"பாபி" வெற்றி பெற செக்ஸ்தான் காரணம் - நடிகை ஜெயசுதா
"பாபி" சென்னை நகரில் ஒரே தியேட்டரில் 52 வாரம் தொடர்ந்து ஓடி, வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தியது.;
(17-11-1974 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
"இந்திப் படங்கள் தமிழ் நாட்டில் நூறு நாள் ஓடுகின்றன. தமிழ்ப் படங்கள் பத்து நாள் ஓட தாளம் போடுகின்றன!" படம் பார்ப்பவர்கள் முதல், படம் தயாரிப்பவர்கள்வரை எல்லோரும் ஒரே குரலாக இப்படிச் சொல்லுவது அடிக்கடி என் காதில் விழுகிறது. ஆனால், இதற்கு என்ன காரணம்? ஏன் இந்திப் படங்களைப் பார்க்க ஓடுகிறார்கள்? இது யோசிக்க வேண்டிய ஒன்று.
இந்தி தெரியாது
இந்திப்படம் பார்ப்பவர்களில், நூற்றுக்கு பத்துப் பேருக்குக்கூட இந்தி தெரியாது. படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளுகிறவர்கள் பத்து சதவீதம்கூட தேற மாட்டார்கள். ஆனாலும், இந்திப் படங்களில் உள்ள அந்தக் கவரும் சக்தி எது?
நல்ல கதை அமைப்பா?
நானும் இந்திப் படங்கள் பார்த்து இருக்கிறேன். நாலு படம் பார்த்ததுமே. அவர்கள் அரைத்த மாவையே அரைப்பது நன்றாகத் தெரிந்து விடுகிறது!!
இந்தி நடிகர் - நடிகைகள் சிறப்பாக நடிக்கிறார்களா?
அவர்களே இதை ஒப்புக்கொள்ள மாட்டர்கள்! தமிழ்நாட்டில்தான் திலகங்கள் இருக்கிறார்கள். இந்திப் படங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வண்ணத்தில் தயாரிக்கப் படுகின்றனவா?
'பாபி' படம் குறித்து பேசிய நடிகை ஜெயசுதா
தமிழிலிம்தான் வண்ணப் படங்கள் தயாரிக்கபடுகின்றன. ஆனால், மண்ணைக் கவ்வுகின்றனவே!
இந்திப் படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கின்றனவா?
உண்மைதான்! ஆனால், பாடலுக்காகப் படம் பார்க்க வேண்டும் என்பது இல்லையே! இசைத்தட்டு கேட்டால் போதுமே!
அப்படியானால், இந்தப் படங்களின் வெற்றிக்கு உண்மையான காரணம்தான் என்ன?
கவர்ச்சி
சமீபத்தில் வெளிவந்த இந்திப் படங்களில் பெரும் வெற்றி பெற்றது, "பாபி". சென்னை நகரில் ஒரே தியேட்டரில் 52 வாரம் தொடர்ந்து ஓடி, வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தியது.
இந்த வெற்றியின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டால், இந்திப் படங்களின் வெற்றியின் இரகசியத்தைப் புரிந்து கொள்ளலாம்!
படத்தின் வெற்றிக்கு கதைதான் முக்கிய காரணம் என்பார்கள். ஆனால், "பாபி" கதை பழைய ஊறுகாய் ஜாடியில் இருந்து எடுக்கப்பட்டது எவ்லோருக்கும் தெரிந்ததுதான்!
'பாபி' படத்தில் செக்ஸ் காட்சிகளில் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை டிம்பிள் கபாடியா
"பாபி"யின் வெற்றிக்கு முதல் காரணம் மற்றும் முக்கிய காரணம் செக்ஸ் தான்". தயாரிப்பாளர் கபூரை சந்தித்து "சில காட்சிகளை வெட்டி விடுங்கள் ஓவர் செக்ஸ் ஆக இருக்கிறது" என்று ராஜேஷ்கன்னா கேட்டுக் கொள்ளும் அளவுக்கு டிம்பிள் கபாடியா செக்ஸியாக நடித்திருக்கிறார்! அந்த செக்ஸ்தான் ரசிகர்களை "வா! வா!" என்று கவர்ந்து இழுக்கிறது.
ராஜ்கபூர்
கவர்ச்சி என்று சொல்லப்படும் "செக்ஸ்" தான் இந்திப் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம். "பாபி"யை தயாரித்த ராஜ்கபூர், புகழ்பெற்ற நடிகர்; டைரக்டர். புதுமையான புரட்சிப் படங்களை தயாரித்தவர். கடைசியில் அவரே படு செக்சியாக "பாபி" படம் எடுக்க வேண்டியதாகிவிட்டது என்றால், படங்களில் எந்த அளவுக்கு "செக்ஸ்" இடம் பெற்றுவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுமுகங்கள்
தமிழ்ப் படங்களிலும் தகுந்த அளவில் "செக்ஸ்" இடம் பெற்றால்தான், இனி தமிழ்ப் படங்கள் தலை தப்ப முடியும். புதுமுகங்கள்தான் செக்ஸியாக நடிக்க முடியும். பழைய முகங்கள் கவர்ச்சியாக நடித்தால், பாட்டி மஞ்சள் பூசிக் குளிப்பது போல இருக்கும்! ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள்.
ராஜ் கபூர் மற்றும் பாலிவுட்டில் கவர்ச்சியில் கலக்கிய நடிகை ரேகா
"பாபி" படத்தில் டிம்பிள் கபாடியாவுக்குப் பதில், "செக்ஸ்குயின் ஜனத் அமன்" அல்லது "செக்ஸ் வெடி ரேகா" நடித்திருந்தால், அந்தப் படம் இவ்வளவு வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்களா?
மேலும் புதுமுகங்கள் தான் துணிந்து கவர்ச்சியாக நடிக்க முன் வருவார்கள். பழைய நடிகைகள் "பிகு" பண்ணுவார்கள். இன்னும் சொன்னால், புதுமுகங்கள் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் அவர்கள் ரசிகர்களிடம் சீக்கிரம் ஆதரவு பெற முடியும். டிம்பிளுக்கு எப்படி இவ்வளவு புகழ் கிடைத்தது? "செக்ஸ்" தானே காரணம்!
உப்புப் போல் "செக்ஸ்"
ஏற்கனவே பல தமிழ்ப் படங்கள் செக்ஸியாக தயாரிக்கப்பட்டன. ஆனால், அவை எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் அவை ஆபாசமாக இருந்ததுதான். ஆபாசம் வேறு; செக்ஸ் வேறு. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். கவர்ச்சியை விரும்புகிறவர்கள் கூட ஆபாசத்தை ஆதரிக்க மாட்டார்கள். சோற்றுக்கு உப்புப் போடுவது போன்றது "செக்ஸ்". உப்பு அதிகமானால், யார் சாப்பிடுவார்கள்? நான் டிம்பிள் கபாடியாவைப் பின்பற்ற முடிவு செய்துவிட்டேன்!