28 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்கோ சாந்தி! சோகத்திலிருந்து மீண்டு நடிக்க வருகிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் 1980 மற்றும் 90-களில் கவர்ச்சி நடனத்தால் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் டிஸ்கோ சாந்தி.;

Update:2025-08-19 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் 1980 மற்றும் 90-களில் கவர்ச்சி நடனத்தால் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் டிஸ்கோ சாந்தி. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இவரின் நடனம் தவிர்க்க முடியாத அம்சமாக அன்று இருந்தது. இவரது பெயரில் "டிஸ்கோ" இருந்தாலும், அவர் முறையாக நடனம் கற்றவர் அல்ல. சூழ்நிலையாலேயே நடன மங்கையாக களம் இறங்கினார். ஆனால், அவரது வசீகரமும், தனித்துவமான ஸ்டைலும் அவரை ரசிகர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சிப் புயலாக மாற்றியது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி ரசிகர்களையும் தன் நடனத்தால் ஈர்த்த அவர் தற்போது 28 வருடங்களுக்கு பிறகு 'புல்லட்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். டிஸ்கோ சாந்தி ஏன் இவ்வளவு நாட்களாக நடிக்கவில்லை? அவரது நம்பிக்கையூட்டும் திரைப்பயணம் எப்படிப்பட்டது? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

கவர்ச்சி மங்கையாக அறிமுகம்

புகழ்பெற்ற நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான டிஸ்கோ சாந்தியின் இயற்பெயர் சாந்தகுமாரி. 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி பிறந்த இவர், ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படிப்பில் சிறந்து விளங்கினார். ஆனால், விதியின் விசித்திரமான திருப்பமாக, வாள் சண்டையில் வல்லவரான இவரது தந்தை சி.எல். ஆனந்தன், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடுமையான வறுமையில் சிக்கினார். குடும்பத்தைக் காப்பாற்றவும், உடன்பிறந்த பத்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் தன் மருத்துவக் கனவைத் துறந்து சினிமா உலகில் நுழைந்தார் சாந்தி. பிற்காலத்தில் நடனத்திற்காக மட்டுமே அறியப்பட்ட இவர், தனது குடும்பத்திற்காக செய்த தியாகம் இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.


மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக அறிமுகமான சாந்தி 

சொல்லப்போனால் மலையாளத் திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுடன் கதாநாயகியாக அறிமுகமாகும் வாய்ப்புதான் முதலில் டிஸ்கோ சாந்திக்கு கிடைத்தது. ஆனால், தயாரிப்பாளர், இயக்குநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப்  படம் பாதியில் நின்றது. இப்படிப்பட்ட நிலையில் குடும்ப வறுமை, தந்தையின் உடல்நலக்குறைவு, தம்பி, தங்கைகளின் கல்விச் செலவு போன்ற பொறுப்புகள் காரணமாக கவர்ச்சி நாயகி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார் சாந்தி. சிறுவயதில் உடல் எடை அதிகம் இருந்ததால் நடனம் கற்காமல் இருந்த சாந்தி, ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாட ஒப்புக்கொண்டார். இந்த நேரம் நடன ஒத்திகையின் போது, நடன இயக்குநர் இவர் மீது கோபப்பட்டதால் மனம் நொந்துபோன சாந்தி, வைராக்கியத்துடன் நடனம் கற்றுக் கொண்டு, முறையாகப் பயிற்சி செய்து, உடல் எடையைக் குறைத்து நடனத்தில் பிரகாசிக்க துவங்கினார்.

மறக்க முடியாத படங்கள்

1985ஆம் ஆண்டு வெளியான 'வெள்ளை மனசு' திரைப்படத்தில், இயக்குநர் கோபுவின் இயக்கத்தில், டிஸ்கோ சாந்தி ஒரு சிறிய கவர்ச்சி வேடத்தில் அறிமுகமானார். அதே வருடத்தில், 'உதய கீதம்', 'சாவி', 'கெட்டி மேளம்', 'சிதம்பர ரகசியம்' போன்ற பல தமிழ்ப் படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும், நடனக் குழுவிலும் தோன்றி நடித்தார். இதே காலகட்டத்தில், மலையாளத்தில் மம்மூட்டி நடித்த 'ஆ நேரம் அல்ப்ப தூரம்' படத்திலும் நடனக் கலைஞராக அறிமுகமான இவர், அங்கும் பிரபலமானார். இப்படி ஒரே ஆண்டில் எட்டுப் படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது, 1986ஆம் ஆண்டு வெளியான 'ஊமை விழிகள்' திரைப்படம் தான். இப்படத்தில், சசிரேகா அவர்களின் குரலில் ஒலித்த 'ராத்திரி நேரத்து பூஜையில்' என்ற பாடலில் அவர் ஆடிய கவர்ச்சி நடனம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நடனத்தின் மூலம், அவர் டிஸ்கோ சாந்தி என்ற அடைமொழியோடு பிரபலமடைந்தார். இந்தப் பாடலைக் கேட்டதும் இன்றும் பலருக்கு அவரது நடனம்தான் நிச்சயம் நினைவுக்கு வரும்.


