மிருணாள் தாகூரை காதலிக்கும் நடிகர் தனுஷ்? விரைவில் திருமணம்?

சீதாராமன் புகழ் நடிகை மிருணாள் தாகூரை நடிகர் தனுஷ் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல இந்த வாரம் நடைபெற்ற சுவாசியர சினி தகவல்களை காணலாம்.;

Update:2025-08-12 00:00 IST
Click the Play button to listen to article

நடிகர் தனுஷ் - நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலிப்பதாக வெளிவரும் தகவல்கள்தான், தற்போது இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இதுபோல இந்த வாரம் திரையுலகில் நடந்த ஸ்ருதிஹாசன் குறித்த ரஜினியின் சர்ச்சை பேச்சு, தேசிய திரைப்பட விருதுகள் 2023, நடிகை கஜோல் ஹிந்தியில் பேசமறுத்தது உள்ளிட்ட சில சுவாரஸ்ய செய்திகளை சினி பைட்ஸ் பகுதியில் காணலாம். 


சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு

“அழகா... அழகா...” ரீ-ரிலீஸான ‘சுந்தரா டிராவல்ஸ்’!

‘ஈ பறக்கும் தளிகா’ எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலுமே இயக்குநர் தாஹாதான் இப்படத்தை இயக்கினார். கடந்த 2002-ல் வெளியான இப்படத்தில் நடிகர் முரளி, வடிவேலு, வினு சக்கரவர்த்தி, வாசு, நடிகை ராதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒரு பேருந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. தற்போதும் இப்படம் குறித்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் 23 ஆண்டுகள் கழித்து கடந்த ஆக. 8ஆம் தேதி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதமே இப்படம் ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸாகியுள்ளது. 


 ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து விமர்சித்த நடிகை ஊர்வசி

ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுகள் குழுவை விமர்சித்த ஊர்வசி!

திரைப்பட கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு, மத்திய அரசு தேசிய திரைப்பட விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான ‘பார்க்கிங்’ படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பெறுகிறார். Non feature film பிரிவில் தமிழ் ஆவணப்படமான லிட்டில் விங்ஸ் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை பெறுகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசைப்பிரிவில் இரண்டாவது முறையாக தேசிய விருது பெருகிறார். இதுதவிர நடிகை ஊர்வசிக்கு உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுக்கும், 12th Fail நடிகர் விக்ராந்த் மேஸிக்கும் சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஆடுஜீவிதம், அயோத்தி போன்ற தென்னிந்திய படங்கள் கவனிக்கப்படாதது குறித்து நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார். எதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகின்றன? விருது வழங்குவதற்கு அரசியல், பிராந்திய சார்பு, பிரபலம் எல்லாம் காரணமாக இருக்கக்கூடாது என தெரிவித்த அவர், எதைவைத்து ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது என கேள்வியும் எழுப்பினார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம் ஜவான் படத்தை வைத்து மட்டும் ஷாருக்கானை எடைபோடக்கூடாது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


அம்பிகாபதி படத்தில் நடிகர் தனுஷ் 

“அம்பிகாபதியின் ஆன்மா சிதைந்துவிட்டது” - தனுஷ்!

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ், ஹிந்தியில் அம்பிகாபதி படம் மூலம் அறிமுகமானார். ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் சோனம் கபூர், அபய் தியோல் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். இந்நிலையில் அண்மையில் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதில், ‘ஏஐ’ உதவியுடன் கிளைமாக்ஸில் தனுஷ் உயிருடன் மீண்டுவருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இது நடிகர் தனுஷையும், இயக்குநர் ராயையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் தனுஷ் வெளியிட்ட பதிவில், இந்த கிளைமாக்ஸ் மாற்றம் படத்தின் ஆன்மாவையே அழித்துவிட்டது. எனது கடும் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இது 12 ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த படம் இல்லை. திரைப்படங்களையும், அதன் கதைக்களத்தையும் ஏஐ தொழில்நுட்பம் கொண்டு மாற்றுவது கலை மற்றும் கலைஞர்களுக்கு பெரும் கவலையை கொடுக்கிறது. இது கதை சொல்லும் நேர்மையையும், சினிமாவின் மரபையும் அச்சுறுத்துகிறது. இது போன்ற செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புவதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார். 


நடிகை ஸ்ருதி கிளாமர் நடிகையாச்சே! - நடிகர் ரஜினிகாந்த்

ஸ்ருதிஹாசன் கிளாமர் நடிகை - ரஜினி சர்ச்சை பேச்சு!

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கூலி. இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர்கான், சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ‘மோனிகா’ பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் குறித்து பேசிய ரஜினிகாந்த், கூலி படத்தில் ஒரு முக்கியமான பெண் கதாபாத்திரம் இருக்கிறது. இதில் யார் நடிக்கப்போகிறார்கள் என லோகேஷிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘ஸ்ருதி சார்’ என்றார். உண்மையாகவா? நான் ஸ்ருதியை 3 படத்தின்போது பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் கிளாமரான நடிகையாச்சே! இந்தக் கதாபாத்திரத்திற்கு எப்படி? என்று லோகேஷிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘அவரது அப்பா படங்களில் நடிப்பதைவிட உங்களது படத்தில் நடிக்கதான் அவர் ஆர்வமாக இருக்கிறார்’ எனக் கூறியதாக ரஜினி பேசினார். இது கமல் மற்றும் ஸ்ருதிஹாசன் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. ஒருசில படங்களில் நடித்தால், அதைவைத்து கிளாமர் நடிகை என்றே ஒருவரை கூறுவதா என ரஜினியின் பேச்சை விமர்சித்து வருகின்றனர். 


