காதல் நோய் பரவுகிறது! நடிகை ஜெயசித்ரா வருத்தம்!
"குறத்தி மகள்" மூலம் சினிமா உலகில் நுழைந்த ஜெயசித்ரா, மிகக் குறுகிய காலத்தில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு, புகழ் நட்சத்திரமாகத் திகழ்கிறார்.;
(17-02-1974 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
நடிக்க வந்தவர்கள் எல்லோரும் நடிகை ஆகிவிடுவதில்லை! நடிகையாகிவிட்ட எல்லோரும் நிலைத்து நிற்பதும் இல்லை!
ஆனால், ஜெயசித்ரா?
"குறத்தி மகள்" மூலம் சினிமா உலகில் நுழைந்த ஜெயசித்ரா, மிகக் குறுகிய காலத்தில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு, புகழ் நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
இதற்குக் காரணம் என்ன?
ஜெயசித்ராவிடமே கேளுங்கள்:-
நான் நடிகையின் மகள்
நிருபர்: மிக விரைவில் முன்னுக்கு வந்து விட்டீர்களே, அது எப்படி?
டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் நடிகை ஜெயசித்ரா
ஜெயசித்ரா: நான் நட்சத்திரமாக திகழுவதற்கு காரணம் இரண்டு பேர். ஒருவர் என் அம்மா, மற்றொருவர் டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். என் அம்மா ஒரு பழம்பெரும் நடிகை(ஜெயஸ்ரீ)! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அடுத்து, கற்பகம் ஸ்டூடியோ என்ற நடிப்புக் கல்லூரியில் படித்தவர்கள் யாரும் சோடை போவது இல்லை. என்னை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தது கற்பகம் ஸ்டூடியோவில்தான். அன்று பெற்ற நடிப்புக் கல்வி, இன்னும் என் வளர்ச்சிக்கு உரமாக இருந்து வருகிறது.
ஜெய்சங்கர் சிபாரிசு செய்கிறாரா?
நிருபர்: உங்கள் அம்மா படத் தயாரிப்பாளர்களை அணுகி, உங்களுக்கு வாய்ப்பு கேட்பது உண்மையா?
ஜெயசித்ரா: எத்தனையோ வதந்திகளில் இதுவும் ஒன்று. என் அம்மா யாரிடமும் போய் எனக்கு வாய்ப்புக் கேட்பது இல்லை. "கால்ஷீட்" தகராறு செய்யாமல், படத் தயாரிப்பாளர்களுக்கும் டைரக்டர்களுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பதே, எனக்கு அதிகப் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதற்குக் காரணம். அதோடு நான் நடித்து இதுவரை வெளிவந்துள்ள எல்லாப் படங்களும் நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. அதனால் "ஜெயசித்ரா ராசியான நடிகை" என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். நான் அதிகப் படங்களில் நடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஜெய்சங்கர் எனக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக சிலர் கூறுகிறார்கள். அவருடன் அதிகப் படங்களில் நடிப்பதால், இப்படியொரு வதந்தி பரவி வருகிறது.
நடிகர் ஜெய்சங்கருடன் அதிக படங்களில் நடித்த ஜெயசித்ரா
கவர்ச்சியை நான் விரும்பவில்லை
நிருபர்: இப்பொழுது எத்தனை படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?
ஜெயசித்ரா: தற்போது 15 படங்களில் சுதாநாயகியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். "வெள்ளிக்கிழமை", "குலதெய்வம்"ஆகிய இரு படங்களில் பாம்புடன் சேர்ந்து நடித்து வருகிறேன்.
நிருபர்: கவர்ச்சி காட்டி நடிப்பீர்களா?
ஜெயசித்ரா: கவர்ச்சிப் பாத்திரங்களை நான் அதிகம் விரும்பவில்லை. "இதயம் பார்க்கிறது" என்ற படத்தில் நீச்சல் உடை அணிந்து நடித்து இருக்கிறேன். படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், அந்தப் படத்தின் ஸ்டில்களைப் பத்திரிகையில் பார்த்த ரசிகர்கள், இனிமேல் இப்படி கவர்ச்சி காட்டி நடிக்காதீர்கள்! என்று எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
இரு மாறுபட்ட வேடங்களில் ஜெயசித்ரா
காதல் நோய்
நிருபர்: நீங்கள் ஒரு நடிகரை காதலிப்பதாகக் கூறப்படுகிறதே, உண்மையா?
ஜெயசித்ரா: இந்தித் திரைப்பட உலகில்தான் இதுபோன்ற சூடான வதந்திகளை பரப்பி வந்தார்கள். இப்பொழுது தமிழ்த்திரை உலகிலும் அந்த நோய் பரவியுள்ளது. ஆனால், என் மனதில் அப்படி ஒரு நோய் இதுவரை ஏற்படவில்லை. என் கவனம் எல்லாம் நடிப்பைப் பற்றியேதான்! இந்த வயதில், எனக்கு எதுக்கு சார் காதல்!