'ஊமை விழிகள்' படத்தில் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாடல் மூலம் புகழ்பெற்ற டிஸ்கோ சாந்தி

'ஊமை விழிகள்' படத்திற்குப் பிறகு, நடிகை டிஸ்கோ சாந்திக்கு தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. இதன் மூலம் அவரது குடும்பம் வறுமையிலிருந்து மீண்டது. மேலும், தனது தம்பி, தங்கைகளின் கல்விக்கும் அவர் உதவினார். பின்னர் விஜயகாந்தின் 'தர்ம தேவதை', சிவாஜி கணேசன் மற்றும் கார்த்திக் நடித்த 'ராஜ மரியாதை', கமல்ஹாசனின் 'காதல் பரிசு', பிரபுவின் 'உரிமை கீதம்' எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடனக் கலைஞராக வலம் வந்தார். அதேபோல் 'நல்லவன்', 'தர்மத்தின் தலைவன்', 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'பொங்கி வரும் காவேரி', ‘வெற்றி விழா’ போன்ற பல படங்களிலும் அவர் நடனமாடினார். இதன் மூலம் தனது நடனத் திறமையால் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடனக் கலைஞராகவும், கவர்ச்சி நடிகையாகவும் புகழ் பெற்றார். இவரது நடனத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள், 'டிஸ்கோ' என்ற அடைமொழியை சேர்த்து, 'டிஸ்கோ சாந்தி' என்று எழுதத் தொடங்கினர். பின்னாளில் இந்தப் பெயரே நிலைத்து, அவர் அனைவராலும் இந்தப் பெயராலேயே அழைக்கப்பட துவங்கினார்.

காதலும் கண்ணீரும்

டிஸ்கோ சாந்தி தமிழில் உச்சத்தில் இருந்த அதே நேரத்தில், தெலுங்கிலும் ஒரு பிரபல நடன மங்கையாக புகழ் பெற்றிருந்தார். அந்த சமயத்தில்தான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது, தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை சந்தித்தார் டிஸ்கோ சாந்தி. அப்போது இருவரும் இணைந்து நடித்த ஒரு நடனக் காட்சியின்போது, ஸ்ரீஹரியின் முதுகில் சாந்தியின் நகம் கீறிவிட்டது. இதற்காக சாந்தி மன்னிப்புக் கேட்க, ஸ்ரீஹரியோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பதிலளித்தார். இதுவே இவர்களின் முதல் சந்திப்பாக அமைந்தது. பின்னர் இந்த சந்திப்பு காதலாகவும் மாறியது. அப்படிதான் ஒருமுறை ராஜமுந்திரியில் '420' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, ஸ்ரீஹரி சாந்தியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். குடும்பச் சூழல் காரணமாக சாந்தி, தனது தாயாரிடம் பேசச் சொன்னார். ஆனால், ஸ்ரீஹரி பொறுமையின்றி ஒருநாள் சாந்தியின் குடும்பத்தார் அனைவரும் அம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாந்தியின் கழுத்தில் தாலி கட்டிவிட்டார். இவர்களின் திடீர் திருமணம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பின்னர் அதை ஏற்றுக் கொண்டனர்.


கணவர் ஸ்ரீஹரியுடன் டிஸ்கோ சாந்தி

அப்போது தங்கள் திருமணம் குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் தனித்தனியாகவே வாழ்ந்து வந்தனர். இருவரும் தங்கள் தம்பி, தங்கைகளின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, ஏழு வருடங்கள் காத்திருந்தனர். அதன்படி, 1996-ஆம் ஆண்டு இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ஶ்ரீஹரி தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இவர்களது மகள் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாள். இந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வந்த டிஸ்கோ சாந்திக்கு, அடுத்த சில வருடங்களில் அதைவிடப் பெரிய சோகமாக அவரது கணவர் ஶ்ரீஹரியின் மரணம் அமைந்தது. 2013-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்து ஶ்ரீஹரி உயிரிழந்தார். கணவரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையான சாந்தி, தனது மகன்களின் எதிர்காலத்துக்காக அப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து, தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

மீண்டும் தமிழ் சினிமாவில்

இப்படிப்பட்ட நிலையில்தான் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை டிஸ்கோ சாந்தி, தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். ‘டைரி’ பட இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி வரும் 'புல்லட்' திரைப்படத்தில், ஒரு சூனியக்காரியாக அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1997-ஆம் ஆண்டு வெளியான ‘துறைமுகம்’ திரைப்படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து, அவர் மீண்டும் திரையில் தோன்றவிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஸ்ரீஹரியுடனான திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த டிஸ்கோ சாந்தி, கணவரின் மறைவுக்குப் பின்னர் முற்றிலும் திரையுலகிலிருந்து விலகியே இருந்தார். இப்போது, மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருப்பது பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.


28 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் லாரன்ஸின் 'புல்லட்' படத்தில் சூனியக்காரி தோற்றத்தில் சாந்தி 

ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ள 'புல்லட்', ஒரு அமானுஷ்ய கதைக்களத்தை கொண்ட திரைப்படமாகும். இதில் வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, 'டிமான்டி காலனி' மற்றும் 'டைரி' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், வடிவேலு விமல்ராஜ் படத்தொகுப்பையும், பேண்ட்டம் பிரதீப் சண்டை காட்சிகளையும் கையாண்டுள்ளனர். சமீபத்தில், விஷால், எஸ்.ஜே. சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் இப்படத்தின் தமிழ் டீசரை வெளியிட்டனர். அதேபோல, தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. இதன் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள அதேசமயம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை டிஸ்கோ சாந்தி இந்தப் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்