சீரியலில் நடக்கும் அட்டூழியங்கள்! அட்ஜஸ்ட்மென்ட் செய்யவில்லை என்றால்... - நடிகை தேவிபிரியா
சீரியலில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து பேசியுள்ள நடிகை தேவிபிரியா, அட்ஜஸ்ட்மென்ட் செய்யவில்லை என்றால் வாழ்க்கையே போய்விடும் என்று மிரட்டல்கள் வந்ததாகவும், குடும்ப குத்துவிளக்கு என்று யாரையும் நினைத்து விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.;
சினிமாவில் நடிகையாக களமிறங்கி, பின்னர் சீரியல், டப்பிங் என கலக்கிவரும் நடிகை தேவிபிரியா, நன்கு பரிச்சயமான மற்றும் பலருக்கும் பிடித்த நடிகையாகவும் இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்துவரும் தேவிபிரியா, வெள்ளித்திரை சின்னத்திரை என மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ள அவர், சீரியல்களில் நடக்கும் அட்டூழியங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். சீரியல்களில் நேற்று வந்த நடிகை கூட, தான் வாங்கும் இன்றைய சம்பளத்தை ஈசியாக வாங்கிவிடுவதாகவும், ஆனால் அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்துகொண்டு ஸ்கிரிப்ட், ரிஹர்சல் எல்லாம் பார்க்காமல் ஃபோனையே நோண்டிக்கொண்டிருப்பதாகவும், தொழில் பக்தி இல்லாமல் இருப்பதாகவும், அப்படிப்பட்டவர்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், அட்ஜஸ்ட்மென்ட் என்பது உள்ளதாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
சீரியலுக்கு வந்த புதிதில் தேவிபிரியா - போலீஸ் கதாபாத்திரத்தில்
சினிமா நடிகையாக பயணத்தை தொடங்கிய தேவிபிரியா
மதுரையை சேர்ந்தவரான தேவிபிரியா, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, டாக்குமென்ட்ரி நடித்திருக்கிறார். அதன்மூலம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997ல் வெளியான மின்சார கனவு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு அஜித் நடித்த உயிரோடு உயிராக, வாலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வாலி படத்தில் தேவிபிரியாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து, ஊரு விட்டு ஊரு வந்து, ஏரிக்கரை பூங்காற்றே போன்ற படங்களில் நடித்த அவர், சீரியலில் தடம்பதித்தார்.
தேவிபிரியாவின் சீரியல் என்ட்ரி
சக்தி சீரியல்தான் தேவிபிரியா நடித்த முதல் சீரியல். அந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் சின்னத்திரை இவரை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டது. இதையடுத்து பல வெற்றி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். இவருக்கு பெரும்பாலும் வில்லி ரோல்கள் மற்றும் போலீஸ் கதாபாத்திரங்கள்தான் கிடைத்தன. தனக்கு கிடைத்த அனைத்து ரோல்களிலும் துணிச்சலாக நடித்து புகழ் பெற்றார். போலீஸ் கதாபாத்திரம் என்றால் தேவிபிரியா என்று சொல்லும் அளவுக்கு அதில் கனகச்சிதமாக பொருந்தியிருப்பார். ராதிகாவின் சீரியல்களில் ஆஸ்தான நடிகையாகவே வலம் வந்தார். லட்சுமி வந்தாச்சு, பாசமலர், செல்லமே, சந்திரலேகா, பந்தம் உள்ளிட்ட சீரியல்கள் தேவிபிரியாவின் கெரியரில் மிகவும் முக்கியமானவை. இந்த சீரியல்களில் தேவிபிரியாவுக்கு ஸ்ட்ராங்கான ரோல் மற்றும் நல்ல பெயர் கிடைத்தது.
