13 வயதில் "முந்தானை முடிச்சு" படத்தில் நடித்தேன்! விளையாடவே ஷூட்டிங் போவேன் - ஊர்வசி
நடிகை ஊர்வசி சமீபத்தில் தான் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது திரை வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, அவற்றில் இருந்த தான் பெற்ற அனுபவம் என தன்னை பற்றிய பல சுவாரசிய தகவல்கள் பகிர்ந்து கொண்டார்.;
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல மொழிப் படங்களில் தனது நகைச்சுவையான நடிப்பு திறமையை வெளிக்காட்டி, தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஓரு தனி இடத்தை பிடித்தவர்தான் நடிகை ஊர்வசி. கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி, நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்ததன் மூலம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் தனி ரசிகர்களை கவர்ந்தார். இவர் காலக்கட்டத்தில் இருந்த 80ஸ் ஹீரோயின்கள் பலரும் காணாமல் போன நிலையில், தற்போதும் புகழின் உச்சத்தில் இருப்பவர் இவர்தான். சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும், சொந்த வாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்தவர். ஆனால் அதையும் தாண்டி தற்போது எழுந்து நிற்கிறார். இந்நிலையில் ஊர்வசி சமீபத்தில் அளித்த நேர்காணல் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. அதில் அவர் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக...
13 வயதில் முந்தானை முடிச்சு படத்தில் நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி...
கவிதா ரஞ்சினி என்பதுதான் ஊர்வசியின் உண்மையான பெயர். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். ஊர்வசி, விபி நாயர் மற்றும் விஜயலட்சுமிக்கு ஜனவரி 25 ஆம் தேதி 1969 ஆம் ஆண்டு கேரளாவில் கொல்லம் மாவட்டம் சூரநாட்டில் பிறந்தவர். அவரது பெற்றோர் நாடக கலைஞர்கள். நாடக ட்ரூப் ஒன்றையும் வைத்திருந்தனர். அவரது மூத்த சகோதரிகள் அஞ்சலி மற்றும் கல்பனா நடிகைகள் ஆவார்கள். அவரது இரண்டு சகோதரர்கள் கமல் ராய் மற்றும் இளவரசனும் திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவரது சகோதரரான இளவரசன் 26 வயதில் தற்கொலை செய்து கொண்டார். ஊர்வசி கேரளாவில் பிறந்திருந்தாலும், சிறுவயதிலேயே குடும்பத்தினருடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். தனது சித்தியின் அறிவுரையால் சென்னை வந்த இவரின் குடும்பத்தினர் நாடகங்களிலும், திரைத்துறையிலுமே கவனம் செலுத்தினர். இப்படிதான் ஊர்வசியின் திரை வாழ்வானது எட்டு வயதில் தொடங்கியது.
1977 இல் வெளியான விட்ருண்ண மொட்டுக்கள் என்ற மலையாள படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் ஊர்வசி. தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் ஊர்வசிக்கு நடிக்க விரும்பமில்லை. கேமராவை பார்த்தாலே பயப்படுவாராம். இப்படி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஊர்வசி, 13 வயதிலேயே கதாநாயகியாக பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் நடித்தார். 1983 இல் வெளியான இந்த படம் குடும்ப ரசிகர்களை மகிழ்வித்து மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்த படத்தின் புகழ் முழுக்க நடிகர் பாக்யராஜுக்குதான் என்று பேட்டியில் ஊர்வசி தெரிவித்துள்ளார். காரணம், 13 வயதில் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தாலும், உண்மையில் அந்தப்பட ஷூட்டிங்குக்கு, தான் நடிக்க செல்லவில்லை என்றும், அங்கு தன்னுடன் நடித்த பசங்களுடன் விளையாடவே படப்பிடிப்புக்கு சென்றதாகவும், பாக்யராஜ் மட்டுமே படத்தில் உண்மையாக நடித்தார் என்றும் ஊர்வசி கூறியுள்ளார்.
'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ஊர்வசி
படம் வெளியான பிறகு, கண்ண தொறக்கணும் சாமி என்று பாடிக்கொண்டே பள்ளியில் மாணவர்கள் பலரும் தன்னை பின் தொடர்ந்ததால், இனி பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், வேறு பள்ளியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று பள்ளி நிர்வாகம் கூறிவிட்டதாகவும் ஊர்வசி தெரிவித்துள்ளார். இதனால் ஊர்வசியின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆண்டே 15 படங்களில் நடித்து தன்னை பிரபலமாய் நிலை நிறுத்திக்கொண்டார் ஊர்வசி.
ஆனால் நூறு படங்கள் நடிக்கும்வரை கூட நடிப்பில் பெரிய நாட்டம் இல்லாமல்தான் இருந்தாராம். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று இயக்குநர் கூறுவதை மட்டும்தான் செய்வாராம். பிடித்து நடிக்க மாட்டாரம். படிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்ததாம். ஷூட்டிங் சீக்கிரம் முடிங்க அந்தப் பொண்ணு போய் படிக்கணும் என இயக்குநர்கள் எல்லாம் கிண்டல் செய்வார்களாம். அந்த வயதில் அது கிண்டல் எனக்கூட ஊர்வசிக்கு தெரியாதாம். ஆனுால் கரஸில் படித்த ஊர்வசி, பட்டப்படிப்பு வரை முடித்துள்ளார். அப்போதுதான் நடிகர் கமல்ஹாசனுடன் 'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தில் நடித்துள்ளார் ஊர்வசி. அதில் முதல்நாள் சாதாரணமாக ரிகர்சல் நடந்ததாம். மறுநாள் வந்ததும் நடிக்க சொல்லி, நேராக படப்பிடிப்புக்கு சென்றுவிட்டனராம். கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டுமே, எப்படி? என்ன செய்வது? என்று ஊர்வசி கேட்டுள்ளார். நேற்று செய்ததை வைத்து நடியுங்கள் எனக் கூறியுள்ளனர். அப்போது ஊர்வசி நடித்த நடிப்பை பார்த்து நடிகர் கமல்ஹாசனே அசந்துபோய்விட்டாராம். நல்லா பண்றியே என்றாராம் கமல்.
