இந்த மேக்கப் போட்டால், முகத்தில் முகப்பரு இருப்பதே தெரியாது!
முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் மேக்கப் போடலாமா? அப்படி மேக்கப் போட்டால் அது இன்னும் அதிக விளைவுகளை ஏற்படுத்துமா? முகப்பருக்கள் தெரியாத அளவுக்கு மேக்கப் போட முடியுமா?;
முகத்தை எப்போதும் பளபளப்பாக, அழகாக காட்ட வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பம். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைதான் மேக்கப். ஆனால் சிலரின் முகத்தில் பருக்கள், துவாரங்கள் இருக்கும். இவை வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போது, போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் பலருக்கும் பெரும் சங்கடத்தை கொடுக்கும். சில பருக்கள் மறைந்தாலும், தழும்புபோல் மாறி கருமையாக காட்சியளிக்கும். இதனால் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் மேக்கப் போடலாமா? அப்படி மேக்கப் போட்டால் அது இன்னும் அதிக விளைவுகளை ஏதேனும் ஏற்படுத்துமா? என சந்தேகம் எழும், பயமும் இருக்கும். ஆனால் அந்த பருக்களை மறைக்குமாறும், அதற்கு ஏற்றவாறும், அதனால் எந்த பக்க விளைவுகள் ஏற்படாமலும் மேக்கப் போட முடியும் என்கிறார் அழகுகலை நிபுணர் பிரஷாந்தி.
முகத்தில் பரு இருப்பவர்கள் மேக்கப்பின்போது டோனர் பயன்படுத்தலாம்
முகத்தில் முதலில் மாய்ச்சுரைசர் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் ரேசர் வைத்து முகத்திலிருக்கும் சின்ன சின்ன முடிகளை அகற்ற வேண்டும். அதன்பிறகு டோனர் பயன்படுத்த வேண்டும். துவாரங்கள் (Pores) கொண்ட சருமத்தைக் கொஞ்சம் டைட்டாக மாற்றுவதற்கும், துவாரங்களை மறைப்பதற்கும் டோனர் அவசியம். எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவதும் அதிகமாகவே இருக்கும். முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.
கண்பகுதியை முடித்துக்கொண்டு கடைசியாக லிப்ஸ்டிக் போட வேண்டும் - பிரஷாந்தி
அடுத்ததாக ப்ரைமர் போட வேண்டும். ப்ரைமருக்கு பின் அவர்களின் முக நிறத்திற்கு ஏற்ப கரெக்டர் பயன்படுத்த வேண்டும். பின்னர் கண்சீலர் போடலாம். இதனைத்தொடர்ந்து ஃபவுண்டேசன் அப்ளை செய்யலாம். ஃபவுண்டேஷனைத் தொடர்ந்து பவுடர் போடவேண்டும். பவுடர் போட்ட பிறகு செட்டிங் ஸ்பிரே அடிக்க வேண்டும். இது முடிந்தால் மேக்கப்பில் ஒரு பார்ட் ஓவர்.
தற்போது கண் பகுதிக்கு மேக்கப் போட வேண்டும். அதற்கு முதலில் ஐப்ரோவை ஷேப் செய்து, அதனை டார்க்கன் செய்ய வேண்டும். தொடர்ந்து ஐ-ஷேடோ அப்ளை செய்ய வேண்டும். ஐ-ஷேடோ நாம் அணிந்திருக்கும் ஆடை நிறத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பிறகு ஐ-லைனர், காஜல் போட வேண்டும்.
மேக்கப்பிற்கு முன்பும்... பின்பும்...
இறுதியாக லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். ஆடை மற்றும் ஐ-ஷேடோவிற்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸ்டிக் கலரை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். மேலும், லிப் லைனரால் நிச்சயம் அவுட்லைன் வரைந்த பின்னரே லிப்ஸ்டிக் போட வேண்டும். லிப்ஸ்டிக் போட்டு முடித்தால் மொத்த மேக்கப்பும் முடிந்தது. குறிப்பாக, இந்த மேக்கப் போட்டு முடித்த பிறகு, முகத்தில் முகப்பரு இருப்பதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.