தேவையில்லாத வழக்கில் தேவிபிரியா சிக்கியதாக பயில்வான் ரங்கநாதன் தகவல்
நடிப்பு மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் விளங்கும் தேவிபிரியா, நதியா, சிம்ரன், ஸ்நேகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் பேசியுள்ளார். புதுப்பேட்டை படத்தில் ஸ்நேகாவுக்கு பின்னணி பேசியதே தனது டப்பிங் பணியில் தனக்கு மிகவும் பிடித்தது என்றும், பொல்லாதவன் படத்தில் நடிகை அஞ்சுவுக்கு பின்னணி பேசியது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி தனது பணிகளில் ஏறுமுகமாக இருந்த தேவிபிரியாவின் வாழ்க்கையில் நடுவில் சூறாவளி வீசியது. சூறாவளியில் சிக்கினாலும், தனது தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தால் அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்தார்.
பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்...
நடிகை தேவிபிரியா ஒருவருடன் லிவிங் ரிலேசன்ஷிப்பில் இருந்தபோது, அவரை பிடிக்காத பெண் ஒருவர், பழிவாங்க திட்டமிட்டு தேவிபிரியாவை விபச்சார வழக்கில் சிக்க வைத்தாராம். ஆனால் சீரியல்களில் எப்படி போல்டான கதாபாத்திரங்களில் தைரியமாக நடிப்பாரோ, அதே போன்ற தைரியத்தோடு நீதிமன்றத்தில் வாதிட்டு தான் ஒரு நிரபராதி என வழக்கில் இருந்து விடுபட்டாராம். உண்மையிலேயே ஒரு துணிச்சலான பெண் தேவிபிரியா என இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தன் சேனலில் தெரிவித்திருந்தார்.
சீரியல், சினிமா குறித்து மனம் திறந்த தேவிபிரியா
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது சினிமா மற்றும் சீரியல் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தேவிபிரியா. அதில், "சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சினிமா துறையில் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்தது. ஏன் அந்த பயம் என்றால், சினிமாவில் அப்போது வாய்ப்பு கிடைப்பதே மிகக் கடினம். இதனால், கிடைக்கும் வாய்ப்புகளை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதை இழந்தவிடக்கூடாது என்ற பயம் வரும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் சினிமாவிற்கு வருவது மிகவும் சுலபம் ஆகிவிட்டது. இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்றவற்றில் அழகான பெண்ணை பார்த்துவிட்டால், அந்த பெண்ணுக்கு அடுத்து வாய்ப்பு கொடுத்துவிடுகிறார்கள். சீரியல்களிலும் அப்படித்தான். இதுபோன்ற வாய்ப்பு எங்கள் காலத்தில் இல்லை. வாய்ப்புக்காக கஷ்டப்பட்டோம். ஆனால் இப்போது வீடுதேடி வாய்ப்பு வருவதால், அவர்களுக்கு சினிமா மீது மரியாதையோ, பயமோ இருப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
கதையை தேர்வு செய்து நடித்ததால் தேவதர்ஷினி போன்ற நடிகைகள் சினிமாவில் பிரகாசிக்கின்றனர் - தேவிபிரியா
நான் அப்படி நடித்திருக்கூடாது!
நன்கு நடித்தும் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ள தேவிபிரியா, ஆனால் அதுவும் தான் செய்த தவறுதான் என்று கூறியுள்ளார். "சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், சீரியல் வாய்ப்புகள் கிடைத்தபோது சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். நிறைய சீரியல்கள் நடிக்கத் தொடங்கிவிட்டேன். இதனால் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டன. என்னுடன் அப்போது சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சில நடிகைகள், நன்கு கதை தேர்வு செய்து நடித்தார்கள். எனவே தற்போது சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சீரியல் மற்றும் சினிமாவில் அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்துவிட்டேன். கதை மற்றும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கவில்லை. அதனால் எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டன" என்று தேவிபிரியா தெரிவித்துள்ளார்.
