கணவர் மறைவு, மகன் கைது, சொத்து அபகரிப்பு - பல துன்பங்களை சந்தித்த ஜெயசித்ரா!
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் பலரின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜெயசித்ரா.;
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் பலரின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜெயசித்ரா. துறுதுறுப்பான குரல், துள்ளலான உடல்மொழி மற்றும் துடுக்குத்தனமான நடிப்பு என பன்முகத்திறமைகளை கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து கவனம் பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்கள் தொடங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, விஜய், அஜித் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் ஜெயசித்ரா, இன்று (செப்டம்பர் 9) தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கலைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை, வெற்றிகள், சவால்கள் மற்றும் தற்போதைய வாழ்க்கைச் சூழல் குறித்து இப்பதிவில் விரிவாகக் காண்போம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1957 செப்டம்பர் 9 ஆம் தேதி, சென்னையில் மகேந்திரன் மற்றும் ஜெயஸ்ரீ தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் ஜெயசித்ரா. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் லட்சுமி ரோகிணி தேவி. இவரது தந்தை ஒரு கால்நடை மருத்துவர், தாய் ஜெயஸ்ரீ (தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்). இந்தக் கலைச் சூழல் ஜெயசித்ராவிற்கு சிறுவயதிலேயே கலைகள் மீது அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தாயுடன் படப்பிடிப்புத் தளங்களுக்கு சென்று வந்ததால், நடிப்பு, நடனம் போன்ற கலைகளின் மீது அவருக்கு நாட்டம் அதிகமானது. தனது மகளின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவரது தாய், பரதநாட்டியம், குச்சிப்புடி போன்ற நடனங்களில் முறையான பயிற்சி அளித்தார். இந்த நடனப் பயிற்சி, அவருக்குத் திரைத் துறையில் முதல் அடியை எடுத்து வைக்க உதவியது. 1967-ல், தனது 10வது வயதில், தெலுங்குத் திரைப்படமான ‘பக்த போதனா’-வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். படிப்பிலும் நடனத்திலும் சிறந்து விளங்கிய ஜெயசித்ரா, 11 வயதில் குச்சிப்புடி நடன அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்து, பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
பக்த போதனா மற்றும் பீடாலா பாட்டுலு படக் காட்சிகள்
பின்னர் 1972-ல், தெலுங்குத் திரைப்பட இயக்குநர் பி. விட்டலாச்சாரியாரின் ‘பீடாலா பாட்டுலு’ படத்தில் நாகேஸ்வர ராவுக்கு ஜோடியாக நடிக்க ஜெயசித்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரது இளமையும் துறுதுறுப்பும் கதாநாயகி பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்காது என்று கூறி, அந்த வாய்ப்பு கை நழுவிப் போனது. ஆனால், இதுவே தமிழ் திரையுலகிற்கு அவரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியது. விட்டலாச்சாரியாரின் நண்பரான இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தன் ‘குறத்தி மகன்’ படத்திற்கு ஒரு புதுமுகத்தை தேடி வந்தார். ஜெயசித்ராவை பற்றி அறிந்த அவர், அவரை பள்ளிக்கு சென்று சந்தித்து, தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
பாம்புடன் அச்சமின்றி நடித்து அசத்தல்
1972-ல் வெளியான ‘குறத்தி மகன்’ படத்தில், ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா ஆகியோருடன் இணைந்து கதாநாயகியாக அறிமுகமானார் ஜெயசித்ரா. இதில் மாஸ்டர் ஸ்ரீதருக்கு ஜோடியாக நடித்திருந்த இவர், முதல் படத்திலேயே தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் அதே ஆண்டில் ‘வாழையடி வாழை’ படத்திலும் நடித்து புகழ் பெற்ற ஜெயசித்ரா, 1973-ல் கே.பாலச்சந்தரின் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ஏ.சி.திருலோகசந்தரின் ‘பாரத விலாஸ்’ எனப் பல படங்களில் நடித்து, குறுகிய காலத்தில் உச்ச நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில், புஷ்பா என்ற துடுக்குத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து, தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தார். பிறகு 1974-ல், ஒரே ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து 26 படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிலேயே யாரும் செய்யாத ஒரு சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையின் மூலம், அவர் ஒரு திறமையான நடிகை மற்றும் கடின உழைப்பாளி என்பதை நிரூபித்தார்.
'சொல்லத்தான் நினைக்கிறேன்' மற்றும் 'வெள்ளிக்கிழமை விரதம்' படங்களில் ஜெயசித்ரா
குறிப்பாக சிவகுமார், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரவிச்சந்திரன், விஜயகுமார், ரஜினிகாந்த் என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் அவர் நடித்தாலும், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ திரைப்படம் அவருக்குப் பெண் ரசிகர்களிடையே பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. நாகதோஷம் உள்ள பெண்ணாக, பாம்புடன் எந்தவித பயமும் இல்லாமல் நடித்த அவரது அசாத்தியமான திறமை அனைவரையும் வியக்க வைத்தது. அதிலும் அந்தப் படத்தில் பாம்புடன் அவர் நடித்த காட்சியை காண்பதற்காகவே, ரசிகர்கள் கூட்டம் திரையரங்கு நோக்கி அலை மோதியதோடு, படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே காலகட்டத்தில், எம்.ஜி.ஆர் உடன் ‘நவரத்தினம்’ படத்திலும், சிவாஜியுடன் ‘பாரத விலாஸ்’, ‘சத்யம்’ போன்ற படங்களிலும் நடித்து, திரையுலக ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் பெருமையைப் பெற்றார். இந்த அனுபவம் அவரது கலை பயணத்தை மேலும் மெருகேற்றியது.