கணவர் சிவப்பிரசாத்துடன்...
அத்துடன், 'மைக்கேல் மதன காம ராஜன்' திரைப்படத்தில் 'கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலின்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்தும் ஊர்வசி பகிர்ந்துள்ளார். பாடலில் கமல்ஹாசன் தன்னுடைய பாட்டியாக நடித்தவரின் காலில் மட்டுமே விழ வேண்டிய நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், தன் காலிலும் விழுந்துவிட்டதாகவும், அந்தச் சமயத்தில் தான் ஆச்சரியப்பட்டு, அதே உணர்வோடு துள்ளி குதித்துவிட்டதாகவும், அந்த சீன் முன்கூட்டியே திட்டமிடாத ஒரு இயல்பான நிகழ்வு என்றும் ஊர்வசி சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இவ்வாறாக நடிப்பு பயணம் சென்றுகொண்டிருக்க, தன் முதல் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை கொஞ்சம் நிறுத்திய ஊர்வசி, பின் மீண்டும் வந்து படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் உள்ளொழுக்கு படத்திற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார்.
ஊர்வசியின் திருமண வாழ்க்கை
நடிகை ஊர்வசி நடிகர் மனோஜ் கே ஜெயனை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற பெண் குழந்தை இருக்கிறது. எட்டு ஆண்டுகள்தான் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008இல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அந்த காலக்கட்டம் மிக கடினமாக இருந்தது எனவும் நேர்காணலில் பேசியுள்ளார். பிறகு நடிகை ஊர்வசி நவம்பர் 2013ல் சென்னையைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சிவப்பிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 2014இல் ஆண் குழந்தை பிறந்தது. ஊர்வசிக்கு பிள்ளைகள் என்றால் மிகப் பிடிக்குமாம். நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டாராம்.
நல்ல நண்பர்களான ஊர்வசி - கமல்ஹாசன்
கமல்ஹாசன் - ஊர்வசி
தன்னை மலையாள சினிமாவுக்கு போகச் சொல்லி அறிவுரை வழங்கியதே கமல்தான் என சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார் ஊர்வசி. கமல்ஹாசன் குறித்து பேசிய அவர், "கமல் என்னிடம் சொன்னது, நீங்க க்ளோஸா நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க. கிளாமராகவும் நடிக்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களுக்கு தமிழைக் காட்டிலும் மலையாளப் படங்கள் சரியாக இருக்கும். அங்கு நீங்கள் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய முடியும்" என்று அறிவுரை கூறியதாக தெரிவித்துள்ளார். மரியாதைக்குரிய நண்பர் கமல், அப்படியொரு நட்பு கிடைப்பது சினிமாவில் பெரிய விஷயம். திறமைக்கு மதிப்புக் கொடுப்பவர் அவர். ஊர்வசி ஒரு கணிக்க முடியாத திறமையான நடிகை என்று சொன்னதால் மட்டுமே தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டேன். அதுதான் உண்மை என கூறியுள்ளார். மேலும் கமல் குறித்து பேசிய ஊர்வசி, கமல் சார் செய்வது போல் வேறு எந்த நடிகராலும் செய்ய முடியாது. அவர் ஒரு பைத்தியம். என்ன செய்யச் சொன்னாலும் செய்வார். மாடியில் இருந்து குதிக்கச் சொன்னால் கூட குதித்துவிடுவார். ஒரு காட்சிக்காக 25 முறை ஒத்திகை பார்க்கச் சொன்னால், அத்தனை முறையும் செய்து காட்டுவார். நாமெல்லாம் ஒரு கட்டத்தில் 'டேக்' போகலாம் என்று நினைப்போம். ஆனால், அவர் அப்படிப்பட்டவர் அல்ல. இயக்குநர் ஒரு காட்சியில் நடந்து செல்லச் சொன்னால், அந்த நடையில் என்னென்ன நடிப்புத் திறனைக் காட்டலாம் என்று சிந்திப்பவர் கமல் சார் என்று தெரிவித்துள்ளார்.
அனுபவங்கள்...
தற்போது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிஸியாக இருக்கும் ஊர்வசி, தனது குடும்பத்துடன் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என மொத்தமாக 700 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். மேலும் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார் ஊர்வசி. இந்நிலையில், எப்போதும் இனித்துவிட்டால் கசப்பின் அருமை தெரியாது. வீட்டில் நாம் தங்கத்தை வைத்திருந்தாலும், அதற்கு இரும்பு பூட்டையும், ஆணியையும்தான் வெளியே வைக்கிறோம். கஷ்டங்கள் இல்லை என்றால் வாழ்க்கையை புரிந்துகொள்ளாமல் போயிருப்பேன் என்று, பேட்டியில் வாழ்க்கை அனுபவம் குறித்து பேசியுள்ளார் ஊர்வசி. சினிமா வாழ்க்கை தனக்கு எளிதாக கிடைத்துவிட்டதாகவும், துன்பம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளவே வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்தாகவும் ஊர்வசி கூறியுள்ளார்.