மரியாதையே இல்லாமல் போய்விட்டது
"எங்கள் காலத்தில் சீரியலில் ஒரு நாளைக்கு 13 சீன்கள் நடிப்போம். அனைத்திற்கும் டயலாக் பேப்பர் இருக்கும். டயலாக் பேப்பரை படித்துவிட்டுதான், அந்த சீனில் நடிப்போம். இப்போது யாரும் டயலாக்கை முன்கூட்டியே படிப்பதில்லை. ப்ராம்டர் இருக்கிறது. உதவி இயக்குநர் சீனை பற்றி சொன்னால் கூட, அதை காது கொடுத்து கேட்காமல், நோ டைம் சார், நேரா டேக்குக்கு போய்விடலாம் என்று சொல்லிவிட்டு, நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வராங்க, நடிச்சி முடிச்சிட்டு உடனே ஃபோனை கையில் எடுத்துக்கொண்டு அதனை நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். சில இளம் நடிகர் நடிகைகள், ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை நேரத்தில் சீரியசாக இல்லாமல், சிரிப்பு அரட்டை என்று மற்றவர்களை தொந்தரவும் செய்வார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும், சில நேரங்களில் கோபம் வரும். இது சில நேரங்களில் சண்டையாகவும் மாறியிருக்கிறது.
இதில் கொடுமை என்னவென்றால், அப்படிப்பட்ட ஆர்டிஸ்டுகளுக்கும் அதே சம்பளம் தான், எங்களுக்கும் அதே சம்பளம் தான். இதனை நினைக்கும் போது, ஆத்திரமாக வரும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. நேற்று வந்தவர்களுக்கும் எங்களுக்கு ஒரே சம்பளம் என்பது வேதனையாகதான் இருக்கிறது. என்ன செய்வது? பல ஆண்டுகளாக நடிப்பதால், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் நண்பர்களாக உள்ளனர். அவர்களிடம் சம்பளத்தை கறாராக கேட்க முடியவில்லை. சில நேரங்களில் சம்பளத்தை பற்றி பேசாமல் ஆத்ம திருப்திக்காக நடித்து கொடுக்கிறோம். இருந்தபோதிலும், சம்பளத்தை விட சீனியர் நடிகர்களுக்கு மரியாதையே கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்" என்று தேவிபிரியா கூறியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்துவரும் தேவிபிரியா
தேவிபிரியா ஆதங்கம்
சீரியல்களில் வரும் காட்சிகளை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டு, எங்காவது தெரியாமல் ஆடை விலகி இருந்தால் கூட, அதனை சூம் செய்து இணையத்தில் போட்டுவிடும் கலாச்சாரம் தற்போது அதிகமாகிவிட்டதாக தேவிபிரியா ஆதங்கம் தெரிவித்துள்ளார். தன்னுடைய பெயரில் ரசிகர் பக்கம் நடத்தி வருபவர்கள்கூட, அதுபோன்ற ஃபோட்டோக்களை பதிவிடுவதாகவும், அதனை பார்க்கும்போது, இது ரசிகர் பக்கமா இல்லை வேறு ஏதேனும் பக்கமா என நினைக்க வைப்பதாக கூறியுள்ளார். ஆரம்ப காலங்களில் இதனை பார்க்கும்போது கவலையாக இருந்ததாகவும், இப்போது சிரிப்பு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால், குடும்ப குத்துவிளக்காக நடிப்பவர்களை கூட யாரும் விடுவதில்லை என்று தேவிபிரியா கூறியுள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ள அவர், தான் இப்போது சீனியர் நடிகை ஆகிவிட்டதால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்று சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது சினிமா மற்றும் சீரியல்களில் இருப்பதாக கூறியுள்ளார். முன்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், கேட்கப்படும் விதம்தான் மாறியுள்ளதாக கூறியுள்ளார். தங்கள் காலத்தில் எல்லாம், அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், உன் வாழ்க்கையே போய்விடும் என்று மிரட்டல்கள் வரும் என்றும் தேவிபிரியா தெரிவித்துள்ளார். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோல்தான் அட்ஜஸ்ட்மென்ட் என்றும், அதிலிருந்து தன்னை காத்துக்கொண்டதாகவும், ஒத்துழைக்கவில்லை என்பதற்காக நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகே சொல்லி நிறைய வாய்ப்புகளுடன் நிறைய சம்பாதித்தவர்களும் உண்டு... அட்ஜஸ்ட்மென்டுக்கு நோ சொல்லி வாய்ப்புகளை இழந்து, இருப்பதை வைத்து வாழ்பவர்களும் உண்டு என்றும் தேவிபிரியா குறிப்பிட்டுள்ளார்.