திரையில் மறுபிரவேசம்
80களின் தொடக்கத்தில், கலை உலகில் உச்சத்தில் இருந்த ஜெயசித்ரா, சில காதல் கிசு கிசுக்களில் சிக்கி தவித்து வந்த சமயத்தில்தான் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது திருமணம் குறித்து சிந்திக்கத் தொடங்கினார். அப்போது, அவரது பெற்றோர், கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ் என்பவரை ஜெயசித்ராவுக்கு மணமகனாக தேர்ந்தெடுத்தனர். கணேஷ் ஏற்கனவே ஜெயசித்ராவின் குடும்பத்தினருக்கு அறிமுகமானவர் என்பதால், இத்திருமணத்திற்கு ஜெயசித்ரா சம்மதம் தெரிவித்தார். 1983-ஆம் ஆண்டு, திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், சென்னையில் ஜெயசித்ரா மற்றும் கணேஷ் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்குச் சற்று முன்பு, ஜெயசித்ராவின் 100-வது படமான 'நாயக்கரின் மகள்' வெளியானது. சத்யராஜ் உடன் அவர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு, ஜெயசித்ரா திரைப்படங்களில் நடிப்பதை சிறிது குறைத்துக் கொண்டு, தன் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
'நாயக்கரின் மகள்' பட போஸ்டர் மற்றும் 'அக்னி நட்சத்திரம்' கமலாவாக ஜெயசித்ரா
பின்னர் கணவர் கணேஷ் அவர்களின் முழு ஆதரவுடன், 1985-ல் மீண்டும் நடிப்பு உலகிற்குத் திரும்பினார். இந்தக் காலகட்டத்தில், அவர் கதாநாயகி பாத்திரங்களிலிருந்து விலகி, அக்கா, அண்ணி, அம்மா, மாமியார் போன்ற துணை கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தினார். அதில் முதலாவதாக இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ’அக்னி நட்சத்திரம்’ படத்தில், கார்த்திக்கிற்கு அம்மாவாக, கர்ப்பமாக இருந்தபோதே சிறப்பாக நடித்து, தனது கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்தை தொடங்கினார். பிறகு இயக்குநர் கே. பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் ரகுமானின் மாமியாராக, துறுதுறுப்பான நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் அவர் பேசிய தமிழ் தெலுங்கு கலந்த வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த கதாபாத்திரம், அவரது நடிப்புத் திறனின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியதோடு தொடர்ந்து பல பட வாய்ப்புகளையும் பெற்றுத்தந்தது.
பன்முக திறமைசாலி
90களுக்கு பிறகு நடிகையாக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர் என பல பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார் ஜெயசித்ரா. அதில் 1991-ல், ‘புதிய ராகம்’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கினார். அதில் தனது மகன் அம்ரிஷை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். மகன் வளர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, 2010-ல், ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, தனது மகனை கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தினார். துரதிஷ்டவசமாக, அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தனது மகனை ஒரு இசையமைப்பாளராக ஆக்க வேண்டும் என்ற அவரது கனவு கைவிடப்படவில்லை. அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக, அவரது மகன் அம்ரிஷ், ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்டை சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசையமைத்து, தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது இசைப்பயணம் தொடர்ந்து, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’ போன்ற பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தனது மகனின் இந்த வெற்றி, ஜெயசித்ராவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இருந்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் இன்பங்களையும், துன்பங்களையும் மாறி மாறிச் சந்தித்தவர்தான் ஜெயசித்ரா.
மகன் அம்ரிஷின் திருமணத்தில் ஜெயசித்ரா
2016-ல், தனது மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆனால், 2020-ல் தனது கணவர் கணேஷ் திடீரென காலமானபோது, அவரது வாழ்க்கை பெரும் சோகத்தில் மூழ்கியது. கணவரின் இழப்பிலிருந்து மீள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதற்குப் பிறகு, 2021-ல் தனது மகன் மீது இரிடியம் மோசடி வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட சம்பவம், அவருக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்த சோதனைகளுக்கு மத்தியிலும், தனது உழைப்பால் ஈட்டிய சொத்துக்களை மீட்டெடுக்க நீதிமன்றத்தில் போராடி வெற்றி கண்டார். சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு விட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு, வாடகைதாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போது, 16 ஆண்டுகள் போராடி அந்த வீட்டை மீட்டெடுத்தார். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், கலையின் மீதான அவரது ஆர்வம் மட்டும் குறையவில்லை. 64 வயதைக் கடந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், செம்பியன் மாதேவியின் அக்கா பெரிய பிராட்டியாக நடித்து, மீண்டும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். தற்போது, சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் ஜெயசித்ரா, தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இப்படி தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் இடம் பெற்று, இன்றும் ஒரு பண்பட்ட கலைஞராகவும், வலுவான பெண்மணியாகவும் வாழும் ஜெயசித்ராவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறது ராணி ஆன்லைன்.