கணவரைப் பிரிந்த நடிகை லெட்சுமி! நடிகர் மோகனை மறுமணம் செய்கிறார்?
நடிகை லெட்சுமி இப்பொழுது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மோகன் என்ற புதுமுகத்தை லெட்சுமி மறுமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.;
(14-04-1974 தேதியிட்டு ராணி இதழில் வெளியானது)
நடிகை லெட்சுமி இப்பொழுது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மோகன் என்ற புதுமுகத்தை லெட்சுமி மறுமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. அதைப் பற்றியெல்லாம் லெட்சுமியே இந்தக் கட்டுரையில் கூறுகிறார்.
வர வர என் நடிப்பு மெருகு ஏறிக் கொண்டு வருகிறது என்று இப்பொழுது ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். "உங்கள் நடிப்பு இயற்கையாக இருக்கிறது", "சோகக் காட்சியில் உங்களை யாருமே மிஞ்ச முடியாது" என்றெல்லாம் எனக்கு ரசிகர்கள் நாள்தோறும் கடிதம் எழுதுகிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? இப்பொழுதெல்லாம் நான் நடிப்பதே இல்லை!
கண்ணீர்
படங்களில் நடிக்கும்பொழுது, அழவேண்டிய காட்சிகளில் "கிளிசரின்" என்ற திரவத்தை கண்ணில் விட்டுக் கொள்வார்கள். உடனே மளமளவென்று கண்ணீர் பெருகி வடியும். ஆனால், நான் இந்தக் "கிளிசரின்" பயன்படுத்துவது இல்லை. இயற்கையாகவே எனக்கு "பொலபொல" என கண்ணீர் கொட்டுகிறது!!
இருமாறுபட்ட தோற்றங்களில் நடிகை லெட்சுமி
சோகம்
எனது வாழ்க்கையே சோகமாகிவிட்டது. அதனால் எனது சோக நடிப்பு இயற்கையாக இருக்கிறது! என் வாழ்க்கையை நினைத்துக் கொண்டால், என் கண்கள் குளம் ஆகின்றன. அதனால்தான் எனக்கு "கிளிசரின்" தேவைப்படுவது இல்லை. என் முகத்தில் ஒருவித சோகம் படர்ந்திருப்பதை படங்களில் கவனித்தாலே தெரியுமே!
குழந்தைக்காக!
என் குழந்தைக்காகத்தான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இல்லாவிட்டால், என்றோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருப்பேன். எனது வாழ்க்கை அவ்வளவு துயரமாகிவிட்டது!
என்ன காரணம்?
எனது வாழ்க்கையில் இப்படி "இருள்" அடைந்து போக என்ன காரணம்? எனது இல்லறம் சரியாக அமையாததுதான் அதற்கும் காரணம். எனது இல்லறத்தை நானாகத் தேடி அமைத்துக் கொண்டேன்! ஆனால், அது எனக்கு இன்பமாக அமையவில்லை. திருமணமான சில ஆண்டுகளிலேயே எனது இல்லறம் கலையத் தொடங்கிவிட்டது! இப்பொழுது நெருப்பாக எரிகிறது. நானும் பாஸ்கரும் சில ஆண்டுக்கு முன்பே பிரிந்து விட்டோம். தனித்தனியாக இருந்து வருகிறோம். இந்தப் பிரிவு இப்பொழுதுதான் வெளி உலகுக்குத் தெரிந்து, நிரந்தரமாகவும் ஆகிவிட்டது.
சட்டக்காரி மலையாள படத்தில் நடிகை லெட்சுமி
நண்பர்கள்
பாஸ்கருடன் எனக்கு என்ன சண்டை என்று கேட்கிறீர்களா? குடும்பத்தில் ஆயிரம் இருக்கும்! வீட்டுக்கு வீடு வாசல்படி! குடும்பத்துக்குக் குடும்பம் சண்டை. ஆனால் அதை வெளியில் சொல்வது ஒரு நல்ல குடும்பப் பெண்ணுக்கு அடையாளம் அல்ல! இன்னும் சொன்னால், நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளவில்லை. சமாதானமாகப் பிரிந்து கொண்டோம். "நீ மறுமணம் வேண்டுமானால் செய்துகொள்" என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் பிரிந்தோம். இப்பொழுதுகூட நானும் பாஸ்கரும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம்.
சேருவார்களா?
இனியும் நாங்கள் நண்பர்களாக இருக்க முடியும். ஆனால், கணவன்-மனைவியாக சேர்ந்து வாழ முடியாது. நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை. அதனால்தான் எனக்கு என்று தனி வீடுகூட நான் கட்டிக் கொண்டுவிட்டேன்.
'சட்டக்காரி' படத்தில் நடிகர் மோகனுடன் மாறுபட்ட தோற்றங்களில் லெட்சுமி
மோகன்
நான் தனித்து வாழ்வதைத் தெரிந்துகொண்டு, சிலர் ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். மோகன் என்ற புதுமுகத்தை நான் மறுமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதுதான், அந்த வதந்தி!
"சட்டைக்காரி"
"சட்டைக்காரி" என்ற மலையாளப் படத்தில் நானும் மோகனும் இப்பொழுது சேர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறோம். அந்த முறையில் நாங்கள் இருவரும் நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இடையில் காதல் என்று கூறுவது சுத்தமான கட்டுக்கதை! நான் சூடுபட்ட பூனை! ஒருமுறை காதலித்து சூடுபட்டது போதாதா?
மறுமணம்
நான் மறுமணம் செய்து கொள்வதாக இல்லை. என் குழந்தைக்காகவே நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். அதற்கு மறுமணம் தேவையா, என்ன?