எச்சரிக்கை தேவை
2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பதால், உழைத்துச் சம்பாதிக்கும் பணம் கையில் தங்கும். பேச்சுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டு. எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவதற்கு முன், ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. இந்த வாரம் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். நம்பினாலும் பெரிய அளவில் பிரயோஜனம் இருக்காது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் தேவை. யார் நல்லவர், கெட்டவர் என்று அடையாளம் காண முடியாத சூழ்நிலை ஏற்படும். உறவுகளால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்படலாம். மிகவும் அவசரம், அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் செய்யுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை சிறப்பாக இருக்கும். விவசாயம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. ஆனால், வேலையில் ஒரு திருப்தியற்ற மனநிலை இருக்கும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், திருப்தியின்மை தொடரும். ஏற்கனவே கடனுக்கு விண்ணப்பித்திருந்தால், அது இந்த வாரம் கிடைக்கும். கடன் வாங்கி அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண வாய்ப்புகள் அமையும். இரண்டாம் திருமணம் எதிர்பார்த்திருப்பவர்களும் முயற்சிக்கலாம். உங்கள் அந்தஸ்தும், புகழும் கூடும். இந்த வாரம் விநாயகர் மற்றும் பைரவர் வழிபாடு முக்கியம்.