அண்மையில் தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கிய கஜோல்

ஹிந்தியில் பேசமறுத்த நடிகை கஜோல்

பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கஜோல். ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் மகாராஷ்டிரா அரசு வழங்கிய மாநில திரைப்பட விருது 2025 விழாவில் கலந்துகொண்டார். இவ்விழாவில் கஜோல் இந்திய சினிமாவுக்கு அளித்த பங்களிப்பு மற்றும் கலைத்துறையில் அவரது சேவையை பாராட்டி மகாராஷ்டிரா அரசு இவருக்கு ராஜ்கபூர் விருது வழங்கி கவுரவித்தது. இவ்விழாவினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கஜோல், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஆங்கிலம் கலந்த மராத்தியில் பதிலளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஹிந்தியில் பதிலளிக்குமாறு கூறியுள்ளார். உடனே முகம் சிவந்த கஜோல், “எதற்கு ஹிந்தியில் பேச வேண்டும். நான் பேசுவது புரிபவர்களுக்கு புரிந்தால் போதும்” என ஆவேசமாக பதிலளித்தார். மகாராஷ்டிராவில் ஹிந்தி - மராத்தி மொழி சர்ச்சை பெரும் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், கஜோலின் இந்த பதில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அவர் நடிப்பதற்கு பாலிவுட் ஹிந்தி படங்கள் வேண்டும். சம்பாதிக்க ஹிந்தி மொழி வேண்டும். ஆனால் அவர் ஹிந்தி மொழியில் பேசமாட்டாரா? அவர் இனி மராத்தி மொழி படங்களில் மட்டும் நடிக்கட்டும். அவர் ஹிந்தியை மதிக்கவில்லை என்றால், ஏன் படத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்க வேண்டும் என ஹிந்தி மொழி பேசும் பலரும் கஜோலை விமர்சித்து வருகின்றனர்.


 மிருணாள் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட தனுஷ்

மிருணாள் தாகூரை காதலிக்கும் தனுஷ்?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது பாலிவுட் இயக்குநர் எல். ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான ‘இனிய இருமலர்கள்’ எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மிருணாள். சீதாராமன் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தார். தற்போது பாலிவுட் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷும், நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் மிருணாள் தாகூர் நடித்துள்ள சன் ஆஃப் சர்தார் 2 பட நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மிருணாள் தாகூர் தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் பார்ட்டியிலும் தனுஷ் கலந்துகொண்டார். அதேபோன்று மும்பையில் நடந்த சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியிலும் தனுஷ் கலந்துகொண்டதோடு, மிருணாள் தாகூருடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகியது. இதனிடையே தனுஷின் இரண்டு சகோதரிகளையும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய தொடங்கியுள்ளார் நடிகை மிருணாள். இதனால் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இருந்தபோதிலும், இந்த தகவல்களை மிருணாள் தாகூர் மறுத்துள்ளார்.


நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது

மீரா மிதுன் கைது!

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 2021 ஆகஸ்டில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படையும் அமைக்கப்பட்டது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக மீரா மிதுன் கைது செய்யப்படாமல் இருந்ததற்கு போலீசார்மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனிடையே டெல்லியில் சுற்றித்திரியும் தனது மகளை மீட்டுத்தருமாறு மீரா மிதுனின் தாய் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வாயிலாக, டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் தெரிவித்து, மீரா மிதுனை மீட்க உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, “டெல்லி போலீசார் உதவியுடன், டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவால், மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். தற்போது, டெல்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்” என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, டெல்லியில் உள்ள மீரா மிதுனை கைது செய்து, வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.


யூடியூபர்கள் கோபி - சுதாகர்

கோபி, சுதாகர் மீது காவல் ஆணையத்தில் புகார்!

நெல்லை கவின் கொலை வழக்கை தொடர்ந்து ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என குரல்கள் வலுத்து வருகிறது. எம்.பி. கனிமொழியும் தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் ஆணவக்கொலைகள் தொடர்பாக பிரபல யூடியூபர்களான கோபி - சுதாகர் ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், ஆணவக்கொலைகளை விமர்சிக்கும் வகையில் காமெடியாக பேசியிருந்தனர். இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், பலரும் இதை பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் என கோபி, சுதாகரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோவை நீக்க வேண்டும் எனவும், பரிதாபங்கள் சேனலுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு குடும்பங்கள் இடையேயான மோதலை இரு சமூக மோதலாக சித்தரிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.


கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் ஹன்சிகா

விவாகரத்தை உறுதிசெய்த ஹன்சிகா?

"எங்கேயும் காதல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஹன்சிகா மோத்வானி, நடிகர் சிம்புவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்ததாகவும் கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடிகை ஹன்சிகா கடந்த 2022 டிசம்பர் 4ம் தேதி சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சோஹைல் கத்துரியாவுக்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே இவருக்கு ஹன்சிகாவின் தோழியுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகை ஹன்சிகா நடனமாடும் வீடியோக்கள் எல்லாம் வெளியானது. சோஹைலின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகாதான் காரணம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவும், அவரது கணவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா தனது தாய் வீட்டில்தான் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், பிரிவை உறுதிப்படுத்தும் விதமாக கணவருடன் இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார் நடிகை ஹன்சிகா. இதனால் விவாகரத்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்