70 வருடம் கால்ஷீட் வேண்டும்! இப்படியும் காதலா? சரண்யா-பொன்வண்ணன் காதல் கதை!
நடிகர் பொன்வண்ணன் பிறந்தநாளையொட்டி அவரது காதல்கதை குறித்து பார்ப்போம்.;
படங்களில் வரும் லவ் சீன்களை பார்த்து, பலர் ப்ரபோஸ் செய்வதை பார்த்திருப்போம். காரணம் படங்களில் வரும் சில காதல் காட்சிகள் வித்தியாசமானதாக, பலரையும் கவரும் விதமாக இருக்கும். அப்படியிருக்கும்போது ஒரு இயக்குநருக்கு காதல் வந்தால்? அவர் தன் காதலியிடம் காதலை சொன்னால்? எப்படி இருக்கும் என்று கேட்டால் சொல்லவா வேண்டும்... பொதுவாக நடிகர், நடிகைகளிடம் 6 மாத காலமோ, குறைந்தபட்சம் ஒரு வருடமோ கால்ஷீட் கேட்கலாம். ஆனால் ஒரு இயக்குநர் தன் படத்திற்காக 70 வருடம் ஒரு நடிகையிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். இதனைக்கேட்ட நடிகைக்கு ஒரே குழப்பம், 70 வருடமா? என்று. ஆனால் கடைசியில் அது கால்ஷீட் இல்லை, காதல் ப்ரபோஸ் என புரிந்துகொண்டார். இப்படி அழகாக ப்ரபோஸ் செய்த அந்த இயக்குநர் யார்? அதற்கு ஓகே சொன்ன அந்த நடிகை யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க...
நாயகன் படத்தில் நடிகை சரண்யா
நடிகை சரண்யா பொன்வண்ணன்...
மணிரத்னத்தின் நாயகன் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன் பிறகு சில படங்களில் நடித்துவிட்டு, சுமார் 8 ஆண்டுகள் திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார். பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய சரண்யா, ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி என பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து வேல், பாண்டி, தெனாவட்டு, திருவிளையாடல் ஆரம்பம், முத்துக்கு முத்தாக, கிரீடம், ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி, 24, ரெமோ, கொடி உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
குறிப்பாக “அதெல்லாம் ஆடி போய் ஆவணி வந்தா என் புள்ள டாப்பா வந்துடுவான்” என களவாணி படத்தில் இவர் பேசிய வசனம் இன்றும் வைரல்தான். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே சரண்யாதான் என்ற அளவிற்கு தனது நடிப்பால் பெரும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இதனிடையே நடிகை சரண்யா 1989-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான ராஜசேகரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் சரிவராத நிலையில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுப்பிரிந்தார். இதனைத்தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணனை கடந்த 1995ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர். தற்போது டிசாப்ட் என்ற பள்ளியைத் தொடங்கி பலருக்கும் தையல் கற்றுக்கொடுத்து வருகிறார்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுடன் சரண்யா
பொன்வண்ணன்...
இயக்குநர், பின் நடிகர், ஓவியர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர் பொன்வண்ணன். பருத்தி வீரன், மாயாண்டி குடும்பத்தார், பேராண்மை என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களை தாண்டி இப்போது வெப் சிரீஸ், தொலைக்காட்சி தொடர்கள் மூலம் 2கே கிட்ஸ் மத்தியிலும் பிரபலம் அடைந்து வருகிறார். தற்போது இவர் நடித்துவரும் ‘கெட்டிமேளம்’ என்ற தொடர்மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனிடையே கடந்த 1995ஆம் ஆண்டு நடிகை சரண்யாவை திருமணம் செய்துகொண்டார். மேலே நாம் குறிப்பிட்டிருந்த அந்த இயக்குநரும், நடிகையும் வேறு யாருமல்ல. அது பொன்வண்ணனும், சரண்யாவும்தான். நடிகர் பொன்வண்ணன்தான் இப்படி ஒரு அழகான ப்ரபோஸலை செய்துள்ளார். நடிகர் பொன்வண்ணன், இயக்குநர் இமயம் பாராதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தில் உதவி இயக்குநராக இருந்துள்ளார். அந்தப் படத்தில் நடித்தும் உள்ளார். அப்படத்தில் சரண்யாவும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவம்தான் இவர்களின் திருமணத்திற்கு முக்கியப்புள்ளியாக இருந்துள்ளது. அந்த அழகான ப்ரபோஸல் எப்படி நடந்தது என்று பார்ப்போம்.
இந்த யோசனை நமக்கு தோணாம போச்சே...
