சிவகார்த்திகேயன் - கேபிஒய் பாலா மோதல்! காரணம் என்ன?
பாலிவுட்டில் பெரும்பாலான நடிகர்கள் நடிகைகளை கீழ்த்தரமாக நடத்துவார்கள் என மண்டி தொகுதியின் எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.;
தமிழ் திரையுலகில் இயக்குநர் என்றாலே, தற்போதைய தலைமுறையினர் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர்கள் இயக்குநர்கள் மணிரத்னமும், ஷங்கரும்தான். ஆனால் சமீபத்திய இவர்களின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி அவர்களே பெரும் அதிருப்தியில்தான் இருக்கின்றனர். மேலும் இயக்குநர் முருகதாஸின் சமீபத்திய படங்களான சிக்கந்தர், தர்பார் போன்றவையும் தோல்வியையே சந்தித்துள்ளன. இந்நிலையில் இந்த தோல்வி, பயத்தை தருகிறதா என்ற கேள்விக்கு முருகதாஸ் அளித்த சுவாரஸ்ய பதில், ரஜினியின் கூலி திரைவிமர்சனம், பாலிவுட் நடிகர்கள் மீதான கங்கனாவின் குற்றச்சாட்டு உள்ளிட்ட செய்திகளை இந்த வார சினி பைட்ஸ் பகுதியில் காண்போம்.
இயக்குநர்கள் மணிரத்னம், முருகதாஸ், ஷங்கர்
பயத்தை தருகிறதா தோல்வி? - முருகதாஸ் பதில்!
முருகதாஸ் இயக்கத்தில் பல வெற்றிப் படங்கள் வந்திருந்தாலும், சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த சிக்கந்தர், தர்பார் போன்ற படங்கள் தோல்வியை தழுவின. இதனிடையே அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள மதராஸி திரைப்படம் வரும்செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முருகதாஸிடம், “இயக்குநர் மணிரத்னம், ஷங்கரின் சமீபத்திய மாபெரும் படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. இந்த லெஜெண்ட் இயக்குநர்களின் சறுக்கல் உங்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறதா?” என கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் முருகதாஸ், அவர்கள் சாலையை போடக்கூடியவர்கள். அதனால் ஏற்ற இறக்கத்தை சந்திக்கின்றனர். ஒருவர் சரியாக சென்றால், அவர்கள், யாரோ போட்ட சாலையில் செல்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால் மணிரத்னமும், ஷங்கரும் புதிதாக முயற்சிக்கிறார்கள். இருவரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன” என பதிலளித்தார்.
கூலி பட கெட்டப்பில் நடிகர் அமீர்கான்
“ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை” - நடிகர் அமீர்கான்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஆக.14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்தில் நடிகர் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், நடிகர் அமீர்கான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகீர் ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே கூலி படத்தில் நடித்தற்காக நடிகர் அமீர்கான் ரூ.20 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், தான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “நான் கூலி படத்தில் நடித்தற்கு இருபது கோடி சம்பளம் பெற்றதாக தவறான தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மீது அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன். அவருடன் நடித்ததே பரிசுதான். அதனால் நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. சொல்லப்போனால் அதைப்பற்றி பேசக்கூட இல்லை” என தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர்களுக்கு எதிராக வெளிப்படையான கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத்
நடிகை கங்கனாவின் போல்ட் ஸ்டேட்மென்ட்!
பாலிவுட்டில் எப்போதும் ஒரு மோதல்போக்கை கடைபிடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பாலிவுட் நடிகர்கள் மீது கரிங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “பாலிவுட்டில் பெரும்பாலான ஆண் நடிகர்கள் அநாகரீகமானவர்கள். படப்பிடிப்பு தளத்திற்கு மிகவும் தாமதமாக வருவார்கள். மோசமாக நடந்து கொள்வார்கள். நடிகைகளைக் கீழ்த்தரமாக நடத்துவார்கள், ஓரங்கட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடத்தையை மற்ற நடிகைகள் பொறுத்துக் கொள்வார்கள் என்றும், அதனை தான் பொறுத்துக் கொள்ளாததுதான் பல பிரச்சனைகளை சந்திக்க காரணம் எனவும் கங்கனா கூறியுள்ளார்.
