பதி!
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவரான கத்ரீனா கைஃப் - விக்கி கௌசல் தம்பதி விரைவில் தாங்கள் பெற்றோராகப் போவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019 முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, 2021-ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தைத் தொடர்ந்தே கத்ரீனா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அதற்கு கத்ரீனா ஜோடி மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கத்ரீனா கர்ப்பமாக இருப்பதாக அவர்களாகவே அறிவித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் ஒன்றையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சைந்தவி - ஜிவி பிரகாஷ் குமார்
குழந்தையை சைந்தவியே வளர்க்கலாம்!
தமிழ் திரையுலகில் கடந்தாண்டை விவாகரத்து ஆண்டு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து தங்கள் பிரிவு செய்தியை அறிவித்தனர். அந்த வரிசையில் இருப்பவர்கள்தான் இசை தம்பதிகள் ஜிவி. பிரகாஷ்-சைந்தவி. பள்ளிப்பருவத்திலிருந்தே காதலித்து வந்த இருவரும் கடந்த 2013ஆம் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ‘அன்வி’ என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் கடந்தாண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரிவதாக அறிவித்தாலும் பொதுவெளியில் இருவரும் பரஸ்பரம் நல் உறவை பேணி வந்தனர். இதனைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் எனக்கூறி வந்தனர். விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், மகள் அன்வியை சைந்தவியே வளர்க்கலாம், அன்வியை சைந்தவி பார்த்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்தார். விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில் தீர்ப்பு செப்.30 வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா
தேனிசைத் தென்றலுக்கு மரியாதை!
தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. தனது இசை மற்றும் பாடல்களால் இன்றும் சினிமா உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை தக்கவைத்துள்ளார். 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து ஒரே வருடத்தில் 37 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் தேவாதான். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கௌரவித்துள்ளது. இவரின் இசைப்பயணத்தை கௌரவிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவிற்கு சென்ற தேவாவை, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து, நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கமான செங்கோலை கொடுத்து மரியாதை செய்துள்ளனர். இது ஒரு பெரிய அரசியல் கௌரவமாக பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்படும் விஜய்?
நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், சம்பவத்தன்று இரவே கரூர் சென்று பார்வையிட்டார். அமைச்சர்கள் பலரும் கரூரில் முகாமிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மன வருத்தத்துடன் அறிக்கை வெளியிட்ட விஜய், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகையும் அறிவித்தார். இதனிடையே விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பல தரப்புகளிலும் பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், விசாரணையில் உண்மை வெளிவந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.