தனது காதல்கதை குறித்து நடிகர் பொன்வண்ணனே பல இடங்களில் மனம் திறந்து பேசியுள்ளார். அது என்ன என பார்ப்போம்... நான் கருத்தம்மா படத்தில் ஒருநாள் படப்பிடிப்புக்கு கிளம்பிட்டு இருக்கும்போது ஒரு ரூமில் பிரவுன் பேப்பரை போட்டு, சரண்யா, கட் பண்ணிட்டு இருக்காங்க. நான் முன்னாடி அவரை சினிமாவில் பார்த்ததோடு சரி... சந்திச்சது இல்லை. நான் இவங்களை கிராஸ் செய்யும்போது டைரக்டர் டிபார்ட்மென்ட்டாக அவரைப் பார்த்துட்டுப் போயிட்டேன். அப்புறம் படப்பிடிப்பில் அவர்களிடம் கேட்டேன், என்ன கட் பண்ணி செஞ்சிட்டு இருந்தீங்கன்னு? அப்போ சொன்னாங்க, 'கொத்தாரி இன்ஸ்டியூட்டில் டிசைனிங் படிச்சிட்டு இருக்கேன்; அதுக்கு எக்ஸாம் எல்லாம் இருக்கு; இங்கே ஷூட்டிங்கில் நேரம் கிடைக்கும்போது அதற்கு என்னை தயார்படுத்திக்கொண்டு இருக்கேன்' அப்படின்னு சொன்னாங்க. இயல்பிலேயே நான் ஓவியன். அதனால் எனக்கு ஒரு மரியாதை வந்திருச்சு. ஒருத்தர்மேல் மரியாதையோ அன்போ வருவதற்கு ஒரு புள்ளி இருக்கும் இல்லையா? ஒன்று குணாதிசயமாக இருக்கும் அல்லது உதவியாக இருக்கும்.
நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யா
நடிகர் - நடிகை என்பதையெல்லாம் தாண்டி, நம்ம சாதிடா இவங்க, ஒரு ஆர்ட் இவங்ககிட்ட இருக்கு என்று தோணுச்சு பாருங்க. அதுதான் எங்கள் காதலை கல்யாணத்தில் முடித்து வைத்தது. லவ் அப்படிங்கிறதுக்கு ஒரு புள்ளி தேவைப்படுது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த நிகழ்வு நடந்து 4 வருடங்கள் கழித்துதான் நான் திருமண வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறேன். வாழ்க்கையை நினைச்சு யோசிக்கும்போது ரசனை ஒத்தவங்க நமக்கு துணையாக இருக்கணும்னு நமக்கு எப்போதுமே தோணும். அப்படி யாரையும் நம்ம பார்க்கவில்லையே என்று யோசிக்கும்போது, நம்ம ரசனை ஒத்தவங்களா, இவங்கதான் வந்து நின்னாங்க. பிறகு நான் போய் கேட்டேன். இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. லவ்வில் ஆரம்பிச்சு, அரேஞ்சுடு மேரேஜ் ஆக நடந்து இருபத்து ஐந்து வருடங்களை நிறைவுசெய்துட்டோம்” என பொன்வண்ணன் கூறியுள்ளார்.
அதுபோல தனது காதல் வாழ்க்கை குறித்து பேசிய சரண்யா, “எனக்கு அவர் ஃபோன் செய்து, நான் ஒரு படம் எடுக்க போகிறேன். அதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றார். அதற்கு நான், அப்படியா சார், எத்தனை நாள்? என்று கேட்டேன். அதற்கு அவர் 70 வருஷம் கால்ஷீட் வேண்டும் என்றார். எனக்கு அப்படி சொன்னதும் புரிந்துவிட்டது. உடனே ‘தெரிந்துதான் பேசுறீங்களா’ என்று கேட்டேன். தெரியாமல் கூட பேசுவார்களா என்று அவர் கேட்டார். நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன் என்றேன். நல்லா யோசிச்சு சொல்லுங்கள் ஒரு பிரச்சனையும் இல்லை. உடனே நீங்கள் நினைத்துவிடாதீர்கள், நான் உங்கள லவ் பண்றேன். நீங்க இல்லன்னா செத்துடுவேன். அப்டிலாம் நெனைக்காதீங்கன்னு சொன்னாரு. நான் ஃபோனை வைத்துவிட்டு அப்பாவிடம் கூறினேன். என்னப்பா இவரு இப்டி பேசுறாரு. ஒரு நாள் கூட ஷூட்டிங்கில் பேசுனது இல்லை.. வேற வேலை இல்லாம பேசுறாரு போலன்னு சொன்னேன்” என்றார்.
சினிமா ஜோடிகளில் அஜித்-ஷாலினிதான் சூப்பர், சூர்யா-ஜோதிகாதான் சூப்பர் என ரசிகர்கள் சிலாகித்து பேசிவரும் நிலையில், அவர்களுக்கெல்லாம் முன்னோடி நாங்கள் என்பதை சரண்யா-பொன்வண்ணன் ஜோடி அடக்கமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள் போல... அதுவும் விவாகரத்து பெற்ற சரண்யாவை, பொன்வண்ணன் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது, இன்றைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றும் அதே காதலுடன், சரண்யா-பொன்வண்ணன் ஜோடி வாழ்ந்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சரண்யா
தற்போது இவர்களின் காதல் கதையை கேட்கும் பலரும் ‘ச்ச.. எவ்ளோ படம் பாத்துருப்போம். நமக்கு இப்படி ஒரு யோசன வராம போய்டுச்சே’ என கவலைப்படுகிறார்கள். மேலும், ‘இப்படியும் ப்ரபோஸ் செய்யலாம் போலயே’ என யோசிக்கிறார்கள். 70 வருடம் என சொன்னதற்கு காரணம் உள்ளதாம். அப்போது பொன்வண்ணனுக்கு வயது முப்பதாம். நூறு வயது வரை வாழவேண்டும் என்பதற்காக 70 வருடங்கள் எனக் கூறினாராம். இந்த எழுபது வருடத்தில் தற்போது 31 வருடத்தை கடந்துள்ள பொன்வண்ணனுக்கு இன்றோடு 62 வயது. இந்த கவிஞரின் பிறந்தநாள் சிறக்க ராணி ஆன்லைன் சார்பாக வாழ்த்துகிறோம்.