நடிகை பிபாஷா பாசு (இடது) - நடிகை மிருணாள் தாகூர்
உருவக்கேலி - மன்னிப்பு கேட்ட மிருணாள் தாகூர்!
ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மிருணாள் தாகூர், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான பிபாஷா பாசுவை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது. ‘பிபாஷா பாசுவின் தசைகள் ஆண்களைப் போல உள்ளது. அவரை விட நான் சிறப்பானவள்’ என்று முன்னர் அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மிருணாள். "19 வயதில் விவரம் தெரியாமல் முட்டாள்தனமாக பேசிவிட்டேன். நான் பேசிய வார்த்தைகள் எந்தளவுக்கு ஒருவரை காயப்படுத்தும் என்பதை அப்போது புரிந்திருக்கவில்லை. யாரையும் உருவக்கேலி செய்வது என் நோக்கமல்ல. விளையாட்டாக கூட நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதற்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மதராஸி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், காந்தி கண்ணாடி படத்தில் கேபிஒய் பாலா (வலது)
சிவகார்த்திகேயன் உடன் நேரடியாக மோதும் கேபிஒய் பாலா!
சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வரும் நடிகர் பாலா, பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் திரைப்படம் மற்றும் ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒருசில படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தற்போது கதாநாயகனாக படம் ஒன்றில் அறிமுகமாகிறார். ரணம் பட இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் கதாநாயகனாக பாலா நடிப்பில் உருவாகி உள்ள படம்தான் காந்தி கண்ணாடி. இப்படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. செப்.5ஆம் தேதியன்று, சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
அம்மா சங்கத் தலைவரான ஸ்வேதா மேனன்
அம்மா சங்கத்தின் ‘முதல் பெண்’ தலைவர்!
மலையாள நடிகர் சங்கத் தலைவர் தேர்தல் கடந்த ஆக.15ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்டார். தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டதற்கு பல நடிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆபாச படங்களில் நடித்ததாக கூறி, அவர்மீது பல்வேறு புகார்களை முன்வைத்து வழக்கும் தொடர்ந்தனர். அவரது தேர்தல் மனுவில் சில சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும், அவர் இந்த பதவிக்கு தகுதியற்றவர் என்றும் வாதிட்டனர். ஆனால் பல தடைகளையும் மீறி நடிகை ஸ்வேதா மேனன் இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் இதன்மூலம் மலையாள திரையுலகில் அம்மா சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சங்கத் தலைவரான பிறகு, நடிகை ஸ்வேதா மேனன் அளித்த பேட்டியில், “நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த்
எப்படி இருக்கிறது கூலி?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம், கடந்த ஆக.14ஆம் தேதி வெளியானது. ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். தனது நண்பனான சத்யராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதை கண்டிபிடிக்கும் ரஜினிகாந்த், அவர் எதற்காக கொல்லப்பட்டார்? நண்பனின் கொலைக்கு பழிதீர்த்தாரா? என்பதே கதை. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நாகர்ஜூனா, சௌபின் சாஹிர், சிறப்புத் தோற்றத்தில் வரும் அமீர்கான், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு சிறப்பாக நடித்துள்ளனர். அனிருத்தின் இசையும் படத்திற்கு ஏற்ப பொருந்தியுள்ளது. வழக்கமான நண்பனின் மரணத்திற்கு பழிவாங்கும் கதைதான் என்றாலும், புது திரைக்கதை மூலம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று கூறப்படுகிறது.
காதலி ஜார்ஜினாவுடன் ரொனால்டோ
நீண்டநாள் காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ!
போர்ச்சுகீசிய கால்பந்து ஜாம்பவானும், அல் நசீர் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். ஜார்ஜினா தனது திருமண மோதிரம் அணிந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்த செய்தியை அறிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில், 8 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ரொனால்டோ- ஜார்ஜினா ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரொனால்டோ, ஜார்ஜினாவுக்கு மிகவும் விலை உயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டுக்கொண்டதாகவும், அதனை ஜார்ஜினா ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த மோதிரத்தின் விலை ரூ.16 கோடியில் இருந்து 48 கோடிவரை இருக்கும் எனவும் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.